Last Updated : 13 Nov, 2019 11:40 AM

 

Published : 13 Nov 2019 11:40 AM
Last Updated : 13 Nov 2019 11:40 AM

அறிவியல் மேஜிக்: அந்தரத்தில் மிதக்கும் பந்து!

மிது கார்த்தி

பந்தை அந்தரத்தில் உங்களால் மிதக்க வைக்க முடியுமா? ஒரு சோதனையைச் செய்து பார்த்துவிடுவோமா? (பெரியவர்கள் துணையுடன் செய்யவும்.)

என்னென்ன தேவை?

ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்
பிங் பாங் பந்து
உறிஞ்சு குழல் (ஸ்ட்ரா)
கத்தி
ஆணி

எப்படிச் செய்வது?

# ஒரு லிட்டர் பாட்டிலின் வாய்ப் பகுதியிலிருந்து சற்றுக் கீழே வரை உள்ள பகுதியைக் கத்தியைக் கொண்டு வெட்டுங்கள். மேல் பாகம் மட்டுமே தேவை. இது புனல் போலத் தெரியும்.
# பாட்டிலின் மூடியைக் கழற்றி, அதன் நடுவில் ஆணியால் துளையைப் போடுங்கள்.
# மூடியை பிளாஸ்டிக் பாட்டிலில் இறுக மூடிவிடுங்கள்.
# உறிஞ்சு குழலின் வளைந்த பகுதியை மூடியில் உள்ள துளையில் நுழைத்துவிடுங்கள்.
# பிங் பாங் பந்தைப் புனல் போன்று உள்ள பகுதியில் வைத்துவிட்டு, உறிஞ்சு குழலின் இன்னொரு முனையை வாயில் வைத்து ஊதுங்கள்.
# நீங்கள் ஊதும்போது பந்து மேலே எழும்பி அந்தரத்தில் மிதக்கும். அது வேறு திசையை விட்டுச் செல்லாமல் அந்த இடத்திலேயே அந்தரத்தில் மிதப்பதைக் காணலாம்.
# பந்து அந்திரத்தில் மிதக்கவும் அது வேறு திசைக்குச் செல்லாமல் இருக்கவும் என்ன காரணம்?

காரணம்

இந்தச் சோதனையில் பந்து அந்தரத்தில் மிதக்க பெர்னோலி தத்துவமே காரணம். ஒரு வாயு அல்லது திரவம் எங்கே வேகமாகப் பாய்கிறதோ அங்கு அழுத்தம் குறையும். இதுவே பெர்னோலி தத்துவம். உறிஞ்சு குழல் வழியாகக் காற்றை ஊதும்போது, காற்றின் திசைவேகம் உறிஞ்சு குழலில் அதிகமாக இருப்பதால், பெர்னோலி தத்துவப்படி அங்கு காற்றழுத்தம் குறைந்துவிடுகிறது.

ஆனால், பந்தின் வெளிப்புறத்தில் காற்றழுத்தம் அதிகமாக இருக்கும். பந்தின் வெளிப்புறத்தில் உள்ள அதிகக் காற்றழுத்தத்தைச் சமப்படுத்த, கீழே உள்ள குறைந்த அழுத்தமுள்ள காற்றானது மேல் நோக்கிச் செல்லும். அப்படிச் செல்லும்போது பந்தை அது மிதக்க வைக்கிறது. காற்று பந்தைச் சுற்றி வேகமாகப் பரவும்போது அங்கே குறைந்த காற்றழுத்தம் உண்டாகி, பந்தை வேறு எங்கும் செல்ல விடாமல் தடுத்து மிதக்கவும் வைக்கிறது.அறிவியல் மேஜிக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x