Published : 17 Nov 2019 09:59 AM
Last Updated : 17 Nov 2019 09:59 AM

முகம் நூறு: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

சிலரிடம் பேசினால் இந்தச் சமூகம் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மையிருட்டுக்குள் நின்றாலும் வெளிச்சம் தூரப்புள்ளியாய் மின்னும். மஞ்சுளாவிடம் பேசிவிட்டுத் திரும்பும்போது அப்படித்தான் தோன்றுகிறது. ‘இந்திய மாதர் தேசிய சம்மேளன’த்தின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மஞ்சுளா, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’யின் மாநிலக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.

மஞ்சுளாவின் தோற்றம் அவர் சார்ந்தி ருக்கும் கட்சியைப் போல எளிமையாக இருக்கிறது. பேச்சோ அவர்களுடைய கொள்கையைப் போல வலுவுடன் இருக்கிறது.

தற்போது கல்லூரியில் படிக்கும் மகன் இனியன் கைக்குழந்தையாக இருந்தபோது அரசியல் செயல்பாட்டுக்குள் நுழைந்தவர் மஞ்சுளா. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு ‘அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் கழகம்’ சார்பாக 98-ல் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதுதான் தன் முதல் களப் போராட்டம் எனச் சொல்கிறார் மஞ்சுளா.

தந்தையின் வழியில்

இவருடைய அப்பா இல.கோவிந்தசாமி தீவிர பொதுவுடைமை இயக்கவாதி. அப்பாவுக்கும் அம்மா சகுந்தலாவுக்கும் நடந்தது சடங்கு மறுப்புத் திருமணம் மட்டுமல்ல; புரட்சிகரத் திருமணமும்கூட எனச் சொல்கிறார் மஞ்சுளா. காரணம் அம்மா, அப்பாவைவிடப் பெரியவர். “சென்னைதான் எங்க பூர்விகம். அப்பா முழுநேரக் கட்சி ஊழியராக இருந்ததால் என்னையும் என் இரு தங்கைகளையும் அம்மாதான் வளர்த்தார். கூலி வேலைக்குத்தான் சென்றார். அதனால், நான் ஓரளவு வளர்ந்ததும் வேலைக்குப் போயாக வேண்டிய கட்டாயம். பத்தாவது முடித்ததுமே ஐ.டி.ஐ. படித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்” என்று சொல்லும் மஞ்சுளா, அங்கே ஐந்து ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார்.

பிறகு, திருமணம் முடிந்து கணவர் ராமசாமியின் ஊரான காரைக்குடிக்குச் சென்றார். பொதுவுடைமைக் கருத்துகளைப் பேசும் அப்பா, அவரைச் சந்திக்க வரும் இயக்கத் தோழர்கள் எனப் பரபரப்பான வாழ்க்கைக்குப் பழகியவருக்கு காரைக் குடியின் சூழல் அந்நியமாக இருந்தது. சாலையில் கணவருடன் இயல்பாகக் கைகோத்து நடப்பதுகூடச் சாத்தியப் படாத நிலை அவரை மீண்டும்

சென்னைக்கே அழைத்துவந்தது. சென்னைவாசம் மஞ்சுளாவைப் பொதுப்பணிகளை நோக்கி ஈர்த்தது. தேசிய அளவில் செயல்பட்டுவரும் பெண்கள் கழகத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர் 2003-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பில் இணைந்தார்.

மக்களுக்கான போராட்டம்

வேலையின்மைக்கு எதிரான பிரச்சார இயக்கம், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தார். வெறும் கருத்து முழக்கமாக இல்லாமல் தெருமுனைக் கூட்டம், வீதி நாடகம் என மக்களுக்கான மொழியிலும் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தன் இயக்கத்தினருடன் இணைந்து முன்னெடுத்தார். தான் வசிக்கும் அம்பத்தூர் பகுதியில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் அதிகம் என்பதால் அவற்றில் பணிபுரியும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டங்களில் பங்கேற்றார்.

“வேலைக்குப் போகும் பெண்களிடம் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றிச் சொன்னால் ஆச்சரியப்படுவார்கள். இவ்வளவு நாட்களாக இதெல்லாம் தெரியாமல் இருந்துவிட்டோமே என்று சொல்வார்கள். ஆனால், தினசரி வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் அவர்களை அமைப்பாகத் திரட்டுவதில் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் அப்படி இருக்கும் நிலையை மாற்றுவதற்காகத்தானே இந்தப் போராட்டங்கள் எல்லாம். மக்களும் இப்போது ஓரளவு விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். சமூக அவலங்களைச் சகித்துக்கொண்டு அமைதியாக இருப்பதைவிட, இப்படிக் குரல்கொடுக்கலாம். அந்தச் சத்தம் நிச்சயம் சமூகத்தைத் தட்டியெழுப்பும்” என்று சொல்லும் மஞ்சுளா, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் பெண்களைத் திரட்டி நடத்திய போராட்டங்கள் அவற்றின் இலக்கை அடைந்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

‘டாஸ்மாக்’ யாருக்கு நல்லது?

“குடிப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா எனச் சொல்கிறவர்கள், குடியால் சீரழிந்து கிடக்கிற குடும்பங்களைப் பற்றி யோசிப்பதில்லை. குடிநோயாளிகள் தங்களை அழித்துக்கொள்வதுடன் குடும்பத்தின் அமைதியைச் சிதைத்துப் பெரும் சுமையாக மாறுகிறார்கள். சம்பளப் பணத்தில் பெரும் பகுதியைக் குடிக்குச் செலவிடுகிறவர்களின் வீடுகளில் குழந்தைகளும் மனைவியும் மன உளைச்சலுக்கும் உடல்ரீதியான தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள். அதனால், டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என மூன்று கட்டப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டோம். அதைத் தொடர்ந்துதான் தமிழகத்தில் பல இடங்களில் டாஸ்மாக் கடை உடைப்புப் போராட்டங்கள் பரவின” என்கிறார் மஞ்சுளா. இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் இவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் எல்லாம் பெண்களையும் அடித்தட்டு மக்களையும் மையப்படுத்தியவையாக இருக்கின்றன.

