Published : 12 Nov 2019 12:06 PM
Last Updated : 12 Nov 2019 12:06 PM

அறிவியலை அனைவருக்குமானதாக்க முயலும் குரல்கள்

நந்து

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 10 அன்று ‘அமைதி - வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள்’ ஆக ஐ.நா. அவை கடைப்பிடிக்கிறது. அமைதியான உலகை உருவாக்குவதில் அறிவியலின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த நாளின் நோக்கம். உலக அமைதிக்கு அறிவியல் பயன்பட முடியும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது?

ஏனென்றால், மனித குலத்துக்கும் இந்த உலகுக்கும் நன்மைகள் மட்டுமின்றி தீமைகள் நிகழவும் அறிவியல் காரணமாக இருந்துள்ளது. கொடும் நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பதற்கான மருத்துவத்தைக் கொடுத்த அறிவியல்தான் மனிதர்களைக் கொத்துக்கொத்தாய்க் கொல்வதற்கு வழிசெய்யும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கவும் காரணமாக இருந்தது.

எனவே, அறிவியலின் பிரச்சினைகள், போதாமைகள் ஆகியவற்றால் நிகழ்ந்த தீமைகளைப் பற்றிப் பேச வேண்டிய தேவை எழுகிறது. இது அறிவியலின் மகத்துவத்தை மறுதலிப்பதற்காக அல்ல; மாறாக, மனித குலத்தின் மகத்தான அறிவு வளர்ச்சியின் விளைவான அறிவியல், மனிதரையும் உலகையும் இன்னும் மேம்பட்டதாக ஆக்க வேண்டும் என்பதற்கான முயற்சியே. அந்த முயற்சிகளை அழுத்தமாகப் பிரதிபலித்த சில புத்தகங்களைப் பார்ப்போம்.

Science, Development and Violence: The Revolt Against Modernity by Claude Alvares; Oxford India Paperbacks

அறிவியலும் அதனால் சாத்தியமான வளர்ச்சியும் நவீனத்துவமும் மனித குலத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, பெரு நிறுவனங்கள் இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கும் பண்பாட்டுத் தாக்குதல் நிகழ்த்துவதற்குமான முகமுடியாக அமைவதை இந்த நூல் விளக்குகிறது.

பல்வேறு உண்மை நிகழ்வுகள், அதிகாரபூர்வ தரவுகள் ஆகியவற்றைக் கொண்டு தன் வாதங்களை நிறுவும் ஆசிரியர், கோவாவைச் சேர்ந்த சூழலியலாளர் கிளாட் ஆல்வரஸ். உண்மையான அறிவியல் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மாற்று வடிவங்களையும் முன்வைத்திருக்கிறார். சூழலியல், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், அறிவியல் ஆர்வலர்களும் வாசிக்க வேண்டிய நூல் இது.

The Violence of Green Revolution by Vandana Shiva; University Press of Kentucky

சூழலியல், உணவுத் தற்சார்பு, உலகமயமாக்கல் எதிர்ப்பு ஆகிய தளங்களில் தொடர்ந்து பணியாற்றிவரும் அறிஞரும் செயற்பட்டாளருமான வந்தனா சிவா எழுதிய குறிப்பிடத்தக்க நூல் இது. இந்தியாவில் உணவுத் தன்னிறைவைக்கு வித்திட்டதாகச் சொல்லப்படும் பசுமைப் புரட்சி, இந்தியர்களின் பசியைப் போக்கியதில் பெரும்பங்காற்றியது உண்மைதான்.

அதேநேரம், அது உணவு உற்பத்தியில் ஒற்றைத் தன்மைக் கலாச்சாரத்தை திணித்தது; வேளாண்மையை வணிகமயமாக்கியது; சூழலியல் சீர்கேடுகளுக்கும் வித்திட்டது. இந்தத் தீய விளைவுகளை ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ என்றழைக்கும் வந்தனா சிவா, சூழலியல் சீர்கேடுகளுக்கும் வறுமைக்கும் இடையிலான நுட்பமான உறவை இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார்.

