Published : 09 Nov 2019 09:56 AM
Last Updated : 09 Nov 2019 09:56 AM

வில்லங்கங்களைக் கண்டுபிடிக்கும் சான்றிதழ்

ஜி.எஸ்.எஸ்.

ஒரு நிலத்தையோ வீட்டையோ வாங்குவதற்கு முன் அதில் சட்டச் சிக்கல் ஏதாவது உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ள வில்லங்கச் சான்றிதழ் அவசியம். அந்த நிலத்தையோ வீட்டையோ ஏற்கெனவே அதன் உரிமையாளர் அடமானம் வைத்திருந்தால், அதை அடமானமாகப் பெற்றவர் இதை உறுதிசெய்து கொள்ளும் வகையில் பதிவாளர் அலுவலகத்தில் இதைப் பதிவு செய்வார்.

இதனால் கடன் தொகையை முழுவதுமாகத் திருப்பிச் செலுத்திய பிறகுதான் இந்தப் பகுதியை நீக்கிவிட்டு அந்தச் சொத்தின் உரிமையாளரை அடமானத்திலிருந்து மீட்க முடியும். இப்படிச் செய்யாமல் அந்தச் சொத்தை விற்க முடியாது.

இந்த இடத்தில் அடமானத்தை வில்லங்கம் என்று குறிப்பிடுகிறோம். அதாவது அந்த வீட்டை விற்க முடியாமல் தடுக்கும் வில்லங்கம். ஒரு வீடு அல்லது நிலத்தை வாங்கும்போது அதை விற்பதற்கான முழு உரிமையும், எந்தவிதச் சிக்கலுமின்றி, அதன் உரிமையாளருக்கு இருக்க வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் அந்தச் சொத்து உங்களிடமிருந்து பறிக்கப்படலாம் அல்லது பெருந்தொகையை நீங்கள் அளிக்க வேண்டி வரலாம். இவற்றைத் தவிர்க்கத்தான் வில்லங்கச் சான்றிதழைப் பெற வேண்டும்.

எத்தனை வருடங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ் தேவை என்பதை விண்ணப்பிக்கும்போது நாம் குறிப்பிட வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் எந்த வில்லங்கமும் காணப்படவில்லை என்பதைத் தங்களிடமுள்ள ஆவணங்களைக் கொண்டு சரி பார்ப்பதன் மூலம் உறுதிசெய்து கொண்டபின் உங்களுக்கு வில்லங்கமில்லாச் சான்றிதழை அளிப்பார்கள் (Nil Encumbrance Certificate). இப்படி அளித்தால் அந்தக் காலகட்டத்தில் அந்தச் சொத்து அடமானமாக வைக்கப்படவில்லை என்று பொருள் (அப்படி அடமானமாக வைக்கப்பட்டு மீட்கப்பட்டிருந்தால் இந்த விவரத்தை அடமானப் பத்திரத்திலேயே குறிப்பிடுவார்கள்).

இந்தச் சான்றிதழை ஆன்லைனிலும் பெறலாம். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை tnreginet.gov.in என்ற தளத்தில் சென்று அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை அளிப்பதன் மூலம் வில்லங்கச் சான்றிதழ் பெறலாம். இதற்கு உரிய தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். எவ்வளவு காலகட்டத்துக்கான சான்றிதழ் கேட்கிறீர்களோ அதைப் பொறுத்து இந்தக் கட்டணம் மாறுபடும்.

சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று படிவம் 22 என்ற விண்ணப்பத்தை நிரப்பி அளிக்க வேண்டும். சொத்தை வாங்குபவர், விற்பவர் ஆகியோரின் பெயர்கள், சொத்து விவரங்கள் போன்றவற்றை நீங்கள் அளிக்க வேண்டியிருக்கும்.

பொதுவாக 15-லிருந்து 20 நாட்களில் இந்தச் சான்றிதழ் கிடைக்கும். ஆன்லைனில் விண்ணப்பித்தால் மூன்று நாட்களில் கிடைக்க வாய்ப்பு அதிகம். விண்ணப்பிக்கும்போது விண்ணப்பத்தாரரின் முகவரிச் சான்று, அந்தச் சொத்தின் பதிவு ஆவணம் போன்றவற்றின் பிரதிகளை அளிக்க வேண்டியிருக்கும்.

ஆனால், எந்த அடமானம் அந்த அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதோ அவற்றைத்தான் இந்தச் சான்றிதழ் வெளிப்படுத்தும். குறுகிய காலத்துக்கான அடமானம், உயில் போன்ற சில ஆவணங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யாமல் இருப்பதற்கு சட்டம் அனுமதிக்கிறது. எனவே, இவையெல்லாம் வில்லங்கச் சான்றிதழின் மூலம் வெளிப்படாது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x