வீழ்ச்சிக்கு யார் காரணம்?

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பராமரிப்பும் சேவையும் சீராக இல்லை என்பதைக் கண்டித்து தாலுகா அளவில் இவர்கள் நடத்திய போராட்டம் முக்கியமானது. “ஏழைப் பெண்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. அதற்காகத்தான் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பராமரிப்பும் சேவையும் சரியாக இல்லாததால்தானே அவர்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். இதற்கு யார் பொறுப்பு?” எனக் கேட்கும் மஞ்சுளா, அதிரடி அறிவிப்புகளால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவதைப் பற்றிக் கவலைப்படாத அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகச் சாடுகிறார்.

“நாட்டில் கறுப்புப் பணம் முழுமையாக ஒழிந்துவிடும்; மக்கள் நல்வாழ்வு பெறுவார்கள் என்ற இனிப்புத் தடவப்பட்டு வெளியான செல்லாப் பண அறிவிப்பு எவ்வளவு பேரைப் பாதித்தது என்று அனைவருக்கும் தெரியும். அடித்தட்டு மக்களில் தொடங்கிப் பெரும்நிறுவனங்கள்வரை பலரும் பாதிப்புள்ளானார்கள். சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தன. பலரும் வேலை யிழந்தனர். இன்னொரு அறிவிப்பால் இந்த இழப்பு அனைத்தையும் சரிசெய்துவிட முடியுமா?” என்கிற மஞ்சுளா வின் கேள்விக்குப் பதில் என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

பெண்களின் உழைப்புக்கு மதிப்பில்லையா?

பெண்களும் ஒடுக்கப்பட்டவர்களும் தொடர்ந்து பொருளாதாரரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் ஒடுக்கப்படுவதைக் கண்டித்து இவர்களுடைய அமைப்பு சார்பில் தேசிய அளவிலான ஐந்து மாநாடுகள் நடந்தன. அதன் பலனாகத் தமிழகத்தில் ‘அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு’ உதயமானதைத் தங்கள் வெற்றியாகக் குறிப்பிடுகிறார் மஞ்சுளா.

“வன்முறைக்கு எதிரான குரல்கள் இங்கே நசுக்கப்படுகின்றன. பெண்கள் அனைத்துத் தளங்களிலும் ஒடுக்கப்படுகின்றனர். விவசாயப் பெண்கள், மீனவப் பெண்கள், வீட்டுவேலைத் தொழிலாளிகள் ஆகியோரது உழைப்பு கணக்கில்கொள்ளப்படுவதே இல்லை. வீட்டில் இருந்தபடியே நார் உரிக்கும், புளியிலிருந்து கொட்டையை எடுக்கும் பெண்ணின் உழைப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுக்காதா? பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல் நடந்தபடியேதான் இருக்கிறது” என்று சொல்லும் மஞ்சுளா, உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மாணவர்களின் தற்கொலைகளுக்குப் பிறகும் இந்தச் சமூகம் மௌனமாக இருப்பது நல்லதல்ல என்கிறார்.

“சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த மாணவி பாத்திமா, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இது முதல் மரணமல்ல; இந்தியாவின் பெரும் கல்வி நிறுவனங்களில் ஒடுக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொண்டவர்கள் பலர். முதல் மரணத்துக்கே நீதியும் நியாயமும் கிடைத்திருந்தால் இத்தனை உயிர்களை இழந்திருக்க மாட்டோம். ஆதிக்கச் சக்திகளின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.

வரலாற்றைக் கற்றுத்தருவோம்

பொதுவுடைமைக் கல்வியை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதன் வாயிலாகத்தான் வர்க்க பேதமற்ற சமூகத்தைக் கட்டமைக்க முடியும் என அவர் உறுதியாக நம்புகிறார். வரலாற்றை அழிப்பதும் திரிப்பதுமாக இருக்கும் பாடப்புத்தகங்கள் மாணவர்களிடம் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தாது என்று சொல்லும் அவர், உண்மையான வரலாற்றை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்கிறார்.

“வரலாறு தெரிந்தாலே அடிமைத்தனம் அகன்றுவிடும். உதாரணத்துக்குத் தாலி என்பது எந்த நூற்றாண்டில் தோன்றியது, எதற்காக அணியப்பட்டது, அணிந்துகொண்டவர்கள் ஆண்களா, பெண்களா என்றெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு வரலாற்று ஆதாரங்களுடன் சொல்லிவிட்டால் பிற்காலத்தில் யாராவது ‘தாலிதான் பெண்ணுக்கு வேலி’ என்று சொன்னால் அதை அப்படியே நம்பிவிட மாட்டார்கள்தானே” என்று நம்பிக்கையோடு சொல்கிறார். இவருடைய வாழ்க்கையும் போராட்டங்களால் நிறைந்ததுதான். அவை எல்லாமே மக்களுக்கான போராட்டங்கள் என்பதுதான் அவரைத் தனித்து அடையாளப்படுத்துகிறது. மஞ்சுளாக்கள் காலத்தின் தேவை.

- பிருந்தா சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x