Published : 18 Nov 2019 01:16 PM
Last Updated : 18 Nov 2019 01:16 PM

எண்ணித் துணிக: முதலீடு தருமா? மொட்டை அடிக்குமா?

பெரிய பட்ஜெட் அல்லது டாப் நடிகர் படம் ரிலீஸ் ஆகும் நேரம் பார்த்திருப்பீர்கள். கேள்விப்படாத ஒரு துக்கடா துணை இயக்குனர் திடீரென்று எங்கிருந்தோ கிளம்பி `என் கதையை திருடி எடுத்திருக்கிறார்கள்’ என்று கேஸ் போடுவார். பல படங்களில் கதையே இல்லையே, இல்லாத கதையை எப்படி திருட முடியும் என்ற கேள்வியை விடுங்கள்.

இப்படிப்பட்ட தரமான சம்பவங்கள் சினிமாவில் மட்டுமல்ல, பிசினஸ் ஸ்டார்ட் அப்களிலும் நிறைய நடக்கும். பிசினஸ் ஐடியா முதல் கஸ்டமர் டேட்டா வரை பல மேட்டர்கள் திருடப்படலாம், திருடப்படுகிறது, திருடப்படும். இதனால் பல ஸ்டார்ட் அப் ஓனர்கள் வெற்றி படிக்கட்டுகளில் ஏறுவதை விட நியாயம் கேட்டு கோர்ட் படிக்கட்டுகளில்தான் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டார்ட் அப்புக்கு முதலீடு பெறும் வழியை தேடி கொண்டிருப்பீர்கள். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இருப்பீர்கள். அந்நேரம் முதலீடு செய்கிறேன், முடிந்தால் உங்கள் கம்பெனியையே வாங்குகிறேன் என்று உங்கள் முன் வந்து நிற்கும் ஏதாவது ஒரு நிறுவனம். வந்தவரை குல சாமியாய் கும்பிட்டு அவருக்கு கோயில் கட்டி படாதபாடுபட்டு சேர்த்து வைத்த கம்பெனி விவரங்கள், கஸ்டமர் டேட்டா, மார்க்கெட் டேட்டா போன்றவற்றை படையலாக படைப்பீர்கள். விலைமதிப்பிலாத அந்த விவரங்களை அந்நிறுவனம் சுருட்டி தங்கள் சொந்த தொழிலுக்கு பயன்படுத்தும்.

அவர்களிடம் முதலீடும் இல்லை, முதலில் இருந்தே உங்களிடம் ஈடுபாடும் இல்லை என்பது பின்னால்தான் புரியும். கை காசில் கைத்தொழிலை கயவர்களுக்கு கிடா வெட்டி கொடுத்துவிட்டோமே என்று கண்ணீர் வரும். சினிமா முதல் ஸ்டார்ட் அப் வரை திருடுவது பலருக்கு கை வந்த கலை. காப்புரிமை என்பதே நம் நாட்டில் காப்பியடிக்கும் உரிமைதானே. நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். பிசினஸில் கூட இப்படி நடக்குமா என்று ஆச்சரியப்பட வேண்டாம். ஒரு பானை சோற்றுக்கு கோர்ட்டில் நடக்கும் ஒரு கேஸ் பதம்.

பத்திரிகையில் அடிபடும் செய்திதான் என்றாலும் பெயர் சொன்னால் அடிக்க வருவார்கள். ரொம்ப கேட்டால் ‘சப் ஜூடிஸ்’ மேட்டர், சப்ஜாடாய் மூடு என்பார்கள். அதனால் அந்த திருட்டு கம்பெனியின் பெயரை மறைத்து விஷயத்தை மட்டும் விளக்குகிறேன்.

அக்கம்பெனிக்கு ‘அகிஷ்டு’ என்று பெயர் வைப்போம். பெங்களூரில் பல கிளைகளுடன் செயல்பட்டு வந்த ஒரு ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் அப்பிடம் முதலீடு செய்கிறேன் என்று சென்றார்கள். ‘ஆஹா வந்தார்கள் ஆபத்பாந்தவர்கள்’ என்று ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் அப்பும் கர்ம சிரத்தையாக அகிஷ்டு கம்பெனியை சந்தித்து அவர்கள் சரி பார்க்க கேட்டார்கள் என்று தங்கள் கிளைகளுக்கு வரும் கஸ்டர்மர் கணக்கு, செலவு வகைகள், தங்கள் பெர்ஃபாமென்ஸ் மெட்ரிக் போன்ற பல அரிய டேட்டாவை பகிர்ந்துகொண்டது.

