Published : 17 Nov 2019 10:02 AM
Last Updated : 17 Nov 2019 10:02 AM

வாசிப்பை நேசிப்போம்: படிப்பை நிறுத்தலாம், படிப்பதை நிறுத்த முடியாது

எனக்கு 80 வயதாகிறது. இவ்வளவு ஆண்டுகள் கடந்த நிலையிலும் நான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கிய நாள் பசுமரத்து ஆணிபோல் நினைவில் உள்ளது. அப்போது நான்காம் வகுப்புப் படித்துகொண்டிருந்தேன். என்னுடைய சகோதரிகள் இருவரும் ஒரு புத்தகத்தை ஒருவருக்கொருவர் பிடுங்கிக்கொண்டு பிறகு சமாதானமாகி சேர்ந்து படிப்பார்கள்.

அப்படி என்னதான் அந்தப் புத்தகத்தில் உள்ளது எனக் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்தேன். சகோதரிகள் இருவரும் படித்துமுடித்துவிட்டுச் சென்றவுடன் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்கு வாசிப்புப் பேய் பிடித்தது. அதுவொரு வார இதழ். அந்தக் காலத்தில் நிறைய சிறுகதைகள், மர்மக் கதைகள் அதில் வெளிவந்துகொண்டிருந்தன.

அப்போதெல்லாம் உள்ளங்கை அளவே புத்தகம் வெளிவந்தது. விலை காலணா. ஒரு மிட்டாய் வாங்கும் காசு. அப்புறம் ‘பாலர் மலர்’, ‘பாப்பா மலர்’, ‘சங்கு’, ‘கண்ணன்’ போன்றவை சிறுவர்களுக்கான புத்தகங்கள். ‘அம்புலி மாமா’ புத்தகத்தைப் படித்தால் பிள்ளைகளுக்குப் பஞ்சமில்லாமல் கதை சொல்லலாம். அந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு கதைக்கும் அழகான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும்.

பின்னர் வீட்டுப் பரணில் ‘விக்கிரமாதித்தன் கதை’ புத்தகம் கிடைத்தது. பெரிய பெரிய எழுத்துகளில், பழைய கோயில்களில் இருக்கும் படங்கள் இடம்பெற்றிருக்கும். சில படங்கள் மரப்பாச்சி பொம்மைகளைப் போல் இருக்கும். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘அலை ஓசை’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’ தொடங்கி இன்னும் பல நூல்களைப் படித்தேன். கல்கியின் கதைகளுக்கு மணியன் படம் வரைவார்.

அப்போது கல்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சிறுவர்களுக்கான இதழைக் கொண்டுவர இருக்கிறோம். அந்த இதழுக்கான தகுந்த தலைப்பை எழுதி அனுப்புபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என அறிவித்தார். நானும் ஆசையாக எழுதிப்போட்டேன். ஆனால், ஒரு பையனுக்குத்தான் பரிசு கிடைத்தது. அவன் எழுதிய தலைப்பு ‘கோகுலம்’. அதே தலைப்பில் ‘கோகுலம்’ இதழ் தொடங்கப்பட்டது.

‘கல்கி’ இதழில் மூதறிஞர் ராஜாஜி மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் எளிய முறையில் எழுதிவந்தார். சுதந்திரா கட்சி வேலைகளுக்கு நடுவே அவர் எழுதிய புராணத் தொடர் சிறுவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இருந்தது.

கல்கியின் எழுத்து என்னுள் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், சில நாட்களுக்கு முன்பு கல்கியின் நாவல்கள் அனைத்தும் 1,500 ரூபாய்க்குத் தள்ளுபடி விலையில் போட்டார்கள். உடனே ஐந்து புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தேன். பிறகு தபால்காரர் “என்னால் அவ்வளவு புத்தகங்களையும் கொண்டுவர முடியவில்லை. நீங்களே ஆளை அனுப்பி எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். பிறகு காரை எடுத்துச்சென்று அவ்வளவு புத்தகங்களையும் எடுத்துவந்தோம். அந்தப் புத்தகங்கள் அனைத்தையும் என் பிள்ளைகளுக்குப் பிரித்துக்கொடுத்தேன்.

எழுத்தாளர்கள் அநுத்தமா, ரமணி சந்திரன், லட்சுமி, சிவசங்கரி, அனுராதா ரமணன் ஆகியோரின் புத்தகங்களையும் நான் விடுவதில்லை. எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்தாலும் வாசிப்பின் தாகம் மட்டும் எனக்குக் குறையவே இல்லை.

பெண் குழந்தை என்பதால் அப்போதெல்லாம் பூப்பெய்தியவுடன் படிப்பை நிறுத்திவிடுவார்கள். ஆனால், நான் அப்பாவுக்குத் தெரியாமல் நிறைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஜெயகாந்தன், உள்ளிட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படித்துவிட்டு ஒரு கட்டத்தில் கதை எழுத வேண்டும் எனத் தோன்றியது. முதன்முதலில் நான் எழுதி அனுப்பிய கதை திருப்பி அனுப்பப்பட்டது.

பிறகு எழுத்தாளர் சுபாவுக்கு என்னுடைய கதையை அனுப்பி கொஞ்சம் திருத்தி அனுப்பும்படி கேட்டிருந்தேன். சில நாட்களிலேயே அவரிடமிருந்து கடிதம் வந்தது. முத்தான எழுத்தில் என்னுடைய கதையைத் திருத்திக் கொடுத்தார். என்னதான் செல்போன், கணினி எனப் பல விஷயங்கள் வந்தாலும் வாசிப்பின் அனுபவத்தை அவற்றால் தர முடியாது.


- அனுசுயா சுவாமிநாதன், தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x