Published : 18 Nov 2019 01:17 PM
Last Updated : 18 Nov 2019 01:17 PM

எஸ்ஐபி தொகையை ஏன் அதிகரிக்க வேண்டும்?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆலோசனை கூறும் நிதி ஆலோசகர்கள் பெரும்பாலும் சிறு முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்தும் ஒரு விஷயம் எஸ்ஐபி எனப்படும் மாதாந்திர தொடர் சேமிப்பு திட்டம் குறித்துதான். பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை நிலவும் சூழலில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து சீரான சேமிப்பை மேற்கொள்ள சிறந்ததாக பரிந்துரைப்பதும் எஸ்ஐபி-யைத்தான். பரஸ்பர நிதித் திட்டங்களில் எஸ்ஐபி எனப்படும் தொடர் சேமிப்புத் திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. அதேசமயம் உங்களது சம்பளம் உயரும்போது நீங்கள் செலுத்தும் மாதாந்திர தவணைத் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என்பதுதான்.

ஒரு குறிப்பிட்ட தொகையை எஸ்ஐபி-யில் தொடர்ந்து சேமிப்பது என்பது ஓய்வுக்காலத்தில் உங்களுக்கு தேவைப்படும் நிதியில் மிகக்குறுகிய அளவுதான். அதேபோல உங்களது சேமிப்பு திட்டங்களில் எஸ்ஐபி ஒதுக்கீடும் மிகக் குறைவானதே. பணவீக்கத்தை கவனத்தில் கொண்டு நிதிசேமிப்பு இலக்கை திட்டமிடுவது மிகவும் முக்கியமானதாகும். ஓய்வு காலத்தில் நீங்கள் பெற நினைக்கும் தொகை ரூ.1 கோடி என்று வைத்துக் கொள்வோம். இப்போது நினைத்தால் அது மிகப் பெரிய தொகையாகத் தெரியும். ஆனால், எஸ்ஐபி மூலம் அந்த இலக்கை நிச்சயம் அடைய முடியும்.

நீங்கள் இளைஞராக இருப்பின் ஓய்வு பெறுவதற்கு நீண்ட காலம் இருக்கும். எனவே, எஸ்ஐபி இலக்கை நிர்ணயித்து அதன்படி சேமிக்கலாம். ஆனால் நீங்கள் ஓய்வு பெறும்போது ரூ.1 கோடி என்பது இப்போது இருக்கும் அளவுக்கு பெரிய தொகையாக இருக்காது. அதேபோல இப்போது இருக்கும் அளவுக்கு அதற்கு மதிப்பும் இருக்காது.

எனவே குறிப்பிட்ட தொகை சேர்வதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் உங்கள் எஸ்ஐபி தொகையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தற்போது 20 வயது முதல் 30 வயதுப் பிரிவில் இருப்பவர்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீட்டுத் திட்டங்களில் குருவி சேர்ப்பதைப் போல சேர்த்து பயன் பெறலாம்.

தொடக்கத்தில் நீங்கள் எஸ்ஐபி திட்டத்தில் சேரும்போது உங்களது சேமிப்பு பங்களிப்பு மிகக் குறைந்த அளவாகத்தான் இருக்கும். உங்களது வருமானம் உயரும்போது எஸ்ஐபி அளவையும் அதிகரிக்க வேண்டும். உதாரணத்துக்கு உங்களுக்கு 23 வயது ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஓய்வு பெறும்போது ரூ.60 லட்சத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றும், முக்கியமான இடங்களை சுற்றிப் பார்க்க ரூ.10 லட்சம் தேவை என்றும் திட்டமிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு உள்ள நிதி திட்டமிடல் 2 மட்டுமே. உங்களது நிதி தேவையை பூர்த்தி செய்ய ஒவ்வொரு மாதமும் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்த வழியாக இருக்கும்.

சுற்றுலா செல்வதற்கு நீங்கள் மாதந்தோறும் ஒதுக்கும் தொகை ரூ.2 ஆயிரம். வீடு வாங்க நீங்கள் ஒதுக்கும் தொகை மாதம் ரூ.5 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம். இதே அளவு தொகையை மாதந்தோறும் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேற்கொண்டால் உங்கள் இலக்கை எட்ட முடியாது. ஆண்டுதோறும் இந்த தொகையை அதிகரிக்க வேண்டும்.

மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் சேமித்திருந்தால் 10 ஆண்டுக்குப் பிறகு உங்களது சேமிப்பு ரூ.4.13 லட்சமாக இருக்கும். அதேபோல 20 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு வாங்க சேமித்த தொகை ரூ.38.28 லட்சமாக இருக்கும். உங்களது நிதி இலக்கை அதாவது நிதி தேவை மிகவும் அதிகம் என்பதை உணர வேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்கு வருமானம் அதிகரிக்கும்போது ஒதுக்கீட்டு தொகையையும் அதிகரித்திருந்தால் மட்டுமே எட்ட முடியும்.

ஒருவேளை ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர சேமிப்பு தொகையை ரூ.500 அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம். அதாவது உங்கள் சேமிப்பில் 10 சதவீதம் கூடுதல் சுற்றுலா செல்வதற்கு நீங்கள் ஒதுக்கிய தொகை 10-வது ஆண்டு முடிவில் ரூ.8 லட்சமாக இருக்கும். அதேபோல 20 ஆண்டுக்குப் பிறகு வீடு வாங்க சேமித்த தொகை ரூ.62.75 லட்சமாக இருக்கும். நீங்கள் நிர்ணயித்த இலக்கை ஓரளவு எட்டியிருப்பீர்கள்.

சுற்றுலாவுக்கு நீங்கள் ஒதுக்கிய தொகையை விட இரண்டு மடங்கு கூடுதல் தொகையை வீடு வாங்க ஒதுக்கினீர்கள். அதேசமயம் வீடு வாங்க நீங்கள் செலுத்தும் ஆண்டுகளும் அதிகம். இதனால் நீடித்த முதலீடு மூலம் இலக்கை ஓரளவு எட்ட முடிந்தது.

பரஸ்பர நிதித் திட்டங்களில் மாதாந்திர தொடர் சேமிப்பு, பங்குச் சந்தையில் எத்தகைய சரிவு ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. பங்குச் சந்தையில் 10 சதவீத அளவுக்கு சரிவு ஏற்பட்டாலும் அல்லது பங்குச் சந்தையில் தேக்க நிலை 2 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை நீடித்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே ஆண்டுதோறும் எஸ்ஐபி அளவை அதிகரிப்பது உங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.

பெரும்பாலானவர்கள் தங்களது சேமிப்பை தொடர் சேமிப்பு திட்டங்கள் மூலம் வங்கிகளில் வைத்திருப்பர். சிலர் நிரந்தர சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வர். மற்ற சிலரோ பிஎஃப், கடன் பத்திரங்கள் மற்றும் அரசு நிர்வகிக்கும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வர். இதுபோன்ற முதலீடுகளும் தேவைதான்.

ஆனால் எஸ்ஐபி-யில் முதலீடு செய்வது என்பதையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உங்களது நிதி இலக்கை எட்டுவதற்கு வருமானம் அதிகரிக்கும்போது மட்டுமின்றி ஆண்டுதோறும் சேமிப்பு அளவை அதிகரிக்க வேண்டும்.

- விவேக் ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x