பல நாள் பேச்சு வார்த்தை பயனளிக்காமல் அகிஷ்டு கம்பெனி விலகியது. நம் தலையெழுத்து அவ்வளவுதான் என்று பெங்களூர் ரெஸ்டாரண்ட் விட்டுவிட்டது. ஆனால் சில நாட்களிலேயே பெங்களூரில் பல இடங்களில் அகிஷ்டு கம்பெனி ஒரு புதிய ரெஸ்டாரண்ட் செயினை தொடங்கியபோதுதான் புரிந்தது. தங்கள் டேட்டாவைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று. நேரத்தை செலவழித்து, உழைப்பை கொட்டி, மூளையை மூலதனமாக்கி கஷ்டப்பட்டு பெற்ற டேட்டாவை, அகிஷ்டு கம்பெனி அலேக்காக லவுட்டி, அதைக்கொண்டு தொழில் தொடங்கி தங்களுக்கே போட்டியாய் வந்திருக்கும் குள்ளநரித்தனம் புரிந்தது. பெங்களூர் கோர்ட்டில் கேஸ் போட்டது.

‘ஆ’ என்று பதறாதீர்கள். இந்த அகிஷ்டு கம்பெனி இவர்களை மட்டும் ஏமாற்றவில்லை. தங்கள் தொழிலோடு ஏமாற்றுவதையும் ஒரு தொழிலாகவே செய்து வருவது வேறு சில ஸ்டார்ட் அப்ஸ் போட்ட கேஸ்களிலிருந்து தெரிந்தது. ஒன்றல்ல இரண்டல்ல, ஆறு ஏழு ஸ்டார்ட் அப்புக்கள் இதே அகிஷ்டு கம்பெனி மீது கேஸ் போட்டிருக்கின்றன. எல்லாம் ஒரே ஒப்பாரிதான். எங்கள் பிசினஸ் ஐடியா, டேட்டா, புரொப்ரைட்டரி தகவல்கள் முதலியவற்றை முதலீடு செய்கிறேன், மொத்தமாய் வாங்குகிறேன் என்று கேட்டுப் பெற்று மொத்தமாய் மடக்கி மூலதனமாக்கி தாங்களே புது தொழில் தொடங்கி அவர்களுக்கே போட்டியாய் புகுந்திருக்கிறார்கள். சும்மா சொல்லக் கூடாது, ஆறேழு கம்பெனிகள் தலையில் அரிய வகை அமேசான் மூலிகையை அட்டகாசமாய் அரைத்திருக்கிறது அகிஷ்டு கம்பெனி.

ரெஸ்டாரண்ட், ஜிம், மருத்துவத் துறை என்று ஒன்றை விட்டுவைக்கவில்லை இவர்கள். அதிலும் ஒரு ஊரில் மட்டுமல்ல, பல ஊர்களுக்கு சென்று அங்குள்ள ஸ்டார்ட் அப்புகளை சந்தித்து முதலீடு போடுகிறேன் என்று டேட்டாவை முக்காடு போடாமல் மொத்தமாய் மொட்டையடித்திருக்கிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர்! கேஸ் நடக்கிறது. நடந்துகொண்டே இருக்கும். அதை விடுங்கள். உங்கள் உயிரை, உணர்வை, உழைப்பை கொட்டி கனவுகளை கண்ணிலும் வலிகளை நெஞ்சிலும் சுமந்து பிரசவ வலியோடு பெற்றெடுக்கும் உங்கள் ஆசை ஸ்டார்ட் அப்பை அள்ளிச் செல்ல இதுபோன்ற பிள்ளை பிடிக்கும் பேர்வழிகள் பேயாய் அலைகிறார்கள். அப்பேர்பட்ட கம்பெனிகள் பெயரை சொன்னால் அசந்து போவீர்கள்.

இந்திய பொருளாதாரத்தின் சக்சஸ் கதைகள் என்று நினைத்த இவைகளுமா என்று அதிர்ச்சியாவீர்கள். அவர்கள் செய்வதை செய்து கொண்டுதான் இருப்பார்கள். நீங்கள் தான் உஷாராய் இருக்க வேண்டும். ஒரு பக்கம் முதலீடும் வேண்டும். இன்னொரு பக்கம் இது போன்ற முதலைகளிடம் மாட்டாமல் வேறு இருக்க வேண்டும். கஷ்டம்தான். புரிகிறது. உங்கள் ஸ்டார்ட் அப்பை பதவிசாய் பக்குவமாய் பாதுகாக்கும் வழிகள் பற்றி அடுத்த வாரம் பேசுவோம். அது வரை கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருங்கள்!

- சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x