Published : 12 Nov 2019 12:28 PM
Last Updated : 12 Nov 2019 12:28 PM

விசில் போடு 05: கஞ்சாம்பட்டி கதை கேளு!

‘தோட்டா’ ஜெகன்

சிக்கனம் என்பது வேறு; கஞ்சத்தனம் என்பது வேறு. நாம் செய்யும் செலவுக்கு நியாயமான காரணம் இருந்தால் அதுதான் சிக்கனம். அவசியமான செலவைக்கூட அநாவசியமான்னு நினைப்பதே கஞ்சத்தனம். சீனப் பெருஞ்சுவர் நீளத்தைவிடப் பலரோட கஞ்சத்தனத்தோட ஆழம் அதிகம்.

தாயம் உருட்டி நாட்டைக் கோட்டை விட்டவங்க பஞ்சபாண்டவர்கள். கைல காயம் பட்டாக்கூட பைல இருந்து பைசா எடுக்காதவங்க நம்ம கஞ்சபாண்டவர்கள். அன்லிமிடெட் நெட் பேக் போட்டாலும் இவங்க அதை ஆஃப் பண்ணிதான் வைப்பாங்க, ஹனிமூன் போனாக்கூடச் செலவாகுமேன்னு தனியாத்தான் போவாங்க.

பொணம் பணம்

அவனவன் ஏழு நாளுக்கும் ஏழு காய் வாங்கி குழம்பு வைப்பான். ஆனா, இவங்க தயிர், ஊறுகாய் வச்சே வாரத்தை ஓட்டிடுவாங்க. ஐயாயிரம் ரூவா செலவு பண்ணி ஊட்டிக்குப் போயிட்டு, அம்பது ரூபா நுழைவுக் கட்டணம் எடுக்க மனசில்லாம பொட்டானிக்கல் கார்டனைப் பார்க்காம வர கேரக்டர்தான் நம்மாளுங்க. கடிச்ச கொசுவைத் தேடிப் பிடிச்சு, அந்தக் கொசுவைத் திருப்பி அடிச்சு, அது குடிச்ச ரத்தத்தைத் திரும்ப எடுக்காம விடமாட்டாங்க இந்தக் கஞ்சாமுட்டி கண்ணியவான்கள். பொணம் கூடப் புதைகுழில இருந்து எழுந்து வந்திடும், ஆனா இவங்க பர்ஸ்ல இருந்து பணம் மட்டும் வெளியே வரவே வராது.

கிலோல வாங்க வேண்டிய பொருட்களை யெல்லாம் கிராம்ல வாங்குவாங்க. கோடைக் காலத்துலகூட ஏசி போடாம, கதவு ஜன்னல திறந்து வச்சு தூங்குவாங்க, செல்போனுக்கு ஒரு பவர் பேங்க் வாங்கக்கூட என்னமோ பஞ்சாப் நேஷனல் பேங்கையே வாங்குற மாதிரி யோசிப்பாங்க. ஹோட்டலுக்கு போனா மெனு கார்டுல எது விலை குறைவோ, அதைத்தான் வாசிப்பாங்க.

அக்கா பாப்பாவுக்கு எடுத்த பாவாடைய தங்கச்சிப் பாப்பாவுக்குப் போட்டுடு வாங்க. தவறி தம்பி பாப்பாவா பொறந் துட்டா, பாவாடைக்கு நடுவுல தையலைப் போட்டு பேன்ட்டா மாட்டிவிடுவாங்க. ஹோட்டலுக் குப் போனா, குழந்தைங்க கேட்கிறதை வாங்கித் தந்துட்டு, இவங்க 2 இட்லிய நாலு லிட்டர் சாம்பார்ல முக்கி முக்கி தின்னுக்கிட்டு இருப்பாங்க. தீபாவளிக்குப் புது டிரஸ்னு முண்டா பனியனும் மூணு மீட்டர் லுங்கியுமா வாசல்ல நிப்பாங்க.

விதவிதமா கஞ்சூஸ்

காரம் அதிகமானா வீட்டு சாம்பாருல தண்ணி ஊத்துவாங்க, கும்பல் அதிகமானா ஹோட்டல் சால்னால தண்ணி ஊத்துவாங்க, ஆனா தீர்ந்து போன ஷாம்பூ பாட்டில்ல தீபாவளி அன்னைக்கு தண்ணிய ஊத்தி அதைக் கார்த்திகை தீபம் வரை பயன்படுத்துற கெமிக்கல் இன்ஜினீயர்ஸ்தான் நம்ம கஞ்சூஸ். கம்யூனிச பாடம் எடுத்தவரு கார்ல் மார்க்ஸ்ன்னா, அவருக்கே கஞ்சத்தனத்துல காமர்ஸ் கிளாஸ் எடுப்பாங்க நம்ம கஞ்சப்பர்ஸ்.

பத்து ரூபாய்க்கு விற்குது பல்லு விளக்குற பிரஷு. இவங்க அதை மாசத்துக்கு ஒரு தடவை மாத்த கணக்குப் பார்த்துட்டு, கடிச்சு கடிச்சே பல்லு விளக்குற பிரஷை, முடி சீவுற முள்ளு வச்ச சீப்பட்டாம் மாத்தி வச்சிருப்பாங்க. தலைல இருந்த நாரெல்லாம் போயி, பட்டுப்போன தென்னைமரத்து வேர் மாதிரி கிடந்தாலும், டூத் பிரஷை மாத்த மாட்டாங்க.

