Published : 11 Nov 2019 12:58 PM
Last Updated : 11 Nov 2019 12:58 PM

பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

பேராசிரியர் ப.பரமசிவம்
paramasivam_aec@kia.ac.in

பேராசிரியர் ம.உமாநாத்
umanath@mids.ac.in

பேராசிரியர் வெ.சரவணகுமார்
sharanu2k@gmail.com

சர்வதேச வர்த்தகம் என்பது உள்நாட்டில் கிடைக்காத பொருள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வோருக்கும் மற்றும் நுகர்வோருக்குமான சந்தையை விரிவுபடுத்த நாடுகளுக்கு உதவுகிறது. நாடுகளுக்கிடையே பொருள்களை சந்தைப்படுத்துவதில் சீரான போட்டி இருப்பதால், சர்வதேச சந்தையானது நுகர்வோருக்கு மலிவான விலையில் பொருளை வீட்டுக்கு கொண்டு வர உதவி புரிகிறது.

மேலும் இது நாடுகளுக்கிடையேயான உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றத்தை துரிதப் படுத்தவும், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படாத பொருட்கள், இல்லாத சேவைகள் அல்லது உள்நாட்டில் ஒரு பொருளின் மதிப்பு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்பட்சத்தில் வர்த்தகம் சீரான நிலையில் நடைபெறவும் சர்வதேச
சந்தை ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. இவ்வாறு, சர்வதேச வர்த்தகம் ஒரு உலகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது.

இதில் வரத்து மற்றும் தேவை, ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படும் பொருட்களின் விலைகள் உலகளாவிய பல நிகழ்வுகளால் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, உலகின் ஏதோ ஒரு பகுதியில் அல்லது ஏதோ ஒரு நாட்டில் ஏற்படும் பருவநிலை மாறுபாடு, தொழில் புரட்சி, சுற்றுலா மேம்பாடு, கட்டமைப்பு வசதிகள், பொருளாதார கொள்கைகள் , அரசியல் கொள்கை முடிவுகள் போன்றவை ஒரு பொருளுக்கான விலையை நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன.

சர்வதேச சந்தையில் ஈடுபடும் நாடுகள் பல கட்டுப்பாடுகளைக் கொண்டு செயல்படும். சர்வதேச வர்த்தகத்தில் கட்டுப்பாடு குறித்து இரண்டு மாறுபட்ட கருத்துகள் உள்ளன: 1. தடையற்ற வர்த்தகம் (Free trade) 2. பாதுகாப்பான வர்த்தகம் (Protectionism). தடையற்ற வர்த்தகத்தின் எளிமையான கோட்பாடுகள் வரத்து மற்றும் தேவை ஆகிய சந்தை காரணிகள் மூலம் உலக உற்பத்தி திறன் மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்க செய்யும். தடையற்ற வர்த்தகத்தில், சந்தைக் காரணிகள் தானாகவே செயல்பட்டு சீராக வைத்திருக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் (Invisible hands) என பொருளாதார மேதையான ஆடம் ஸ்மித் வரையறுத்து வழிமொழிந்துள்ளார்.

இதற்கு நேர்மாறாக, சந்தைகள் ஒழுங்காக செயல்படுவதை உறுதிசெய்ய சர்வதேச வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது முக்கியம் என்று பாதுகாப்பு வர்த்தக கோட்பாடு வரையறுக்கிறது. அதாவது, சந்தையானது யாருக்கேனும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருந்தால், அதற்கேற்ப சந்தைக்கு வழிகாட்டும் பாதுகாப்பு அளவீடுகளான இறக்குமதி ஏற்றுமதி கட்டணங்களை விதிப்பது, வரியில்லா தடைகளை அமல்படுத்துவது, மானியங்கள் கொடுப்பது மற்றும் ஒதுக்கீடுகள் செய்வது மூலம் செயல்படுத்துவதாகும்.

