Published : 17 Nov 2019 10:00 am

Updated : 17 Nov 2019 10:00 am

 

Published : 17 Nov 2019 10:00 AM
Last Updated : 17 Nov 2019 10:00 AM

இசையின் மொழி: கிராமத்து மின்னலடிக்கும் ‘அடியாத்தே’

youtube-women-singing-sensation

வீட்டில் ஏதோ விசேஷம். உறவுகள், சொந்தங்களால் நிரம்பி வழிகிறது மகிழ்ச்சி. ஆனாலும், அவள் எதிர்பார்த்த உறவு வராததில் அவளுக்கு ஏமாற்றம். நேரம் ஆக ஆக ஏக்கம், தவிப்பாகிறது. ஏற்றிவைத்த விளக்குகள் எல்லாம் யாரும் தூண்டாமலேயே திடீரெனப் பிரகாசமாகின்றன. அதோ அவளுடைய மாமன் மகன் வருகிறான். இந்த எளிமையான காட்சிகளோடு தொடங்குகிறது ‘அடியாத்தே’ பாடல். பின்னணிப் பாடகியாக ஏற்கெனவே அறிமுகமான ஸ்வாகதா முதன்முறையாக இசையமைத்துப் பாடியிருப்பதோடு கிராமத்து மின்னலாக நடித்தும் இருக்கிறார்.

இவர் பாடிய ‘டர்ட்டி பொண்டாட்டி’ பாடல் ஓர் அழகான அரட்டை ரகம். ‘ஒட்டியாணம் போல’ பாடலை யூடியூபில் கேட்டு அந்தக் குரலில் மனதைப் பறிகொடுத்த ஆயிரக்கணக்கான நெட்டிசன்களின் விருப்பமான பாடகி ஸ்வாகதா. எஸ்.பி.பி.-50 கலை நிகழ்ச்சிகளுக்காக உலகம் முழுவதும் பல நாடுகளில் அவருடைய குழுவில் இடம்பெற்ற பாடகி இவர். ‘கரு’ படத்தில் இவர் பாடியிருக்கும் ‘ஆலாலிலோ’ பாடல் மயிலிறகால் வருடும் தாலாட்டு!


இசையோடு நடிப்பும் உண்டு

தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம்பெற்ற ஸ்வாகதாவுக்குக் கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் முறையான பயிற்சி உண்டு. ‘ஸ்வாகதா அண்ட் ஃபிரண்ட்ஸ்’ என்னும் பெயரில் சொந்தமாக இசைக் குழுவை நடத்திய அனுபவமும் இவருக்கு உண்டு. ஜாம் செக் ஷன், சுயாதீன இசை நிகழ்ச்சிகளை இந்தியாவின் பிரதான நகரங்களில் நடத்திவரும் ஸ்வாகதா தற்போது தனியாக இசை ஆல்பங்கள் வெளியிடும் முனைப்பில் இறங்கியிருக்கிறார்.

“ராகம் சார்ந்து இசையமைப்பது பிடிக்கும். ஆனாலும், சினிமாவில் எல்லைகளைத் தாண்டி இசையமைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்கான முன்னோட்டம்தான் ‘அடியாத்தே’ ஆல்பம். கோ சேஷா எழுதிய பாடலுக்கு இசையமைத்தது புதிய அனுபவமாக இருந்தது. சத்ய பிரகாஷ் என் நெருங்கிய நண்பர். அவரும் நானும்தான் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறோம். கலைச்செல்வன் (ஒளிப்பதிவு), முகிலன் முருகேசன் (இயக்கம்), ராமு தங்கராஜ் (கலை), ப்ரீத்தி நெடுமாறன் (காஸ்ட்யூம்) என நண்பர்களின் ஒருங்கிணைப்பில் விறுவிறுப்பாக உருவாகிவிட்டது ‘அடியாத்தே’.

ஆல்பத்தில் எங்களின் பட்ஜெட்டில் நடிப்பதற்கு யாரும் முன்வரவில்லை. பேசாமல் நீயே நடிச்சுடு என்றார்கள். வேறு வழியில்லாமல்தான் நடிச்சேன்” என்று சிரிக்கும் ஸ்வாகதா, பல படங்களில் நடிப்பில் கவனம் ஈர்த்த நடிகை மாயாவின் அக்கா.

பாடலைக் காண இணையச் சுட்டி: https://bit.ly/2KkjKMQ

- யுகன்

இசையின் மொழிகிராமத்து மின்னல்அடியாத்தே பாடல்பின்னணிப் பாடகி ஸ்வாகதாடர்ட்டி பொண்டாட்டிஸ்வாகதா அண்ட் ஃபிரண்ட்ஸ்

You May Like

More From This Category

More From this Author