Published : 17 Nov 2019 10:05 am

Updated : 17 Nov 2019 10:05 am

 

Published : 17 Nov 2019 10:05 AM
Last Updated : 17 Nov 2019 10:05 AM

இன்றைய கானா: தரையிலிருந்து திரைக்குப் போன கானா

mayilai-gana-surya-profile

பாம்படத்தி அம்மான்னு அழைக்கப்பட்டு
ஜியோபேட்டான்னு வாழ்த்திவிட்டு
ஆணும் பொண்ணுமா கலந்த சாமி இவங்கடா
இந்த வருசத்துல புது குடும்பம் இவங்கதானடா
அரசாங்கம் இவங்களுtக்குத் தரணும் வீடு
திருநங்கையாலே முன்னேறப் போவுது நாடு..

- திருநங்கைகளின் பெருமையைப் பேசுவதோடு, எல்லாத் துறைகளிலும் அவர்களின் சாதனையைச் சொல்லும் இந்த ஒரே பாடலின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர் மயிலை கானா சூரியா.

கண்ணகி நகர் குட்டிம்மா ஆதரவில் இந்தப் பாடலைப் பாடி யூடியூபில் பதிவிட்ட மயிலை கானா சூரியாவுக்கு மலேசியா, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் இருக்கும் திருநங்கைகளின் வாழ்த்துகளும் பாராட்டுகளும் கிடைத்தன.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கானா பாடல்களை சூரியா பாடிவருகிறார். பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களைக் கண்டிக்க, மது போதையில் விழாமல் குடும்பத்தை வழிநடத்த எனச் சமூகத்தில் தன்னைப் பாதிக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் தன்னுடைய கானா பாடல்களில் எதிரொலிக்கிறார் சூரியா.

மதிக்கப்படும் கானா

கானாவின் முகம் மாறியிருக்கிறதா? “கண்டிப்பாக மாறியிருக்கிறது. ஆயிரம் விளக்கு செல்வம்தான் துக்க நிகழ்வில் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் என்று சொல்வார்கள். சிந்தை புண்ணியர், ரேவு ரவி அப்பா, புளியாந்தோப்பு செல்வம் அப்பா இவர்கள் எல்லாம் கானாவின் வழித்தோன்றல்கள். அப்போதெல்லாம் சொந்த மெட்டில்தான் பாடிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் திரைப் பாடல்களின் மெட்டில் பாடும் வழக்கம் வந்திருக்கிறது.

மயிலாப்பூரில் இறைவனைப் போற்றிப் பஜனை பாடுபவர்களை ஒருமாதிரியாகப் பார்ப்பதும், இறந்தவர்களைப் போற்றிப் பாடுவதை மற்றொரு மாதிரியாகப் பார்க்கும் வழக்கமும் முன்பு இருந்தது. இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்றுதான். அவர்கள் கடவுளுக்காகப் பாடுகிறார்கள். இறந்தவர்களும் கடவுளாகத்தான் நம்முடைய சமூகத்தில் மதிக்கப்படுகிறார்கள். அதனால் இரண்டுமே ஒன்றுதான்.

மாறும் கருத்து

சென்னையில் தண்ணீர்ப் பிரச்சினை இருக்கிறது. ஆங்காங்கே பெண்களின் நகைகளைப் பறித்துச் செல்லும் கும்பல் நடமாடிக்கொண்டிருக்கிறது. வீடு புகுந்து கொள்ளை அடிக்கிறார்கள். ஏ.டி.எம்மை உடைத்துத் திருடுகிறார்கள். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் நம்மிடம் பத்திரமாக இருக்கின்றன.

ஆனால், நம்முடைய பணத்தை நமக்கே தெரியாமல் எடுத்துவிடுகிறார்கள். படிக்காதவன் செய்யும் திருட்டுகளைவிட, நன்றாகப் படித்தவர்கள் செய்யும் திருட்டுகள் நாட்டில் பெருகிவிட்டன. பிரச்சினைகள் மாற மாற, அதற்குத் தகுந்த மாதிரி எங்களின் கருத்துகளையும் இப்போது கானாவில் புகுத்திவருகிறோம்” என்கிறார் சூர்யா.

