Published : 11 Nov 2019 11:31 AM
Last Updated : 11 Nov 2019 11:31 AM

மெர்சிடிஸ் பென்ஸின் பிரம்மாண்ட எம்பிவி

பிரீமியம் கார் பிராண்டான மெர்சிடிஸ் பென்ஸ் தனது புதிய வி கிளாஸ் எலைட் மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. வி கிளாஸில் ஏற்கெனவே இரண்டு மாடல்கள் உள்ள நிலையில் இந்த மூன்றாவது மாடல் அதிக சொகுசும், செயல்திறனும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எம்பிவி பிரிவு கார்களுக்கு கணிசமான வரவேற்பு உள்ளது. டொயோட்டாவின் இனோவா, கிரெஸ்டா மற்றும் மாருதியின் எர்டிகா போன்றவை பரவலாக விற்பனை ஆகியிருக்கிறது.

இந்நிலையில், இந்தப் பிரிவில் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கான தேர்வாக திட்டமிடப்பட்டு பென்ஸ் தனது வி கிளாஸ் மாடலை இந்தியாவில் களமிறக்கின்றன. வி-கிளாஸ் எக்ஸ்பிரஷன், வி-கிளாஸ் எக்ஸ்க்ளூசிவ் என்ற வேரியன்ட்கள் சந்தையில் ஏற்கெனவே விற்பனையில் உள்ளன. தற்போது இந்த வி-கிளாஸ் எலைட் என்ற மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் வி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் என அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இந்தப் புதிய டாப் ஸ்பெக் ட்ரிம் மாடலான வி-கிளாஸ் எலைட் தோற்றத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய டீசல் இன்ஜினையும் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 5140 மிமீட்டராக உள்ளது. ஆனாலும் ஆறு இருக்கைகள் மட்டுமே கொண்டதாக இருப்பதால் அதிகபட்ச சொகுசைத் தருகிறது.

இதன் முன்பக்க பம்பரில் பெரிய ஏர்டேம், குரோம் ஹைலைட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ட்வீக் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய கிரில் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வீல்களும் புத்தம்புதிய அலாய் வீல்களாகும். இந்த வி கிளாஸ் எலைட் ஸ்டீல் புளு, செலினைட் கிரே மற்றும் கிராஃபைட் கிரே உள்ளிட்ட ஏழு நிறங்களில் கிடைக்கிறது.

இரண்டாம் வரிசை இருக்கைகள் பவர் அட்ஜஸ்டட் வசதி இருப்பதோடு, ரெக்லைனரில் உள்ளதுபோன்ற அதிக சொகுசு அம்சங்கள் உள்ளன. இவற்றை 49 டிகிரி வரை சாய்க்க முடியும். மேலும் காருக்குள் கிளைமேட் கன்ட்ரோல், பானரோமிக் ரூஃப், மசாஜிங் வசதி, டர்பைன் ஸ்டைல் ஏசி வென்ட், ஆம்பியன்ட் லைட்டிங், பெரிய திரை கொண்ட இன்ஃபோடெயின்ட்மென்ட் சிஸ்டம் மற்றும் 640 வாட் பர்மெஸ்டர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. சவுண்ட் சிஸ்டத்தில் 15 ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும் 360 டிகிரி பார்க்கிங் கேமராவும் உண்டு.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட் மாடலில் புதிய நான்கு சிலிண்டர் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இது 161 பிஹெச்பி பவரையும், 380 என்எம் டார்க் செயல் திறனையும் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸும் இணைக்கப்பட்டுள்ளது. 11 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வி கிளாஸ் எலைட் மாடல் விலை ரூ. 1.10 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x