இரண்டாம் உலகப்போருக்கு முன்

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை உலக நாடுகள் சர்வதேச சந்தையை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு வர்த்தகத்தை ஒரு கருவியாக பயன்படுத்தின. அதன் பிறகு, கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான GATT ஒப்பந்தம் (General Agreement on Tariffs and Trade) 1947-ல் உருவாக்கப்பட்டது, இது உலகின் மிக முக்கியமான பலதரப்பு (Multilateral) வர்த்தக ஏற்பாடாகவும் மாறியது. மேலும், சோவியத் யூனியன் உடைந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் சில மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கியது.

1990 களில், மத்திய கிழக்கு நாடுகளுடன் சில இருதரப்பு (Bilateral) வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது. அமெரிக்கா தனது சொந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, 1985-ல் இஸ்ரேலுடன் இருதரப்பு ஒப்பந்தத்தை உருவாக்கியது, அத்துடன் 1990-களின் முற்பகுதியில் மெக்ஸிகோ மற்றும் கனடா மற்றும் வட அமெரிக்க நாடுகளின் முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தம் (NAFTA-North American Free Trade Agreement): தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலும் பல குறிப்பிடத்தக்க பிராந்திய ஒப்பந்தங்கள் தொடங்கப்பட்டன.

NAFTA-வின் விதிமுறைகளின் படி, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகியவற்றின் சர்வதேச வர்த்தகத்தின் மீதான அனைத்து கட்டணங்களையும் விலக்கிக் கொள்ளவும், கட்டுப்பாடுகளை குறைக்கவும் ஒப்புக்கொண்டன. ஐரோப்பிய ஒன்றியம் (EU) உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்
களை இன்றும் கொண்டுள்ளது. இத்தகைய இருதரப்பு அல்லது பிராந்திய ஏற்பாடுகளின் பெரும் நன்மை உறுப்பு நாடுகளுக்கிடையே அதிக அளவு தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவித்து உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு பெரும் பயனை ஈட்டுவதாக அமைந்தது.

இதேபோன்று, தெற்காசிய நாடுகளின் வர்த்தக அமைப்பு (SAFTA), டொமினிக்கன் குடியரசு - மத்திய அமெரிக்கா வர்த்தக அமைப்பு (CAFTA-DR) போன்றவை தடையற்ற சர்வதேச வர்த்தகத்துக்கான சிறந்த உதாரணங்களாகும். இதேபோல் குறிப்பிட்ட சில ஆசிய நாடுகளை மட்டும் உள்ளடக்கி உருவான ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்தான் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership).

RCEP என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ASEAN) 10 உறுப்பு நாடுகளுக்கும் (புருனே, கம்போடியா, இந்தோ னேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப் பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்) ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஆறு தடையற்ற வர்த்தக ஒப்பந்த (FTA -Free Trade Agreements) நாடுகளான சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கும் இடையிலான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தமானது பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் விவாதிக்கப்பட்டு 16 நாடுகளை கொண்ட உலகின் ‘மிகப்பெரிய’ பிராந்திய வர்த்தக ஒப்பந்தமாகும். இந்த உறுப்பு நாடுகளின் மக்கள் தொகையானது கிட்டத்தட்ட உலக மக்கள்தொகையில் பாதியை கொண்டுள்ளது. மேலும், உலக ஏற்றுமதியில் கால் பங்கும், உலகளாவிய மொத்த உற்பத்தியில் 39 சதவீதத்தையும், அந்நிய நேரடி முதலீட்டில் 26 சதவீதத்தையும் இந்த உறுப்பு நாடுகள் ஆக்கிரமித்துள்ளன.

