Published : 17 Nov 2019 10:04 AM
Last Updated : 17 Nov 2019 10:04 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 32: ஆனையில அரிசியெடுத்து குளத்துல உளுந்தெடுத்து

நடுவை, நாத்து, இறவை என்று பிஞ்சைகளில் அவசர வேலை இருந்தால் பெண்களால் மற்ற வேலைகளைச் செய்துகொண்டிருக்க முடியாது. அதனால்தான் அப்போது எல்லோருடைய உதவியும் எல்லோருக்கும் தேவைப்பட்டது.

ஒருவருக்கொருவர் சண்டை வந்தாலும்கூட சிறு சிறு மனச்சடவுகளோடு இருந்தாலும் முகம் சுளித்துப் பேசுவதை தவிர்க்க மாட்டார்கள். உடம்பில் வரும் நோய்களுக்கும் ஒருவர் உதவி ஒருவருக்குத் தேவைப்பட்டது.

கைவைத்திய மருந்துகள்

வேலை செய்யும்போது கண்ணில் ஏதாவது தூசி, தும்பு விழந்துவிட்டால் அவள் கண் வலியோடு உட்கார்ந்திருப்பாள். அவள் வலியால் துடிப்பதைப் பார்த்துவிட்டுப் பெண்கள் பச்சைப் பிள்ளைக்காரியிடம் கொஞ்சம் ‘அமிர்தப் பால்’ வாங்கி அதில் ஒரு பொட்டு விளக்கெண்ணெயைக் கலந்து கண்ணில் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக ஊற்றி வலியைச் சரிபண்ணுவார்கள். காது வலியோடு போகிறவர்களுக்குக் காய்ந்த, நீண்ட மிளகாய் வற்றலை எடுத்து அதன் காம்பை நீக்கி அதனுள் இருக்கும் விதையை உதிர்த்துவிடுவார்கள்.

அதனுள் தேங்காய் எண்ணெய்யைவிட்டு சிறு விளக்கில் அந்த வத்தலைக் காட்டி சூடேற்றுவார்கள். எவ்வளவு சூடு பொறுக்க முடியுமோ அவ்வளவு சூட்டைப் பொறுக்க வைத்தபின் காதில் ஊற்றிவிட்டால் போதும் உடனே காது வலி சரியாகிவிடும். சிலர் கடுமையான மூலநோய்கண்டு துடிப்பார்கள். மருத்துவம் தெரிந்த யாராவது ‘துத்திக்கொளை’, ‘நிலாக்கொளை’ என்று சொல்லப்படும் மஞ்சள் மஞ்சள் பூவாகப் பூத்து மலர்ந்திருக்கும் செடியில் ஒரு கை இலையைப் பறித்து வருவார்கள். சிறுவெங்காயத்தின் தோல் நீக்கி இரண்டையும் சேர்த்து நன்றாக இடித்துத் தேங்காய் எண்ணெய்விட்டு வதக்கிக் கொஞ்சம் சூட்டோடு கட்டிவிட வேண்டும். இப்படி நான்கு நாளைக்குச் செய்தால் மூலம் ஓடிவிடும்.

சீதையைப் பார்க்கும் ஆசை

அந்தக் காலத்தில் ஆஸ்பத்திரி, டாக்டர் என்று ஊருக்குள் இல்லாத தாலும் டாக்டரிடம் போகப் பணமும் நேரமும் இல்லையென்பதாலும் இந்த மாதிரி நாட்டு வைத்தியங்களை ஒருவருக்கொருவர் செய்து நோய்களை விரட்டியடித்தார்கள்.

இப்போதுதான் எங்கே பார்த்தாலும் கோயில்களாகக் கட்டி மக்கள் பக்திப் பரவசம் அடைகிறார்கள். தொலைக்காட்சி சீரியல்களுக்கும் நாலைந்து ஆண்டுகளுக்குக் கவலையில்லாமல் கதை ஓடுகிறது. பலரும் தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கித் தங்களுக்குள் வன்மத்தை வளர்த்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மனதுக்கு நிம்மதி வேண்டி கோயில் கோயிலாய்ப் போகிறார்கள்.

