Published : 13 Nov 2019 12:40 pm

Updated : 13 Nov 2019 12:40 pm

 

Published : 13 Nov 2019 12:40 PM
Last Updated : 13 Nov 2019 12:40 PM

டிங்குவிடம் கேளுங்கள்: நல்ல பாம்பு மட்டும் படம் எடுப்பது ஏன்?

tinkuvidam-kelungal

மேஜிக் நிகழ்ச்சிகளில் காட்டப்படுவது அனைத்தும் உண்மையா? மேஜிக் கலைஞர்கள் தங்கள் மேஜிக் மூலம் பணத்தையும் ஆயுளையும் பெருக்கிக்கொள்ள முடியுமா, டிங்கு?

- கே. குணவதி, 7-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம், திருவள்ளூர்.

மேஜிக் என்பது ஒரு கலை. நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டக்கூடிய கலை. முடியாது என்று நினைக்கும் விஷயங்களைச் செய்துகாட்டி, இது மந்திரமா தந்திரமா என்று புரியாமல் பார்வையாளர்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்துவதே இந்தக் கலையின் சிறப்பு. மேஜிக் கலைஞர் நிகழ்ச்சியில் நூறு ரூபாயை ஒரு லட்ச ரூபாயாக மாற்றிக் காட்டலாம். நிஜத்திலும் அப்படிச் செய்ய முடிந்தால், அவர் மேஜிக் மூலமே உட்கார்ந்த இடத்திலிருந்து கோடீஸ்வரராகிவிடலாம்.

ஆனால், நிஜத்தில் அப்படிச் செய்ய முடியாது. எல்லோரையும் போலவே மேஜிக் கலைஞர்களும் கடினமாக உழைத்துதான் புகழையும் பணத்தையும் சம்பாதிக்கிறார்கள். 2016, 2017-ம் ஆண்டுகளில் உலகிலேயே அதிக வருமானம் பெற்ற இங்கிலாந்து மேஜிக் கலைஞர் டைனமோ, உடல்நலப் பிரச்சினைகளால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார். அவரது மேஜிக் மூலம் அவர் உடல்நலத்தைச் சரி செய்ய முடியாது. மேஜிக் மூலம் சம்பாதித்த பணத்தைக்கொண்டு, மருத்துவம் பார்த்தே மீண்டு வருகிறார். அதனால் மேஜிக் நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மை அல்ல, குணவதி.

நல்ல பாம்பு படம் எடுக்கிறது, மற்ற பாம்புகள் ஏன் படம் எடுப்பதில்லை, டிங்கு?

- ரெ. பிரேமிகா, 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொய்யாமணி.

எதிரிகளைப் பயமுறுத்து வதற்காக விலங்குகள் பல்வேறு தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. பாம்புகளின் உடல் மிகவும் எளிமையான வடித்தில் இருக்கிறது. தங்களுக்கு ஆபத்து ஏற்படும்போது, எதிரிகளைப் பயமுறுத்துவதற்காக உடலைத் தட்டையாக மாற்றி, தலையைத் தூக்கிக்கொண்டு நிற்கின்றன.

நல்ல பாம்பு போன்ற சில வகைப் பாம்புகளின் கழுத்துப் பகுதியில் விரியக்கூடிய தசை காணப்படுகிறது. தங்களைத் தாக்கும்போதோ தற்காப்புக்கோ கழுத்துத் தசையை விரித்து, எதிரியைப் பயமுறுத்துகின்றன. இதைத்தான் படம் எடுத்தல் என்கிறோம். பாம்பு படம் எடுக்கும்போது, எதிரி செய்வதறியாது திகைத்து நிற்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாம்பு சட்டென்று தப்பிவிடுகிறது, பிரேமிகா.

அண்ணன், தம்பி, மாமா இவற்றில் உன்னை எப்படி அழைத்தால் பிடிக்கும், டிங்கு?

- கே. பூர்ணிமா, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.

உங்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், பூர்ணிமா. உங்கள் நண்பனாக, ‘டிங்கு’ என்று பெயர் சொல்லி அழைப்பதையே நான் விரும்புவேன். கூப்பிடுவதற்குத்தானே பெயர் இருக்கிறது!

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

டிங்குவிடம் கேளுங்கள்நல்ல பாம்புபடம் எடுப்பதுமேஜிக் நிகழ்ச்சிகள்மேஜிக் கலைஞர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author