Published : 09 Nov 2019 08:29 AM
Last Updated : 09 Nov 2019 08:29 AM

மழையும் நலமும்

டாக்டர் பி. திருவருட் செல்வா

ஐப்பசி மாசம், அடை மழை மட்டுமல்ல; மழை சார்ந்த நோய்களும் வரக்கூடிய காலம். சித்த மருத்துவத் தத்துவப்படி தட்சிணாயனம் எனும் காலம் (சூரியன் தென் துருவத்தை நோக்கிச் செல்லுதல்), அதாவது ஆடி முதல் மார்கழி வரை, நமது உடலைத் தாக்கும் நோய்களுக்கு ஏற்ற காலமாக அமைகிறது.

மழைக் காலம் அதாவது கார்காலம் தொடங்கி பின்பனிக் காலம்வரை, உடலைச் சற்றுக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மழையில் பயிர்கள் செழிப்பாய் வளர்வது போல உடலுக்குக் கேடு விளைவிக்கும் நுண்ணுயிரும் செழிப்பாக வளரும். மழையில் நனைவதாலும், மழைக் காலத்தில் சாப்பிட ஏதுவல்லாத உணவு வகைகளை உட்கொள்வதாலும், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.

மழைக்காலப் பாதிப்புகள்

பொதுவாக, நோய் எதிர்ப்பாற்றல் மழைக் காலத்தில் எல்லோருக்குமே சற்றுக் குறைந்து காணப்படும். சுரம், சளி, இருமல், தலைப் பாரம், குறிப்பாக ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு நோயின் பாதிப்பு தீவிரமாகக் காணப்படும். அசீரணம், தொற்று நோய்கள், அதைத் தொடர்ந்த விளைவுகள் ஆகியவை ஏற்படும். வயதானவர்களுக்கு மூட்டு வலி அதிகமாகலாம். நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது நல்லது.

எது சத்தான உணவு?

நம் நாட்டில் விளையக்கூடிய காய்கறிகள், விதைகள் உள்ள பழ வகைகள், இயற்கையாக விளைந்த சிறு தானியங்கள், பதப்படுத்தப்படாத உணவு வகைகள், அதிகமாகத் தீட்டப்படாத அரிசி வகைகள் போன்றவையே சத்தான உணவு. செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகளைப் பயன்படுத்த வேண்டும், செறிவூட்டப்பட்ட உப்பைத் தவிர்த்து, அனைத்துக் கனிமங்களும் நிறைந்த உப்பைப் பயன்படுத்துவது உடல்நலனுக்கு நல்லது. வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் நல்ல சிவப்பு நிறமுள்ள வெல்லத்தை [அதிக சிவப்பு = அதிக இரும்புச் சத்து உள்ளது எனப் பொருள்] பயன்படுத்துவது நல்லது.

பாதிப்பை எப்படிக் குறைக்கலாம்?