அந்தந்த ஊர்களில் பேருந்து நிலையங்கள், கடைகள் என்று பல இடங்களிலும் அவசரத்துக்கு ஒதுங்கு ஒரு ‘கக்கூஸ்’ இருக்கிறதோ இல்லையோ அங்கங்கே கையெடுத்து கும்பிடுவதற்கு என்ன என்னவோ பெயர்களில் கோயில்கள் இருக்கின்றன. ஆனால், அந்தக் காலங்களில் இப்படி எங்கேயும் கோவில்கள் கிடையாது. அதோடு பெண்களுக்குக் கும்பிடப் போக நேரமும் கிடையாது.

அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சங்கரன்கோவில், வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருவண்ணாமலை, மதுரைக்குப் போகும் வழியிலிருக்குத் ‘கோபால மலை’. இந்தக் கோயிலுக்கெல்லாம் வாழையிலையை விரித்துப் புளியோதரையும் கத்திரிக்காய் வெஞ்ஞனமுமாகக் கட்டிக்கொண்டு இரவும் பகலும் நடையாய் நடந்து போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள்.

ஆனால், இதெல்லாம் அவர்களுக்குப் போதவில்லை. ஒரே ஒரு தடவை எப்படியாவது ராமேஸ்வரத்தைப் பார்த்துவிட வேண்டுமென்று எல்லோருக்கும் அப்படியொரு ஆசை இருந்தது. ‘சீத பெறந்தா, எலங்க அழிஞ்சிடுச்சு. அப்படியொரு பத்தினியான்னும், ராமர் இருந்த இடத்தை ஒருக்கானாச்சிலும் பாத்தாத்தேன் என் கட்ட வேவுமென்று’ சொல்லிக்கொண்டும் ஒவ்வொரு பெண்ணும் ஆதங்கத்தோடும் ஏக்கத்தோடும் அலைந்தார்கள்.

ரயில் போகும் ராமேஸ்வரம்

உழவுக்காகக் காளைப் பிடிக்கப்போன ஏகாம்பரம் ஒரு நல்ல செய்தியோடு வந்தார். அதாவது ராமேஸ்வரத்துக்கெல்லாம் நடந்துபோக முடியாதாம். அப்படி போவணுமின்னா போயி வாரதுக்கே பத்துநா புடிக்குமாம். பத்து நாளைக்கு வீட்டுல இருக்க புள்ள குட்டிகளையும் ஆடு மாட்டயும் போட்டுட்டுப் போக முடியுமா என்று பல யோசனையில் இருந்தவர்களுக்கு ஏகாம்பரம் ஒரு நல்ல செய்தியாகச் சொன்னார். “ஏத்தா நீங்க யாரும் பயப்படவேண்டாம் ராமேசுவரத்துக்கு ரயிலே போகுதாம்.

அப்படிப் போற ரயிலு கோயிலுக்கு முன்னாடியே போயி நிக்குதாம். அது மட்டுமில்ல அங்கனயே கடலும் எந்நேரமும் அலையடிச்சிக்கிட்டு இருக்காம். அதனால, போறவக அங்கனயே கடல்ல குளிச்சிட்டு அப்படியே பக்கத்தில இருக்க ராமரு கோயிலயும் பாத்துட்டு வரலாம்” என்று சொல்லிக்கொண்டிருக்கையில, “சரிண்ணே பெறவு எப்படித் திரும்பி வாரதாம்?” என்று கேட்டாள் பொன்னழகி.

ஏகாம்பரத்துக்குக் கோபம் வந்துவிட்டது. “அட கிறுக்கு கழுத. நீங்க ஏறுக ரக்குலேயே திரும்பவும் ரயிலு வந்து நிக்குமாம். அந்த மானைக்கு நீங்க அம்புட்டுப் பேரும் ஏறிக்கிட்டு வர வேண்டியதான?” என்று ஏகாம்பரம் சொல்லவும் பொன்னழகிக்கு ஆச்சரியமும் சந்தோசமும் தாங்க முடியவில்லை.

“ஆத்தாடி ஆத்தா ராமேசுவரத்துக்குப் போயிட்டு வர இம்புட்டு மாயமும் மந்திரமுமிருக்கா?” என்று கன்னத்தில் கைவைத்து முகம் குவிந்தாள். “ஆமத்தா அந்த ராமரும் சீதயும் பதினாறு வருசம் காட்டுல சீரளிஞ்சி சீப்பட்டவகளே இங்க நாட்டுல வந்து எப்படி எப்படி இருக்கணும், நம்மளப் பாக்க சனங்க எப்படி வரணும்னு அவருக்குத் தெரியாதாக்கும்” என்றார் கோதண்டம்.

