Published : 09 Nov 2019 09:36 AM
Last Updated : 09 Nov 2019 09:36 AM

விதை முதல் விளைச்சல் வரை 08: உழவர்களுக்கான அரசுத் திட்டங்கள்

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

வேளாண்மையில் உழவுத் தொழிலை முன்னெடுக்கும் ஒருவர் மத்திய, மாநில அரசின் வேளாண் சார்ந்த குறிப்பாக உழவர் நலன் சார்ந்த நலத்திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமானது. அந்தத் திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ளவும் வேண்டும்.

பிரதம மந்திரிப் பயிர் காப்பீட்டுத் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் பயிர்செய்யப்படும் பயிரைக் காப்பீடு செய்வது என்பது இன்றைய கால கட்டத்தில் அவசியமான ஒன்று. இயற்கை இடர்ப்பாடுகளுக்கு இழப்பீடு, சாகுபடி செய்யும் பயிாின் உற்பத்தி இழப்பிலிருந்து பாதுகாத்தல், வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவை முதன்மை நோக்கங்கள். இத்திட்டத்தில் குறிப்பிட்ட பருவத்தில் சாகுபடிக்கு முன்னர் அல்லது சாகுபடி ஆரம்பிக்கும் சமயத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் அந்தந்தப் பகுதியில் செய்யப்படும் பிரதான வேளாண் பயிர்களுக்கும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. இயற்கை இடர்ப்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் கிராம அளவில் மகசூல் இழப்புக் கணக்கெடுப்புக்கு இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்படும். அறுவடைக்குப் பின்பு ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சாிவு, வெள்ளம் போன்ற இடர்ப்பாடுகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் இழப்பீடு கிடைக்கும்.

அந்தந்தப் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, பொதுச் சேவை மையம், அரசு வங்கிகள் ஆகியவற்றின் மூலம் பயிர்க் காப்பீடு செய்துகொள்ள முடியும். பட்டா, அடங்கல், சிட்டா, ஆதார் ஆகிய ஆவணங்கள், உறுதிமொழிப் படிவம், முன்மொழிப்படிவம் ஆகிய படிவங்கள் பயிர்க் காப்பீடு செய்யும்போது அளிக்க வேண்டியவை.

பாரதப் பிரதமரின் கிஸான் சம்மான் நிதி திட்டம்

இத்திட்டத்தின்கீழ் உழவர்கள் சமூகப் பாதுகாப்புக்காக வருடந்தோறும் மூன்று தவணைகளாக ஆண்டொன்றுக்கு ரூ.6000 நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் சேர பொதுச் சேவை மையங்களை அணுக வேண்டும். தங்களுடைய நில உடைமை ஆவணங்களான கணினி பட்டா அல்லது சிட்டா வங்கிக் கணக்குப் புத்தக நகல், ஆதார் அட்டையின் நகல் ஆகிய ஆவணங்கள் தேவை. இது தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற அந்தந்தப் பகுதி வேளாண்மைத்துறை விாிவாக்க அலுவலர்களை அணுகிப் பயன்பெறலாம்.

பிரதம மந்திரியின் உழவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட சிறு, குறு உழவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இதற்கான பிரீமியத் தொகை அவரவர் வயதுக்கேற்ப மாறுபடும். மாதந்தோறும் 18 வயதுடைய ஒருவர் 55 ரூபாயும் அதே சமயம் 40 வயதுடைய ஒருவர் 200 ரூபாயும் இத்திட்டத்தில் செலுத்த வேண்டும்.

இடைப்பட்ட வயதுடையவர்கள் அவர்களின் வயதுக்கேற்ப பணம் செலுத்தும் தொகை மாறுபடும். 60 வயதுக்குப் பின்பு மாதந்தோறும் ரூ.3,000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேரும். இத்திட்டத்தில் சேரத் தங்களுடைய நில உடைமை ஆவணங்களான கணினிபட்டா அல்லது சிட்டா, ஆதார் எண் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், நகல் ஆகியவற்றை ஆவணங்களாக பயன்படுத்திப் பொது சேவை மையங்களில் இத்திட்டத்தில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி வேளாண்மைத் துறை விாிவாக்கப் பணியாளர்களை அணுகிப் பயன்பெறலாம்.

தமிழ்நாடு உழவர் நல நிதித் திட்டம்

இத்திட்டம் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாாியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்தப் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக ஒரு வருடத்துக்கு ஒரு முறை அல்லது அதிக அளவு தங்களது விளைச்சலை விற்கும் அனைத்து உழவர்களும் இதில் சேரலாம். இத்திட்டத்தின் உறுப்பினர்.

எதிர்பாராத விபத்தின் காரணமாக மரணமடைந்தாலும் அல்லது பாம்புக்கடியின் காரணமாக மரணமடைதாலும் ரூ.1லட்சம்வரை குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கும். விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமுற்றால் ரூ.75,000-ம் சிறிய அளவிளான ஊனத்திற்கு ரூ.50,000-ம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முழு விவரங்களை அறிய அந்தந்த வட்டார ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் அல்லது மேற்பார்வையாளரை அணுகிப் பயன்பெறலாம்.

முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

இத்திட்டத்தின்கீழ் சிறு குறு உழவர்கள் பலன் பெறலாம். நேரடியாகப் பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயதுடைய சிறு, குறு உழவர்கள், குத்தகைதாரர்கள், விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் சிறு,குறு உழவர்களும் குடும்பத்தினரும் இணைய முடியும். இதற்காக அடையாள அட்டை வருவாய்த் துறையினர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பங்கு பெறும் உழவர்களின் குழந்தைகளுக்குக் கல்விக்குத் தகுந்தவாறு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் உறுப்பினரோ அவரைச் சார்ந்தவரோ இறக்க நோிடும் பட்சத்தில் ஈமச்சடங்கு நிவாரணம் வழங்கப்படும். உழவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோர் பயன்பெறும் இத்திட்டம் வருவாய்த் துறையின் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது.

தென்னை மரங்களுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களாலும், நில அதிர்ச்சி, ஆழிப்பேரலை, பூச்சி தாக்குதல் போன்ற தாக்குதல்களாலும் மரங்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x