இந்த RCEP ஒப்பந்தத்தின் நோக்கம் 16 நாடுகளிலும் ‘ஒருங்கிணைந்த சந்தையை’ உருவாக்கி அதன் மூலம் அனைத்து உறுப்பு நாடுகளின் உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகளை உறுப்பு நாடுகளின் உற்பத்தியாளர்களுக்கு மற்றும் நுகர்வோர்களுக்கு எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கச்செய்வதாகும். அயல்நாட்டு உற்பத்திப் பொருள் மற்றும் சேவை, அந்நிய முதலீடு தொடர்பான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, அறிவுசார் சொத்து, சட்ட வரைவு, நிறுவனமயமாக்கல் சம்பத்தப்பட்ட முக்கிய பிற சிக்கல்களை களைவது இந்த RCEP ஒப்பந்தத்தின் கூறுகளாகும்.

மேலும், உற்பத்தி பொருள் வர்த்தகத்தில் வரிகட்டணத்தை படிப்படியாக குறைப்பதை நோக்கமாக கொண்டு தாராள மற்றும் தடையில்லா வர்த்தகத்தை உறுப்பு நாடுகளுக்கு பரப்புவதும், சேவை வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கிடையேயான வர்த்தக கட்டுப்பாடுகள், பாரபட்ச நடவடிக்கைகளை களைவதும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை உறுப்பு நாடுகளுக்கு நல்குவதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம்களாகும். அந்நிய முதலீட்டை பொறுத்தமட்டில், பிராந்தியத்தில் தாராளமயமான, வசதியான மற்றும் போட்டி முதலீட்டு சூழலை உருவாக்குவதாகும்.

பேச்சுவார்த்தை மூலம் பாதுகாப்பு வசதி மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகளை உருவாக்குவதற்கு பல கட்ட பேச்சுவார்த்தைகள் பல்வேறு மாநாடுகளிலும், சந்திப்புகளிலும் விவாதிக்கப்பட்டன. தற்போது RCEP மூன்றாவது உச்சி மாநாடு பாங்காக், தாய்லாந்தில் நடைபெற்றது. தாராள மற்றும் தடையில்லா வர்த்தகத்துக்கான உடன்படிக்கையை பின்பற்ற இந்திய உட்பட 16 நாடுகள் கூடின.

இந்தியாவைத் தவிர அனைத்து RCEP பங்கேற்பு நாடுகளும், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் அனைத்து 20 அத்தியாயங்களுக்கும், அவற்றின் சந்தை அணுகல் சிக்கல்களுக்கும் அடிப்படையான பேச்சு வார்த்தைகளை முடித்துவிட்டன. மேலும் அவை 2020-ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தை அமல்படுத்தவும் தயாராக இருக்கின்றன என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா இந்த உடன்படிக்கையில் பின்வாங்குவதற்கு ஏற்கெனவே நிலுவையில் உள்ள அதிக இறக்குமதி பொருட்களுக்கு எதிரான போதிய பாதுகாப்பின்மையே காரணம். ஏனெனில் மலிவான விலையில் சீனப்பொருள்கள் இந்தியசந்தையில் பெருமளவு ஆக்கிரமித்துக்கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.

RCEP-ன் தோற்ற விதிமுறைகளை உறுப்பு நாடுகள் எளிதில் மீறுவதற்கு ஏதுவாக உள்ளதாலும், இதனால் உறுப்பு நாடுகளுக்கு இடையே மறைமுக இருதரப்பு ஒப்பந்தங்கள் ஏற்பட்டு, இந்திய உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படலாம் என்பதாலும், இந்தியா, RCEP-ன் தோற்ற விதிமுறைகளை பாதுகாக்க சில மாற்றங்களை ஏற்படுத்த வலியுறுத்தியது.

குறிப்பாக, விவசாயிகள், பால் பொருள் உற்பத்தியாளர்கள், நெசவுத்தொழில் மற்றும் மின்னணு சம்பந்தப்பட்ட தொழில்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இதனால், இந்தியா குறிப்பிட்ட வரம்பை மீறி வரும் இறக்குமதியை தடுக்கும் பொருட்டு, இறக்குமதி பொருட்களின் மீது வரி கட்டணத்தை விதிக்க ஒரு தானியங்கி கட்டமைப்பு (auto-trigger mechanism) இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறது.

