Published : 11 Nov 2019 12:12 PM
Last Updated : 11 Nov 2019 12:12 PM

ஆயுள் காப்பீடு விஷயத்தில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது

எம்.ரமேஷ்
ramesh.m@hindutamil.co.in

இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்த போதும் ஆயுள் காப்பீட்டுத் துறையில் ஏக போக சக்ரவர்த்தியாக திகழும் ஒரே நிறுவனம் எல்ஐசி என்ற மூன்றெழுத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனம்தான். அதுமட்டுமல்லாமல் பொதுத்துறை நிறுவனங்களில் தனித்துவம் மிக்கதும், அதிக நிதி வளம் கொண்ட நிறுவன
மாகவும் அது புகழ்பெற்றது.

அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது, பங்குச் சந்தையில் முதலீடு என பரந்துபட்டு தனது உத்திசார் முதலீடுகள் மூலம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச போனஸை அளித்து வருவதும் எல்ஐசியின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.

எல்ஐசியின் மொத்தமுள்ள 8 மண்டலங்களில் 7 மண்டலங்களில் உயர் பொறுப்புகளில் பணியாற்றி, தற்போது 8 மண்டலங்களை உள்ளடக்கிய எல்ஐசி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள எம்.ஆர். குமார், இந்நிறுவனத்தில் 35 ஆண்டு பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இந்து தமிழ் திசை-யின் ``வணிக வீதி’’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்தியாவின் பொருளாதார தேக்க நிலை, ரிசர்வ் வங்கியின் தொடர் வட்டிக்குறைப்பு நடவடிக்கை, ஆன்லைன் சந்தை என பல்வேறு விஷயங்கள் பற்றி விரிவாக பேசினார். இனி அவருடனான உரையாடலில்
இருந்து…

எல்ஐசியின் ஒட்டுமொத்த செயல்பாடு, குறிப்பாக தென் மண்டலத்தின் செயல்பாடு எப்படி உள்ளது?

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்த மட்டில் மொத்தமுள்ள 8 மண்டலங்களில் தெற்கு மண்டலத்தின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. தெற்கு மண்டல வளர்ச்சியானது 31 சதவீதமாகும். இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பிரீமியம் இலக்கு ரூ.56,500 கோடி. ஆறு மாதங்களில் 50 சதவீத இலக்கு எட்டப்பட்டு விட்டது. தென் மண்டலம் நிர்ணயித்த இலக்கில் 55 சதவீதத்தை எட்டியுள்ளது.

அதேபோல காப்பீடுகளுக்கான முதிர்வுத் தொகையை அளிப்பதில் முதலிடத்தில் உள்ளது. 93 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ. 14,600 கோடி முதிர்வு தொகை அளிக்கப்பட்டுள்ளது. பாலிசி காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீடு ரூ.4,082 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது 94 சதவீதமாகும்.

ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு நடவடிக்கை எல்ஐசி-யில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

பொருளாதார தேக்க நிலை நிலவும் போதெல்லாம், பங்குச் சந்தை சரிவு காணப்படும், ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு நடவடிக்கையும் இருக்கும். பொருளாதார தேக்க நிலை நிலவும்போது, மக்கள் தங்களது சொத்துகளை காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவர். அதற்கு ஏற்ப புதிய உத்திகளை வகுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்வதையே எல்ஐசி விரும்புகிறது. இதன் மூலம் வட்டிக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் ஏற்படும் இழப்பை தடுக்க முடியும்.

பொதுவாக இப்போதைய சூழலுக்கு ஏற்ப காப்பீட்டு திட்டங்கள் இல்லை என்ற கருத்து நிலவுகிறதே…

2012-13-ம் ஆண்டில் காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் (ஐஆர்டிஏ) கொண்டு வந்த கட்டுப்பாடுகளால் அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து காப்பீட்டுத் திட்டங்களும் கைவிடப்பட்டன. இதற்குப் பதிலாக புதிய காப்பீட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது ஆண்டுக்கு 3.85 கோடி காப்பீட்டுத் திட்டங்கள் விற்பனையாயின. ஆனால் இன்றளவில் அந்த அளவுக்கு காப்பீட்டுத் திட்டங்கள் விற்பனையாகவில்லை.

