Published : 13 Nov 2019 11:57 AM
Last Updated : 13 Nov 2019 11:57 AM

மாய உலகம்: என்ன துணிச்சல் உங்களுக்கு?

மருதன்

என் பெயர் கிரெட்டா துன்பெர்க். நியாயப்படி இந்நேரம் நான் வகுப்பறையில் அமர்ந்துகொண்டிருக்க வேண்டும். நியாயப்படி என் முழுக் கவனமும் பாடப் புத்தகங்களில் குவிந்திருக்க வேண்டும். நியாயப்படி என்னுடைய அதிகபட்ச கவலை என்பது எதிர்வரும் தேர்வில் நான் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுவேன் என்பதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அதைப் பற்றி எல்லாம் யோசிக்கும் நிலையில்கூட நான் இல்லை. பள்ளிக்குப் போய் நீண்ட காலம் ஆகிவிட்டது. உறங்க முடியாமல், உண்ண முடியாமல், படிக்க முடியாமல், விளையாட முடியாமல் தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறேன்.

என் சிறகுகள் முறிந்துபோய்க் கிடக்கின்றன. என் கனவுகள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. நான் வளர்த்து வைத்திருந்த நம்பிக்கைகள் அனைத்தும் என்னைவிட்டு விலகிவிட்டன. காரணம் நீங்கள். நீங்கள் எனக்காக விட்டு வைத்திருக்கும் உலகம் அச்சமூட்டுகிறது.

என் காற்று சுவாசிக்க இயலாததாக இருக்கிறது. என் புல்வெளிகள் காய்ந்துக் கிடக்கின்றன. என் தோட்டத்தில் பூத்திருக்கும் எந்த ஒரு பூவிலும் வாசமில்லை. எந்தக் கனியிலும் சுவை இல்லை. இலைகள் பசுமையைத் தொலைத்துவிட்டன. கொடிகள் படர்வதை நிறுத்திக்கொண்டுவிட்டன. நான் விதைக்கும் ஒவ்வொரு விதையும், உன் உலகில் பிறக்க விரும்பவில்லை என்று அறிவித்துவிட்டு, மண்ணுக்குள் தன்னைப் புதைத்துக்கொள்கிறது.

என் வானில் நீலம் இல்லை. என் நிலவில் குளுமை இல்லை. என் அருவி பாய அஞ்சுகிறது. தயங்கித் தயங்கி நிற்கிறது என் தென்றல். என் வண்ணத்துப்பூச்சி பறப்பதில்லை. என் தேனீ பாடுவதில்லை. என் கடல் குழம்பித் தத்தளிக்கிறது. தோன்ற மறுக்கிறது என் மேகம். பெய்ய மறுக்கிறது என் மழை. காயப்பட்டுக் கிடக்கிறது என் நிலம். மெலிதாகத் தீண்டி புத்துணர்ச்சியூட்ட வேண்டிய கதிர் என்னுடலைச் சுட்டுத் தின்கிறது.

என் மலைகளை எல்லாம் உடைத்து உடைத்தே ஒழித்துக் கட்டிவிட்டீர்கள். கரும்புச் சக்கையைப்போல் பிழிந்து போட்டிருக்கிறீர்கள் என் பூமியை. உங்களுக்கு மட்டும் நீண்டகரங்கள் இருந்திருந்தால் எல்லா நட்சத்திரங்களையும் எல்லாக் கோள்களையும் பறித்தெடுத்து வானத்தையும் வெறுமையாக்கி வைத்திருப்பீர்கள்.

எல்லாக் காடுகளையும் எல்லாப் பாலைவனங்களையும் எல்லாப் பனி நிலங்களையும் எல்லா விலங்குகளையும் விழுங்கி முடித்த பிறகும் அடங்கியபாடில்லை உங்கள் பசி. எல்லாக் கடல்களையும் எல்லா நதிகளையும் எல்லா அருவிகளையும் பருகித் தீர்த்த பிறகும் தணியவில்லை உங்கள் தாகம்.

செய்வதை எல்லாம் செய்துவிட்டு, கிரெட்டா, இதெல்லாம் முன்னேற்றத்துக்கு நாம் கொடுத்திருக்கும் சிறிய விலை என்று வாதிடவும் முடிகிறது உங்களால். இந்தச் சிறிய விலைகொடுத்து நீங்கள் எதைப் பெரிதாக வாங்கியிருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அப்படியே யாருக்காக நீங்கள் இந்தப் பரிவர்த்தனையை மேற்கொண்டீர்கள் என்பதையும்.

