Published : 08 Nov 2019 12:26 PM
Last Updated : 08 Nov 2019 12:26 PM

ஷாருக் கானின் வாக்குமூலம்

சு.சுபாஷ்

அமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டேவிட் லெடர்மேன். உலகமெங்கிலும் உள்ள அரசியல், சினிமா, எழுத்து, சமூகம், விளையாட்டு எனப் பல்துறை ஆளுமைகளை தனக்கே உரிய அணுகுமுறையுடன் சந்தித்து அளவளாவும் இவரது ‘லேட் நைட் வித் டேவிட் லெடர்மேன்’ நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது. அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் 35 ஆண்டு களுக்கும் மேலாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியைத் தற்போது வேறு பெயரில் வலைத்தள மேடைக்குக் கொண்டு வந்திருக்கிறார் டேவிட் லெடர்மேன்.

‘மை நெக்ஸ்ட் கெஸ்ட் நீட்ஸ் நோ இன்ட்ரொடக்சன்’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு முதல் நெட்ஃபிளிக்ஸில் இரண்டு சீஸன்கள் வெளியாகி இருக்கின்றன. இவற்றில் பராக் ஒபாமா, ஜார்ஜ் க்ளூனி, மலாலா யூசுப்சாய், மெலின்டா கேட்ஸ் போன்றவர்களுடனான டேவிட் லெடர்மேனின் சந்திப்புகள் பிரபல மானவை. இந்த வரிசையின் முதல் இந்திய ஆளுமையாக, ‘பாலிவுட் பாஷா’ ஷாருக்கான் பங்கேற்கும் அத்தி யாயம் தற்போது வெளியாகி உள்ளது.

நியூயார்க் உள்ளரங்கம் ஒன்றில் ரசிகர்கள் முன்பாகவும் ஷாருக்கானின் மும்பை இல்லத்திலுமாக டேவிட்டின் சந்திப்பும் உரையாடலும் தொடர்கிறது. தனக்கே உரிய சிரிப்பு, தனித்துவ உச்சரிப்பு, மெல்லிய கூச்சம் ஆகிவற்றை இயல்பாய் வெளிப்படுத்தியபடி பதிலளிக்கத் தொடங்கும் ஷாருக், நேரம் செல்லச் செல்லத் தனது வெகுஜன பிம்பத்தைத் தள்ளி வைத்துவிட்டு மனம் திறந்து கொட்டுகிறார். சில இடங்களில் டேவிட்டுக்குப் போட்டியாகவும் பகடி செய்கிறார்.

பள்ளி, கல்லூரி வாழ்க்கை, நண்பர் களுடனான ‘சி’ குழுமச் சேட்டைகள், மும்பைப் பயணம், பாலிவுட் அறிமுகம், தாய், சகோதரி, மனைவி, மகள், தனது கதாநாயகிகள் என்பதான பெண்கள் சூழ் உலகு, மனைவி கௌரியுடனான காதல், நடிப்பைவிட எழுத்தின் மீதான மகனின் ஆர்வம், மகள் சுஹானாவின் ஆண் நண்பர்கள் என ஷாருக்கின் மனம் திறந்த உரையாடல் நியூயார்க் - மும்பை இடையே தாவித் தாவி நீள்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையரங்கை விட்டு வெளி யேறாத ‘தில்வாலே துல்ஹனியா..’ திரைப்படம், ஆதர்ச ஹாலிவுட் நடிகரான ‘மைக்கேல் ஜே ஃபாக்ஸ்’ தந்த பாதிப்பு, தொலைக்காட்சிக்குப் பணி புரிந்த காலம் உள்ளிட்ட பலவற்றையும் ஷாருக் பதிவுசெய்கிறார்.

நியூயார்க் நிகழ்ச்சியில் ஷாருக்கின் உலகளாவிய ரசிகர்கள் 350 கோடி என்பதாக ஒரு புள்ளிவிபரத்தைச் சுட்டிக்காட்டி வியக்கும் டேவிட், பெரிய அளவில் முன் தயாரிப்பின்றி வினாக்கள் தொடுப்பதும், ஷாருக்கைப் பேச விட்டு ரசிப்பதும் அதிலிருந்தே உரையாடலின் அடுத்த கட்டத்துக்கு நகர்வதும் இயல்பாக இருக்கிறது. இந்திய ஒளிப்பதிவின்போது ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஷாருக் தரிசனம் தருவதை டேவிட் ரசிக்கிறார். மும்பை வீதிகள், சாலையோர உணவகங்கள், கடற்கரை வெளிகள், இளைஞர்களின் கிரிக்கெட் எனப் பலவற்றையும் நெட்ஃபிளிக்ஸின் சர்வதேச ரசிகர்களுக்காகச் சுற்றிப் பார்க்கிறார்.

‘பல துறைகளில் முயன்று பார்த்து அவை முடியாததில் நடிகனாகி விட்டேன். என்னுடன் போதிய நேரம் செலவழிக்காத பெற்றோர் குறித்த ஏக்கம் அதிகமுள்ளதாலேயே, எனது குழந்தைகளுக்காக அதிக நாள் வாழும் ஆசையுண்டு. ஷாருக் கான் என்ற பிம்பத்துக்கான பணியாள் மட்டுமே நான்...’ என்பதாக ஷாருக்கானின் மனம் திறந்த வாக்குமூலம் உள்ளம் தொடுகிறது.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்திலும் தொடரின் தரம் ஈர்க்கிறது. ஆனால், இந்தியாவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பின்னணி இசை என்ற பெயரில் பல இடங்களில் படுத்துகிறார்கள். அதற்குப் பதிலாக ஷாருக் படத்தின் பிரபலமான இசைத் துணுக்குகளைச் சேர்த்திருக்கலாம். பெரும்பாலும் ஆழமற்ற கேள்விகளையே டேவிட்டும் தொடுக்கிறார்.

சர்வதேசப் பார்வையாளர்களுக்கான இந்த நிகழ்ச்சியில், ஷாருக்கான் குறித்து இந்திய ரசிகர்கள் கேள்விப்படாத புதிய தகவல்கள் என்று பெரிதாக எதையும் காணோம். ஆனாலும், பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் முதிர்ச்சியான வாக்குமூலத்துக்காக இந்த நிகழ்ச்சி கவனம் பெறுகிறது.

‘கணவர் மீதான உரிமை கொண்டாடல், அவர் டெல்லியிலிருந்து மும்பைக்குத் தனக்காகப் பயணப்பட்டு தேடியலைந்தது...’ என ஒரு சிலவற்றை வெட்கம் மிளிரப் பகிரும் கௌரி கானுக்கும் இத்தொடரில் கொஞ்சம் இடம் கொடுத்திருக் கிறார்கள். மனைவி உதவியுடன் இத்தாலிய உணவு வகைகளைச் சமைத்து டேவிட்டுக்கு ஷாருக் பரிமாறிக் கொண்டே பேட்டியைத் தொடர்வது சுவாரசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x