‘இப்போ நாடு போகும் நிலையும் சரியில்ல..

நாமும் சரியில்ல..

நாட்டின் நிலைமையும் சரியில்ல…’ என்னும் பாடலில் அதைப் பதிவு செய்திருக்கும் சூரியா பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், புதுப்புது கானா பாடல்களை எழுதிப் பாடும் பாடகராக மக்கள் மனத்தில் தேர்வாகியிருக்கிறார்.

லைக் மட்டும் போதுமா?

“நாட்டில் நம்முடைய உரிமைகளுக்காகப் போராடும் அதே நேரத்தில் நம்முடைய கடமைகளை ஒழுங்காகச் செய்கிறோமோ என்று நம்மை நாமே உரசிப் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

முகநூலில் பதிவுகளைப் போட்டுவிட்டு, கண் எதிரே நடக்கும் அநியாயத்தைக் கண்டிக்காமல் இருக்கக் கூடாது, வீதியில் இறங்கிப் போராடுவதற்குத் தயங்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது இவரின் இந்தப் பாடல்:

‘ஃபேஸ் புக்ல எது வந்தாலும் பாத்துட்டுப் போயிட்டு..
இதுதானா உன்னோட கெத்து..
தண்ணிய தாங்க தண்ணிய தாங்க
சென்னை மக்களுக்கு தண்ணிய தாங்க..’

சினிமா வெளிச்சம்

சினிமா வாய்ப்பு மட்டுமே பெருமையான விஷயமா? ஜெயிச்சவன் சொல்றததான் உலகம் கேட்கும். ஜெயிச்சதுக்கு அடையாளமா இன்னைக்குக் கொண்டாடப்படுவது சினிமாதான். அதனாலதான் அதில் கிடைக்கும் வாய்ப்புகளைக் கொண்டாடுகிறோம். சினிமா புகழின் வெளிச்சத்தின் மூலமா இன்னும் நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

நான் என்னுடைய துறையில் இன்னும் பலரை வழிநடத்தி அவர்களுக்கான வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு நான் ஜெயிக்க வேண்டும். இந்தத் துறையில் ஜெயித்திருக்கும் என்னுடைய மூத்தவர்களை அடியொற்றித்தான் நான் இந்தத் துறைக்கு வந்திருக்கிறேன். இந்தத் துறையிலேயே நீடித்தும் இருப்பேன்.

சமூக வலைத்தளங்களிலேயே எங்களுக் கான பெரிய அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. பொருளாதாரரீதியாகவும் எந்தக் குறையுமில்லை. சினிமாவில் இன்றைக்கு கானா பாடல்களைத் தவிர்க்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது. அந்த வெளிச்சமும் எங்களின்மீது விழும்போது கூடுதலாக நன்மைகள் இருக்கும்தானே. அதனால்தான் அதைப் பெருமையாக நினைக்கிறோம்”.

கலை ஆயுதம்

சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டு,
‘வந்தே மாதரம்னு சொல்லுங்கடா சத்தமா…
சாதி மதத்தையெல்லாம் தூக்கிப் போடு மொத்தமா..
.’ பாடலை நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டுப் பாடிப் பதிவிட்டிருக்கிறார்.

“ராணுவத்தினரின் பெருமையையும் தியாகத்தையும் அடுத்து பாட இருக்கிறோம். கெட்டது யார் செய்தாலும் அவர்களை கானாவின் வழியாகக் கண்டிப்போம். ஏனென்றால் எங்களிடம் இருக்கும் கானா, பொழுதுபோக்குவதற்கான கலை அல்ல; போராட்டத்துக்கான ஆயுதம்”!

- வா. ரவிக்குமார்


கானா பாடல்கானா கலைஞர்கானா பெருமைகானா இளைஞர்திரைப்பட கானாகானா இசைமயிலை கானா சூரியாகண்ணகி நகர் குட்டிம்மாதிருநங்கை கானா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author