மேலும் சந்தை அளவை அதிகப்படுத்துவதற்கான கோரிக்கை குறித்தும், கட்டணமில்லாத தடைகள் குறித்தும் அதன் பிரச்சினைகள் குறித்தும் நம்பகமான உத்திரவாதங்கள் இல்லையென இந்தியா எண்ணுகிறது. ஆனால், சீனா போன்ற RCEP பங்கேற்பாளர்கள் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பதைத் தடுக்க கடந்த காலங்களில் கட்டணமில்லாத தடைகளைப் (non-tariff barriers) பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. மேலும், பொருட்களின் மீதான இறக்குமதி வரி கட்டணங்களை குறைப்பது மற்றும் நீக்குவது குறித்தும் மற்றும் அதனால் விளையும் பாதிப்புகள் குறித்தும் இந்தியா பலமுறை அதன் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ASEAN-அமைப்பிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு இந்திய மதிப்பை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியா ஏற்கனவே 2009 முதல் ஆசியான் நாடான தென் கொரியா மற்றும் 2011 முதல் ஜப்பான் ஆகியவற்றுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 2014-15 மற்றும் 2018-19 க்கு இடையில், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை (Trade-deficit) ASEAN-னுடன் 13 பில்லியன் டாலரிலிருந்து 22 பில்லியன் டாலராகவும், தென் கொரியாவுடன் 9 பில்லியன் டாலரிலிருந்து 12 பில்லியன் டாலராகவும், ஜப்பானுடன் 5 பில்லியன் டாலரிலிருந்து 8 பில்லியன் டாலராகவும் அதி
கரித்துள்ளது.

வெளிப்படையாக, இந்த ஒப்பந்தங்கள் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிக்க வழிவகுத்தன. அதே காலகட்டத்தில், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 48 பில்லியன் டாலரிலிருந்து 54 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் 8 பில்லியன் டாலரிலிருந்து 9 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஆக, 2018-19 ஆம் ஆண்டில், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதன் சாத்தியமான RCEP நாடுகளுடன் மட்டும் 105 பில்லியன் டாலராக இருந்தது. இதுபோக ஏற்கெனவே இந்தியாவின் வணிக பற்றாக்குறை 14.95 பில்லியன் டாலராக உள்ளது. மேலும் RCEP உடன்படிக்கையில் கையெழுத்திட்டால் 80-90 சதவிகித வரியை குறைக்க நேரிடும். இது இந்தியாவில் உள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களை வெகுவாக பாதிக்கும்.

நிலமில்லா விவசாயிகளின் வாழ்வாதாரம்

RCEP ஒப்பந்தத்தால் பால்வளத் துறை மற்ற துறைகளைக் காட்டிலும் அதிக பாதிப்புக்குள்ளாகும். இத்துறையில் மட்டும் 15 கோடி பால் உற்பத்தியாளர்கள் உள்ளார்கள். இவர்களில் பெரும்பாலும் இரண்டு, மூன்று மாடுகளைக் கொண்ட சிறு குறு விவசாயிகள் மற்றும் நில
மில்லாத விவசாய தொழிலாளர்கள் ஆவர். இன்னும் குறிப்பாக சொல்வதென்றால், கால்நடை வளர்ப்புதான் பெண்கள் உட்பட பலபேருக்கு சீரான வேலைவாய்ப்பும், வருமானமும் தருவதோடு மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பால் உற்பத்தி திறனானது மிக மிக குறைவு.