முதல் பத்து நாள் கவலையில்லாம இருக்கிற பேஸ்ட்டு, கடைசி பத்து நாள் பயாலஜி லேப் தவளையாகிடும். தலையை அறுத்து, வயித்தைக் கிழித்து, அடில அதக்கி, வயித்துல வதக்கி, உள்ளாற ஒரு பொட்டு பேஸ்ட் இல்லாம மொத்தமா பிதுக்கிடுவானுங்க. இந்த பேஸ்ட் பிரஷ் செலவை மிச்சப்படுத்தி புல்லட் ரயில்லாய்யா வாங்கப் போறீங்க?

எஸ்.டி.ஆர், டி.ஆர்.

அஞ்சு ரூபாய்க்கு இஞ்சி வாங்கி அதை 50 நாளுக்குக் குட்டியா வெட்டி வெட்டி பயன்படுத்துறதா இருக்கட்டும், 10 ரூபாய்க்கு பேட்டரி மாத்த சங்கடப்பட்டுக்கிட்டு ரிமோட்டைத் தட்டி தட்டி பயன்படுத்தறதா இருக்கட்டும், கஞ்சத்தனம்னு வந்துட்டா கின்னஸ் ரெகார்ட் ஹோல்டர்ஸ் நம்மாளுங்க தான். 30 ரூபா கொடுத்து ஷேவிங் செய்ய கஞ்சத்தனப்படுவாங்க. மாசத்துல முதல் வாரம் க்ளீன் சேவ் செஞ்சு மன்மதன் எஸ்.டி.ஆர் மாதிரியும், மாசத்துல கடைசி வாரம் மைதிலி என்னை காதலி டி.ஆர் மாதிரியும் காட்சி கொடுக்க நம்ம கஞ்சத்தன கிங்ஸாதான் முடியும்.

கபடி ஆடுறதுக்கு முன்னால கட்டம் போடுறது மாதிரி, திருட போறவங்க திருடறதுக்கு முன்னால திட்டம் போடுற மாதிரி, நல்லதா நாலு டிரஸ் வாங்க நாலு கடைய வட்டம் போடலாம், தப்பில்ல. ஆனா, சமந்தா காலத்துலயும், சரோஜாதேவி போட்டிருந்த சேலை டிசைன்ஸ் விக்கிற கடையா தேடிப்பிடிச்சு விலை குறைவா இருக்கேன்னு சட்டை பேண்ட் வாங்குவாங்க. ஆனா, தண்ணில ஊறப்போட்ட ஒரு மணி நேரத்துல சட்டை சுருங்கி ஜாக்கெட்டாகிடும், பேன்ட் 10 இன்ச் பாக்கெட்டாகிடும்.

குடும்பமே ரோப்கார்ல பழனி மலை ஏறலாம்னு சொல்லும், டிக்கெட் செலவைப் பார்த்துட்டு, பாதயாத்திரையா கனவுல வரச்சொன்னாருன்னு இவனுங்க பழனியாண்டவரையே மாட்டி விட்டுடுவாங்க. தர்மம் செய்ங்க சாமின்னு பிச்சைக்காரர் கிட்டக்க வந்தா, நானும் உன்ன மாதிரிதான்னு தோள்ல கை போட்டு தாட்டிவிட்டுடுவாங்க. குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு சினிமாவுக்குப் போறதும், கொள்ளைக்காரனைக் கூட்டியாந்து வீட்டுக்கு வெள்ளையடிக்க விடுறதும் ஒண்ணுதான்.

அதுக்காக வாரத்துக்கு நாலு படம் கூட்டிபோகாட்டியும், வருஷத்துக்கு நாலு படம் கூட்டிபோகலாம்ல. திருவிழா மாதிரி தியேட்டருக்குக் கூட்டிபோறதை, முந்நூறு ரூபாய்க்குக் கணக்குப் பார்த்து விட்டுட்டு, 30 ரூபாய்க்கு தியேட்டர் பிரிண்ட்ல திருட்டு டிவிடி வாங்கி, ஏன்டா கேமராவை கார்னர்ல வச்சு எடுத்தீங்கன்னு கவலைப்பட்டுக்கிட்டு படுப்பாங்க. தலைவலி வயித்துவலியா, காதுவலி, கண்வலியா, இவ்வளவு ஏன், டெங்கு காய்ச்சலே வந்தாலும், நமக்கு மெடிக்கல் ஷாப்தான் மருத்துவமனைன்னு ரஃப்பா நிப்பாங்க.

'பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் - எண்ணப் படுவதொன்று அன்று' என்கிறார் வள்ளுவர். சிம்பிளா விளக்கணும்னா, கடல் தண்ணிய வடிகட்டினா உப்பு, கருமியா காசை வடிக்கட்டினா மிகப் பெரிய தப்பு. பொருளாதாரத்தில் புகுந்த கிருமிகள் போன்ற கருமிகளே, ஏரோபிளேன்ல ஏறிட்டோம்னு எருமை போடாம இருக்காது சாணம், இருட்டும் இடியுமா இருந்தாலும் விடியாம இருக்காது வானம், எல்லாத்துலயும் கஞ்சத்தனம் பண்றவங்களுக்குப் போகாம இருக்காது மானம்!

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x