தற்போது 10 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டாலும் ஆண்டுக்கு ஒரு கோடி காப்பீடுகளைத்தான் விற்க முடிகிறது. இதுவரை ஒரு கோடியே 2 லட்சம் பாலிசிகள் விற்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பாலிசி தாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட போனஸ் தொகை ரூ.53 ஆயிரம் கோடியாகும்.

போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ள எல்ஐசி என்னென்ன முயற்சிகள் எடுத்துள்ளது?

தனியார் நிறுவனங்களின் காப்பீட்டு திட்டங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் காப்பீட்டு திட்டங்கள் எல்ஐசியில் இல்லை என்ற சூழல் முன்னர் இருந்தது. ஆனால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ``ஜீவன் அமர்’’ என்ற காப்பீட்டுத் திட்டம் அத்தகைய குறையை முற்றிலுமாக போக்கிவிட்டது. அதேபோல ஆன்லைன் மூலமாக காப்பீட்டுத் திட்டங்களை தேர்வு செய்வோருக்கு வசதியாக ``டெக்டேர்ம்’’ என்ற ஆன்லைன் காப்பீட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்பீடு முழுக்க முழுக்க ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும். இதற்கு எவ்வித கமிஷனும் கிடையாது.

இதனால் இந்த காப்பீட்டு திட்டத்துக்கான பிரீமியம் மிக மிகக் குறைவு. அதேபோல டாக்டரிடம் சென்று மருத்துவ சோதனை செய்து கொள்வதற்கு சிலருக்கு நேரமில்லாத சூழல் நிலவுகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு வீடியோ மூலமான மருத்துவ சோதனை முறையும் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி பாலிசி எடுப்பவர் வீடியோ அழைப்பு மூலம் மறுமுனையில் உள்ள மருத்துவரிடம் பேசி அவரது கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது. இத்தகைய நடவடிக்கைகளை மூன்றாம் தரப்பு நிர்வாகம் மூலமாக மேற்கொண்டு வருகிறோம். இதற்கும் போதிய வரவேற்பு உள்ளது.

பாலிசி விற்பனையை அதிகரிக்க எத்தகைய உத்திகள் கையாளப்படுகின்றன?

புதிய ஏஜென்டுகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 8,000 டெவலப்மென்ட் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் ஏஜென்டுகளை நியமிப்பர். தற்போது நாடு முழுவதும் 11 லட்சம் முகவர்கள் உள்ளனர். நடப்பு நிதி ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 14 லட்சம் முதல் 15 லட்சம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் மட்டும் 1.26 லட்சம் முகவர்கள் உள்ளனர். இந்த ஆண்டு எல்ஐசியில் புதிதாக 16,600 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிகாரிகள், எழுத்தர்கள் என அனைத்து பிரிவுகளிலும் இவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

வங்கிகளில் எல்ஐசி காப்பீட்டு திட்ட விற்பனை குறைவாக உள்ளதே?

ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி போன்ற நிறுவனங்களின் காப்பீட்டுத் திட்டங்களை அந்தந்த நிறுவனங்களின் வங்கிகள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அது போன்ற சூழல் எல்ஐசிக்கு இல்லை. ஆனால், சமீபத்தில் ஐடிபிஐ வங்கியில் முதலீடு செய்துள்ளதன் மூலம், இந்த நிலை இனி வரும்காலங்களில் மாறும். ஐடிபிஐ வங்கியின் 720 கிளைகளிலும் எல்ஐசி காப்பீட்டு திட்டங்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்திலேயே ரூ.250 கோடி அளவுக்கு பிரீமியம் வசூலித்துள்ளது ஐடிபிஐ. நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.2000 கோடி இலக்கு நிர்ணயித்துள்ளது. வங்கிகள் மூலமான காப்பீட்டு திட்ட விற்பனை அளவு 2.61 சதவீதத்திலிருந்து 3.64 சதவீத அளவுக்கு தற்போது அதிகரித்துள்ளது.

காப்பீட்டு திட்டங்களை எடுப்பவர்கள் அதை தொடராத சூழல் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது?

பொதுவாக காப்பீட்டுத் திட்டங்கள் என்பது விற்பனை செய்யும் பொருள். இதனால் இதை வாங்குபவர் தொடர்ந்து அதை புதுப்பிக்கிறாரா என்று பார்க்க வேண்டிய கட்டாயம் விற்பவருக்கு உள்ளது. இதனால் தற்போது தேசிய ஆட்டோமேடிக் கிளியரிங் ஹவுஸ் (என்ஏசிஹெச்) மூலமாக காப்பீடு எடுத்தவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பிரீமியம் தொகையை எடுப்பது குறித்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. பலர் காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்த மறந்து விடுகின்றனர்.