உதாரணத்துக்கு ஒருநாளைக்கான தொழில் வளம் உள்ள நாடுகளின் சராசரி பால் உற்பத்தி திறன் என்பது 30 லிட்டர். ஆனால் இது இந்தியாவில் வெறும் 3 லிட்டர்தான். மேலும் சுகாதார மற்றும் பைட் டோசானிட்டரி நடவடிக்கைகள் பால் பொருட்களின் இந்திய ஏற்றுமதியை கட்டுப்படுத்துகின்றன. RCEP கூட்டமைப்பில், நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன. எனவே இந்திய பால் உற்பத்தியாளர்களின் நலனை காக்க 30% முதல் 40% வரை இறக்குமதி வரியை இந்தியா விதித்துள்ளது.

மேலும், சிறு குறு தொழில்கள் 12 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பையும், மொத்த உற்பத்தியில் 45 சதவீதமும், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சிக்கு 6.11 சதவீதத்தை தொடர்ந்து 10 சதவீத அதிகமான வளர்ச்சியை கொண்டும், 20 சதவீத கிராமப்புற சிறு-குறு தொழில்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தும் வருகிறது.

இதுபோக, நெசவுத்துறை 14 கோடி மக்களுக்கு நேரடியாகவும், 2 கோடி மக்களுக்கு மறைமுகமாகவும், மொத்த ஏற்றுமதியில் 13 சதவீத பங்கும், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சிக்கு 10 சதவீதமும், உள்நாட்டு உற்பத்திவளர்ச்சிக்கு 2 சதவீதமும் பங்காற்றி வருகிறது. RCEP உடன் படிக்கையில் இணையும் பட்சத்தில் சீனா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடும் போட்டியால் அதன் ஏற்றுமதி பொருட்கள் இந்திய சந்தையில் பெரும் பங்கை ஆக்கிரமிக்கும் போது நமது உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்கிற ஐயம் தானாகவே எழும்.

இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சினை

சீனாவைத் தவிர்த்து, மற்ற உறுப்பு நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் சந்தை மதிப்பு சற்று பெரிதாகும். ஆனாலும், இந்திய உற்பத்தியாளர்கள் சர்வதேச சந்தையில் போட்டி போடுவதற்கு இயலவில்லை. இதற்கு காரணங்கள் பல இருந்தாலும், குறைந்த செலவு தொழில்நுட்ப உற்பத்தி முறைதான் முக்கியமான ஒன்றாகும். எனவே இந்தியா சர்வதேச சந்தையில் போட்டியிடக்கூடிய ஒரு பொருளாதார முறையை ஊக்குவிப்பது அவசியமாகிறது.

ஆனால், இதற்கான போதிய உட்கட்டமைப்புகள், தொழில்நுட்பங்கள், நிறுவன அமைப்புகள் இந்தியாவில் பற்றாக்குறையாகவே உள்ளன. சர்வதேச வர்த்தகத்தில் நமது நாட்டின் குறைவான போட்டித்தன்மையானது, இலக்கு நாடுகளில் உள்ள சுங்கவரி அல்லது கட்டணமில்லாத தடைகளினால் வருவது அல்ல. மாறாக உள்நாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றாக்குறையிலிருந்தே உருவாகின்றன. உள்நாட்டு உற்பத்தியாளர்கள், ஆற்றல், மின்சாரம், கடன் மற்றும் மூலதனத்துக்கு அதிகப்படியானச் செலவினங்களை எதிர்கொள்கின்றனர்.

சமீபகாலம் வரை, இங்குள்ள நிறுவன வரி விகிதங்கள் கூட கிழக்கு ஆசியாவுடன் ஒத்திசைக்கப்படவில்லை. இதை சரிசெய்ய, மறைமுக வரி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)யை குறைக்க வேண்டும். ஏனெனில் உலோகம் அல்லது நெசவுத் துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பிரச்சினைகள் பல படிப்பினைகளை தந்திருக்கின்றன.