உன்னைப் போன்ற அடுத்த தலைமுறை குழந்தைகளுக்காகத்தான் கிரெட்டா என்று நீங்கள் சொல்வீர்களேயானால், எங்கள் சம்மதத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்று கேட்க விரும்புகிறேன். நிலமும் ஆகாயமும் கடலும் மலையும் பறவையும் விலங்கும் நீங்கள் வியர்வை சிந்தி சம்பாதித்து சேர்த்த செல்வமா? இல்லை என்றால் அவற்றை விற்கும் அதிகாரத்தை யார் வழங்கியது உங்களுக்கு? யாருமில்லை. இந்தா இதை வைத்துக்கொள் என்று உங்களிடம் ஒருவரும் உலக உருண்டையை உருட்டிக் கொடுத்துவிடவில்லை.

தயவுசெய்து எங்களை ஆளுங்கள் என்று விலங்கினங்களோ பறவையினங்களோ பூச்சிகளோ உங்களிடம் மண்டியிட்டு வேண்டிக்கொண்டதில்லை. உங்கள் அறிவும் உங்கள் ஆற்றலும் உங்களுக்கு அளவற்ற அதிகாரத்தை வழங்கியிருந்தது.

அதைக் கொண்டு நீங்களே உங்களை பூமியின் எஜமானர்களாக நியமித்துக்கொண்டீர்கள். ஆனால், அதிகாரத்தோடு பொறுப்பும் சேர்ந்தே வரும் என்பதை மறந்துபோனீர்கள். உங்கள் பெரும்பசியை அடக்க பொன்முட்டைகளை வாரி வாரி வழங்கிய இயற்கையைப் பிடித்து இழுத்து அதன் வயிற்றை கிழித்துப் போட்டிருக்கிறீர்கள். இதைச் சொன்னால் உங்களுக்கு என்மீது கோபம் வருகிறது.

‘படிக்கும் வேலையை விட்டுவிட்டு நீ எதற்கு இதை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறாய்? இப்படி எல்லாம் பேசினால் உனக்குப் பணம் கிடைக்கிறதா? யார் உனக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்? புகழுக்காக இதை எல்லாம் செய்கிறாயா? நோபல் பரிசு பெறும் ஆசை வந்துவிட்டதா?’ என்று என்னைப் பார்த்துச் சீறுகிறீர்கள்.

என்ன துணிச்சல் உங்களுக்கு? நான் நிம்மதியிழந்து போனதற்குக் காரணம் நீங்கள். என் பசிக்குக் காரணம் நீங்கள். என் தவிப்புக்குக் காரணம் நீங்கள். பருவநிலை மாற்றம், பசுங்குடில் வாயு குறித்தெல்லாம் நான் கற்க வேண்டிய, உரத்துப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்குக் காரணம் நீங்கள். ஒரு குழந்தையாக என்னால் இருக்க முடியாமல் போனதற்குக் காரணம் நீங்கள். எனக்குள் அச்சத்தை விதைத்தது நீங்கள்.

நானும் என்னைப் போன்றவர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் செய்யத் தவறியதை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். நீங்கள் பேசியிருக்க வேண்டியதை நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் கற்கத் தவறிய பாடங்களை நாங்கள் கற்று வருகிறோம். நீங்கள் இழைத்த தவறுகளை நாங்கள் சரிசெய்துகொண்டிருக்கிறோம். நீங்கள் விதைத்த நஞ்சை, நீங்கள் அள்ளி வீசிய குப்பையை, நீங்கள் ஊதித் தள்ளிய கரும்புகையை நாங்கள் சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம். நீங்கள் கிழித்த வாத்துக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் பேராசையும் உங்கள் பெரும்பசியும் எங்களுக்கு வேண்டாம் இனி. என் பூமிக்குத் தேவை பேரன்பும் பெருங்கருணையும்தான். வீழ்த்தப்பட்ட குருவியைப்போல் மடங்கிக் கிடக்கும் பூமியை எங்கள் மடி மீது வைத்துக்கொண்டு, எங்கள் மூச்சுக் காற்றை ஒன்றுதிரட்டி செலுத்துவோம். எங்கள் பூமி நிச்சயம் ஒருநாள் புத்துயிர் பெறும். புதிய பூவைப்போல் ஒரு புதிய பூமி மலரும். மலரும்போது, நான் மீண்டும் ஒரு குழந்தையாக மாறுவேன். தென்றல் என்னிடம் திரும்பி வரும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x