புதிய முயற்சி ஓரளவு பலனளிக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய நடவடிக்கையை தொடர்ந்து 60 மாதங்கள் அதாவது 5 ஆண்டுகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரீமியம் செலுத்துவோர் விகிதம் தற்போது 62% சதவீதமாக உள்ளது. வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்யும் நடவடிக்கை தொடரும்போது இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்து வதையும்அனுமதிக்கிறோம். கார்ப்பரேஷன் வங்கியோ, பிரீமியத்தை ஏடிஎம் அட்டை மூலம் செலுத்தும் வசதியை உருவாக்கியுள்ளது. இத்தகைய நடைமுறையை ஐடிபிஐ வங்கியும் விரைவில் செயல்படுத்த உள்ளது.

ஐடிபிஐ வங்கியுடன் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவன இணைப்பு சாத்தியமா?

ஐடிபிஐ வங்கி மற்றும் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்கள் தனித்தனி செயல்பாடுகளைக் கொண்டவை. ஐடிபிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பிரீமியம் பிரிவினர். ஆனால் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் குறைந்தபட்ச கடன் தொகை வாடிக்கையாளர்களை கவனத்தில் கொண்டது. மேலும் 5 ஆண்டுகளுக்கு எத்தகைய இணைப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என முதலிலேயே தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவையிரண்டும் இணையலாம் அல்லது தனி நிறுவனங்களாகவே தொடரலாம்.

எல்ஐசி-யின் முதலீடு குறித்து…

முதலீடு என்பது தினசரி நடவடிக்கைகளில் ஒன்று. இந்த ஆண்டு ரூ.13,500 கோடி லாபம் ஈட்டி உள்ளோம். ஈக்விடி 20 சதவீதமும், அரசு பத்திரங்களில் 80 சதவீதம் முதலீடு செய்கிறோம். மாநில அரசுகளின் மேம்பாட்டு திட்டங்களிலும் எல்ஐசி முதலீடு செய்கிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில திட்டங்களில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ரூ. 73,891 கோடியும், கேரளத்தில் ரூ. 56,560 கோடியும், புதுச்சேரியில் ரூ.1,089 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் ரூ.7,326 கோடி கேரளத்தில் ரூ. 3,822 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஓய்வூதிய நிதியை பராமரிக்கிறோம். இதே போல பிற மாநிலங்களும் ஓய்வூதிய திட்டங்களை பராமரிப்பதற்கான வாய்ப்பு இருந்தால் அதையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இழப்பீடுகளை வழங்குவதில் எந்த அளவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது?

இதற்கென வழிமுறை (Standard operating Protocol) உள்ளது. தேசிய பேரிடர் சமயங்களில் அப்பகுதிகளுக்கு சென்று காப்பீடு செய்தவர்களை தேடிப்பிடித்து அவர்களில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படுகிறது. கேரளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் குஜராத்தில் நிகழ்ந்த
நில நடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இழப்பீடு கோரப்படாத தொகை கணிசமாக உள்ளது. இதுபற்றிய விவரம் விளம்பரமாக வெளியிடப்பட்டு இழப்பீடுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

காப்பீடு செய்வதில் உலகமும் இந்தியாவும் எப்படி இருக்கின்றன?

உலகின் பல நாடுகளில் காப்பீடு குறித்த விழிப்புணர்வு உள்ளது. உதாரணமாக ஜப்பானில் 97 சதவீத மக்கள் காப்பீடு கொண்டுள்ளனர். இந்தியாவில் 30 சதவீத மக்கள் கூட காப்பீடு வளையத்தில் இல்லை. காப்பீட்டுத் திட்டங்களை பாதியில் கைவிட்டவர்கள் புதுப்பிப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கென சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. தெலங்கானாவில் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பட்டா நிலம் வைத்திருப்பவருக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. மாநில அரசே காப்பீட்டுக்கான பிரீமியத்தை செலுத்துகிறது. புதிய திட்டங்களை உருவாக்குவது மிகப் பெரும் சவாலாகும். காப்பீடு, மருத்துவம், ஓய்வூதியம் இப்படி அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு காப்பீடு திட்டத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு விழிப்பிணர்வு பிரசாரத்தையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. காப்பீட்டின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x