மூலதன செலவு மற்றும் தற்போதைய தொழிலாளர் சட்டங்கள் போன்ற பல்வேறு தடைகள் காரணமாக உற்பத்தி அளவில் பற்றாக்குறை ஏற்படுகிறது. தொழில் துறையின் பல பகுதிகள் இன்னும் தலைகீழ் வரி கட்டமைப்புகளால் பாதிக்கப்படுகின்றன. இதில் மூலப்பொருள் அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டும், உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்பு பூஜ்ஜிய வரி விதிப்பிலும் வருகிறது. இது அயல்நாட்டு தயாரிப்பாளரை விட உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் சந்தைக்குள் விற்கும்போது அதிக வரி விதிப்பை எதிர்கொள்கிறது.

இந்தியாவில் தொழில்மயமாக்கலின் மறுமலர்ச்சிக்கு வட்டி விகிதங்கள் மற்றும் பணபரிமாற்ற வீதத்தைப் பயன்படுத்துதல், வர்த்தகக் கொள்கையை அளவீடு செய்தல், தேசிய வளர்ச்சி நோக்கங்களைத் தொடர அந்நிய முதலீட்டில் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் தொழில்துறை நிதி வழங்குதல் ஆகியவை தேவை.

ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் அல்லது சீனாவாக இருந்தாலும் ஆசியாவின் வெற்றிக் கதைகளிலிருந்து வெளிவரும் முதன்மை பாடம் இதுதான். இந்த நாடுகள் தடையற்ற வர்த்தகத்தை ஆதரிப்பது அவர்கள் தொழில் மயமாக்கலில் வெற்றி பெற்ற பின்னரே வந்தது என்பதை உணர வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடு, நுகர்வு, என பொருளாதாரத்தின் ஒவ்வொரு அங்கமும் மறுசீரமைக்கப்பட வேண்டியிருக்கிறது.

ஏற்றுமதியில் சரியான வளர்ச்சி இல்லாமல் எந்த நாடும் அதிக உற்பத்தி வளர்ச்சியை அடைய முடியாது. எனவே, 5 டிரில்லியன் டாலர் இலக்கை எட்டுவதற்கு வெற்றிகரமான ஏற்றுமதி உத்தி மற்றும் செயல்திறன் தேவை. எஃகு அல்லது அலுமினியம் போன்ற உலோகங்களின் உள்நாட்டு உற்பத்தி மலிவான சீன இறக்குமதியை எதிர்த்து நிற்பதில் ஆச்சரியமில்லை, அவை செலவு குறைபாடு இல்லை.

மென்பொருள் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு ஒரு ஒப்பீட்டு நன்மை உண்டு. ஆனால் வணிக சேவைகள், நிதி சேவைகள் அல்லது தொலைத்தொடர்பு சேவைகள் ஆகியவற்றில் சொல்லும்படியான நன்மை இல்லை. இவற்றில் மற்ற RCEP நாடுகளான ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் சீனா போன்றவை மிகவும் முன்னால் உள்ளன. முதலீட்டிலும் இதே நிலை நீடிக்கிறது.

நமது உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையான மூலதனமும் தொழில்நுட்பமும் கிடைக்க வழி வகை செய்யும் போது சர்வதேச வர்த்தக போட்டியை இந்திய உற்பத்தியாளர்களால் எளிதாக சமாளிக்க முடியும். இதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பு கூடும், வேலைவாய்ப்பும் ஏற்படும்.

மேலும் மற்ற நாடுகளுக்கு இணையாக உற்பத்தி பொருட்களின் தரத்தையும், மதிப்புக்கூட்டுதல் மற்றும் சர்வதேச சுகாதார அளவீடுகளை (Sanitary and phyto-sanitary measures) பின்பற்றுதல் போன்ற சர்வதேச சந்தைக் காரணிகளை கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்களும் அரசும் இணைந்து பணியாற்றும்போது, RCEP ஒப்பந்தம் இந்தியாவின் வர்த்தகத்தை எதிர்காலத்தில் வளர்ச்சிப் பாதையில் எடுத்துச்செல்லும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், இப்போதுவரை இந்தியா பின்வாங்கும் அளவில்தான் இருக்கிறது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x