* இளஞ்சூடான வெந்நீரில் குளியுங்கள். இது சளித் தொந்தரவுக்கு மட்டுமல்லாமல்; வயோதிகர்களுக்கு வரும் மூட்டு வலிக்கும் இதமாக இருக்கும்.
* மூட்டு வலி குறைக்கவல்ல சிவப்பு குக்கில் தைலம், வாத கேசரி தைலம் போன்றவற்றைத் தடவி அரை மணி நேரம் கழித்து வெந்நீர் ஒற்றடமோ குளிக்கவோ செய்வது கூடுதல் நன்மை பயக்கும்.
* கொதித்து ஆறிய நீரை அருந்துவது நல்லது. துளசி, நொச்சி இலை போன்றவற்றில் கிடைத்ததை இரண்டு கைப்பிடி கசக்கிப் போட்டுக் கொதிக்கவைத்த நீரை அருந்தினால், ஆஸ்துமா, சளி தொடர்பான பிரச்சினைகளுக்கு நல்லது. இந்த மூலிகைகளுக்குக் கோழையகற்றி செய்கை உண்டு.
* குளிர்பதனப் பெட்டி பயன்பாட்டைத் தவிர்ப்பது மிக நன்று.
* ஈரமான துணியை அணியாதீர், மழையில் நனைந்தாலும் உடனே நன்கு துவட்டி உடையை மாற்றி விடுங்கள்.
* தலைக்குக் குளித்தால், நன்கு காயவைத்து , நொச்சியிலை ஒரு பிடி, மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி சேர்த்து ஆவி எழும்வரை கொதிக்கவைத்து ஆவி பிடித்தல் நல்லது. குறைந்தது 10 முதல் 15 நிமிடமாவது போர்வையால் மூடி ஆவி பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், தலை நீர் கோத்தல், சீதளம், தலைப் பாரம், மூக்கடைப்பு, மூக்கு நீர் வடிதல் போன்றவற்றிலிருந்து விடை பெறலாம். வாரம் இரு முறை ஆவி பிடிப்பது நல்ல பலனளிக்கும்.
* முடிந்த அளவுக்கு நாமும் தூய்மையாக இருந்து, நமது வீட்டையும் வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்வது, தொற்று நோய்களை வெகுவாக அண்ட விடாமல் தடுக்கலாம்.
* பூசணிக்காய், சுரைக்காய், முள்ளங்கி, செளசெள, வாழைப்பூ, வாழைத்தண்டு போன்ற நீர்க் காய்கறிகளையும், வெண்டைக்காய், தக்காளி போன்ற குளிர்ச்சியான காய்கறிகளையும், குளிர்ச்சியான கீரை வகைகளான பொன்னாங்காணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை போன்றவற்றைத் தவிர்ப்பது நன்று.
* இனிப்பைத் தவிருங்கள். இனிப்பு சுவை கோழையைக் கூட்டும். கோழை அதிகரிக்கும் பொழுது, அதைத் தொடர்ந்து சளி கூடும்.
* தயிர் சேர்ப்பதற்குப் பதில் நீர் மோர் சேர்க்கலாம். தயிரில் ஆடையைக் கடைந்து நீக்கியதே நீர் மோர். அதில் கடுகு, கறிவேப்பிலை தாளிதம் பண்ணியதாக இருந்தால் கூடுதல் நலம்.
* மிளகு ரசம் தினமும் கண்டிப்பாகத் தேவை.
* பால், தயிர் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். பால் சேர்க்கும் கட்டாயம் இருப்பின், சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து, வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.
* மழைக் காலத்தில், இரவில் பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்த்தல் நலம்.

என்ன செய்யலாம்?

* தொண்டை வலி உள்ளவர்கள் பூண்டு அதிகம் சேர்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தூண்டும் பண்பும் கிருமிநாசினிக் குணமும் பூண்டுக்கு உண்டு.
* அடுக்கு இருமல், வறட்டு இருமல் ஆகியவற்றுக்கு, சிவப்பு அவலை வாயில் அடக்கிக்கொண்டு, அதில் ஊறிய உமிழ்நீரை விழுங்கி வர நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
* தொண்டைவலிக்கு, கல்லுப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவைத்து அதனை 10 முதல் 15 தடவை தொண்டை உள்பகுதி வரை கொண்டு சென்று அடக்கி பின் கொப்பளிப்பது நல்ல இதமளிக்கும்.
* இரவில், பனங்கற்கண்டு 2 தேக்கரண்டி (பனங்கற்கண்டு கருஞ்சிவப்பாய் இருத்தலே முதல் தரம்) 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி ஒரு சிட்டிகை நெய் சேர்த்துக் குடிப்பது, தொண்டை கரகரப்பு இருப்பவர்க்கு நலம் தரும்.

ஆரோக்கியம் பெறுவோம்

கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க எடுக்கும் சிரத்தையை, மழைக் காலத்தில் பின்பற்றத் தவறிவிடுகிறோம். மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால், மழைக் காலத்தில் பயிர்கள் செழிப்பாவது போல் நாமும் செழிப்பான ஆரோக்கியமான உடல்நிலையைப் பெற்று நலமாக வாழலாம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு:
siddhathiru@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x