A Carnival for Science: Essays on Science, Technology, and Development by Shiv Visvanathan; Oxford University Press

புகழ்பெற்ற அறிஞரும் கல்வியாளருமான ஷிவ் விஸ்வநாதன், அறிவியல், தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சிக்குப் பெரும்பங்களித்தவர். அறிவியல், தொழில்நுட்பம், வளர்ச்சி ஆகியவை தொடர்பாக இவர் எழுதிய ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இது. அறிவியல் குறித்த உலகப் பார்வை வன்முறை சார்ந்ததாக இருப்பதை விஸ்வநாதனின் கட்டுரைகள் விளக்குகின்றன.

அறிவியலும் அதன் வன்முறையுமே இந்தப் புத்தகத்திலுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் ஒன்றிணைக்கும் புள்ளியாக இருக்கிறது. அத்துடன், வளர்ச்சி என்பது எப்போதும் மனிதநேயம் சார்ந்ததாக இருப்பதில்லை; அதன் பெயரால் பெரும்பாலும் அழிவுகளே நிகழ்த்தப்படுவதாக விளக்குகிறார். அணு சக்தியின் வரலாற்றையும் உள்ளடக்கி இந்த நூல் அமைந்திருக்கிறது.

Inferior: How Science Got Women Wrong by Angela Saini; Fourth Estate Books

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஏஞ்சலா சைனி. நூற்றாண்டுகளாகப் பெண்கள் குறித்த கற்பிதங்களுக்கும் பாலின சமத்துவமின்மைக்கும் அறிவியலும் அறிவியல் ஆராய்ச்சியும் பங்களித்திருப்பதை இந்த நூல் விளக்குகிறது. அறிவியலாளர்களின் பரிசோதனைகளையும் பேட்டிகளையும் மறுவாசிப்பு செய்திருக்கும் சைனி, அவற்றின் மூலம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள ஆண்-பெண் இருமைகளை, அது சார்ந்த கற்பிதங்களை உடைத்திருக்கிறார்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு அறிவு வளர்ச்சி குறைவு என்ற கருத்தை முன்வைத்த முன்னணி அறிவியலாளர்களையும் சைனி விமர்சித்துள்ளார். பெண்கள் உயர்கல்வி பயில்வதற்காக மேற்கொள்வதில் உள்ள சிரமங்கள், அவர்களின் மகப்பேற்றுத் திறனைப் பாதிக்கும் என்று நம்பிய மருத்துவர்கள் முதல் மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில் பில் கிளிண்டனின் செயல்பாடுகளை உளவியல்ரீதியாக நியாயப்படுத்த முயன்ற ஸ்டீவன் பிங்கர் வரை அறிவியல் போர்வையுடன் வரும் ஆண்மையவாதக் கற்பிதங்கள் அனைத்தையும் ஆதாரபூர்வமாக இவர் மறுத்துள்ளார்.

Lilavati’s Daughters: The Women Scientists of India edited by Rohini Godbole, Ram Ramaswamy; Indian Academy of Sciences

அறிவியல் முன்னேற்றம் பாலின சமத்துவத்துக்குப் பெரிதாகப் பங்களிக்காததன் விளைவாக, அறிவியல் துறையில் பெண்கள் முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. இந்திய அறிவியல் அமைப்புகளில் பெண் அறிவியலாளர்கள் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கின்றனர். இந்த நிலையில் பெண் அறிவியலாளர்களை அறிமுகப்படுத்தும் இந்த நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இ.க.ஜானகி அம்மாள், அசீமா சாட்டர்ஜி, ஆனந்திபாய் ஜோஷி, ஐராவதி கார்வே, கமல் ரணதிவே, தர்ஷன் ரங்கநாதன், அன்னா மணி உள்ளிட்ட 100 இந்தியப் பெண் அறிவியலாளர்கள் வாழ்க்கையை, அவர்களுடைய போராட்டங்களைப் படம்பிடித்துக்காட்டும் கட்டுரைகளைக் கொண்ட புத்தகம் இது. அறிவியல் துறையில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதும், அவர்களது பங்களிப்பு மறைக்கப்படுவதும், துறையில் பெரும் உயரங்களை அடைவதைத் தடைசெய்யும் காரணிகள் உள்ளிட்ட பல விஷயங்களின் மீதும் ஒளிபாய்ச்சுகிறது இந்தப் புத்தகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x