“அதுவும் சரிதேன்” என்று பொம்பளைகள் அதிசயித்தனர். அவர்களைச் சுற்றியிருந்த சின்னஞ்சிறுசுகள் தங்களின் தாய் முகங்களைக் குழப்பத்தோடு சிறிய விழிகளை விரித்தவாறு பார்த்துக்கொண்டிருந்தார்கள். “நீங்க போவதாயிருந்தா ‘பவுரணய’ ஒட்டித்தேன் போவணும். ஏன்னா, அப்பத்தேன் நெலா வெளிச்சம் துணுப்பா தெரியும். போவ வர தோதா இருக்கும்” என்றார் கோதண்டம்.

தேசம் விட்டுத் தேசம் பயணம்

“இப்பத்தேன் ‘பவுரண’ வந்துட்டுப்போச்சி. ‘பவுரண’ வர இன்னும் ஒண்ணு கொறயா முப்பது நா இருக்கு” என்றாள் ஒருத்தி. “சரி சரி. இந்த முப்பது நாளைக்குள்ள எம்புட்டு அரிசி, பருப்புன்னு குத்தித் திரிப்பீகளோ திரிச்சி குத்திவச்சிட்டுப் போங்க. எல்லாம் கஞ்சிக்குப் பறக்குத புள்ளைக. எந்நேரமும் பானை நிறைய கஞ்சி இருக்கணும். உள்ளூருக்குள்ள பெத்தவ பெறந்தவன்னு இருக்கவக அவுக பொறுப்புல வீட்ட ஒப்படைச்சிட்டுப் போங்க. அப்படி இல்லாதவக பக்கத்தூருல இருக்க உங்காத்தா, சின்னாத்தான்னு யாரயும் கூப்பிட்டு வீட்டையும் பிள்ளைகளையும் ஒப்படைச்சிட்டுப் போங்க. நாங்க ஆம்பளைங்க பிஞ்ச உண்டு வேல உண்டுன்னு இருப்போம்” என்று ஏகாம்பரம் சொல்ல ரணத்தாயீ திடுக்கிட்டுப்போனாள்.

“அப்ப எங்ககூட யாரும் வல்லயா? பொம்பளைகளயா தேசம் விட்டுத் தேசம் அனுப்புதீக” என்றாள். “ஏ ரணத்தாயீ. உம் பாட்டுக்குப் பேசாத. உங்ககூடக் கயிறு திரிக்க சங்குத் தாத்தா வராரு. உங்களுக்குப் போவவும் வரவும் டிக்கெட்டு எடுத்துக் கொடுக்க நம்ம ஊருக்குப் பருத்தி, வத்தலுன்னு வாங்கற செல்வராசு வராரு. அவரு அம்புட்டு ஊருலயம் யாவாரம் செஞ்சி உலவம் சுத்திட்டு வார அனுபவசாலியாக்கும்” என்று சொல்லவும் பெண்களுக்குக் கொஞ்சம் சமாதானமாக இருந்தது.

“அது மட்டுமில்லத்தா. உங்ககூடத் தேவியாரு மவ செல்லாயும் வாரா” என்றதும் எல்லாப் பெண்களுக்கும் முகம் பளிச்சிட்டது. “ஆமண்ணே மொதவே செல்லாயி உங்ககூட வாரான்னு சொல்ல வேண்டியதுதான. இம்புட்டுக்கு நாங்க மலைக்க மாட்டமில்ல. செல்லாயி கணக்காளி, வழக்காளியில்ல. ஆனையில அரிசி எடுத்து குளத்துல உளுந்தெடுத்து ஒரு பெளாப்பெட்டிக்குத் தோசயில்ல சுட்டு வச்சிருவா. அவ வந்தா போதும். வேறு யாரும் கூட வர வேண்டாம்” என்றார்கள் எல்லாப் பெண்களும் சொல்லி வச்சதுபோல.

“சரி யாராரு போறீகன்னு இப்பவே கணக்குப் பண்ணி வச்சிக்கோங்க. விருதுநகருல இருந்துதேன் ரயிலு போவுதாம். நாங்க நாலு மாட்டு வண்டியைக் கட்டி உங்களக் கூட்டிப்போயி ரயில்ல ஏத்திவிட்டுருதோம்” என்றார் கோதண்டம்.

(நிலா உதிக்கும்)
- பாரத தேவி, எழுத்தாளர்
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x