Published : 12 Nov 2019 01:01 PM
Last Updated : 12 Nov 2019 01:01 PM

பானி பூரி பையனின் இரட்டை சதம்!

ஆசாத்

இலக்கை அடையவேண்டும் என்ற ஈடுபாடும் தன்னம் பிக்கையும் இருந்தால், சாதிக்க வறுமை தடையாக இருக்காது என்பதை நிரூபித்திருக்கிறார் யஷாஸ்வி ஜெய்ஸ்வால். சாலையோரத்தில் பானிபூரி விற்ற இவர், இன்று கிரிக்கெட்டில் எகிறி அடித்து சாதித்திருக்கிறார்.

அண்மையில் மும்பையில் 19 வயதுக்குட்பட்டடோருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வீரர் ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 203 ரன் குவித்தார். இந்தியாவில் 16 வயதில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார் யஷாஸ்வி. இந்த இரட்டைச் சதம் மூலம் உலகளவில் தென் ஆப்பிரிக்க வீரர் ஆலன் பாரோவின் சாதனையை முறியடித்துள்ளார் யஷாஸ்வி.

தன்னுடைய அபார ஆட்டத்தால் கவனம் ஈர்த்துள்ள யஷாஸ்வி தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யஷாஸ்வி இந்த நிலையை அடைய பல தடைகளையும் துன்பங்களையும் கடந்திருக்கிறார் என்பதுதான் நமக்கான பாடம்.

கனவை நிஜமாக்கியவர்

உத்தரப் பிரதேசத்தில் பிறந்த யஷாஸ்வி, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுவயது முதலே சச்சின், விராட் கோலிபோல் ஆக வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால், அந்தக் கனவு எளிதில் அடையகூடியது அல்ல என்பதை அவர் விரைவிலேயே புரிந்துகொண்டார். உறவினர் ஒருவரின் கடை ஒன்றில் வேலை பார்த்துகொண்டே கிரிக்கெட் பயிற்சிக்கும் செல்லத் தொடங்கினார்.

“ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு எழுந்துவிடுவேன். கடையில் வேலை முடிந்ததும் பயிற்சிக்கு சென்றுவிடுவேன். பயிற்சி முடித்து வந்த பிறகு இரவு முழுவதும் வேலைதான். ஆனால், களைப்பில் சரியாக வேலைச் செய்ய முடியாமல் போகவே யஷாஸ்வியை கடையிலிருந்து விரட்டிவிட்டார்கள்.

திக்கு தெரியாமல் அலைந்த யஷாஸ்வி, ஆசாத் மைதானத்தில் இருந்த முஸ்லிம் யுனைடெட் கிரிக்கெட் கிளப்புக்கு சென்றுள்ளார். அங்கு தங்க வேண்டும் என்றால் அவர்களின் கிளப்புக்காக ஆடி ஜெயிக்க வேண்டும் என்ற நிலை. அதை ஏற்று யஷாஸ்வி போட்டியில் ஜெயித்தார். தங்குவதற்குக் கட்டணமாக மற்றவர்களுக்கு உணவு தயாரிப்பது, துணிகளை துவைப்பது, இடத்தைக் கூட்டிப் பெருக்குவது என கிளப் வேலைக்காரராகவே மாறிபோனார் யஷாஸ்வி.

சச்சினின் வாழ்த்து

“மின்சார வசதி, கழிவறை என எதுவுமே அந்த கிளப்பில் கிடையாது. மழைக்காலத்தில் கூடாரத்துக்குள் தண்ணீர் வந்துவிடும். அந்த நாட்களில் விடியவிடிய விழித்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் கிரிக்கெட்டுக்காகப் பொறுத்துக்கொண்டேன்” எனும் யஷாஸ்வி தன்னுடைய தேவைகளுக்காக பானிபூரி விற்றும், ஹோட்டல்களில் வேலை செய்யவும் தயங்கவில்லை.

யஷாஸ்வியின் பேட்டிங் திறமையைக் கண்டு உள்ளூர் கிரிக்கெட் நடுவர் ஜூவாலா உதவினார். அதன் பிறகுதான் யஷாஸ்வியின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. யஷாஸ்வியின் திறமையைக் கண்டு வியந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கிரிக்கெட் மட்டையைப் பரிசளித்து, “கிரிக்கெட்டை நூறு சதவீதம் ஈடுபாட்டுடன் விளையாடு” என வாழ்த்தியுள்ளார்.

சச்சினை போல் ஆக வேண்டும் என்று கனவு கண்ட யஷாஸ்வி, இன்று சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இருக்கும் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் வீரராக இருக்கிறார். அதன் பின்னணியில் யஷாஸ்வியின் உழைப்பு அபாரமானது, நமக்கெல்லாம் பாடமானது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x