Published : 08 Nov 2019 11:16 AM
Last Updated : 08 Nov 2019 11:16 AM

இயக்குநரின் குரல்: காத்திருக்கும் வெற்றி!

திரைபாரதி

‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’ ’வடசென்னை’ படங்களின் மூலம் நடிகராகக் கவனிக்க வைத்தவர் பாவெல் நவகீதன். “படங்களை இயக்க வந்த நான், நடிகனாக அறியப்பட்டுவிட்டேன். இப்போது நான் இயக்குவதற்கான நேரம். ‘வி1’ என்ற புலன் விசாரணை திரில்லர் படத்தை எழுதி இயக்கி முடித்துவிட்டேன். மறந்தும் அதில் நான் நடிக்கவில்லை. தனது படத்தில் முகத்தைக் காட்டக் கூட இயக்குநர் முனைப்புக் காட்டக்கூடாது. கதை, கதாபாத்திரங்கள், காட்சிகள் வழியாக அவர் ஆடியன்ஸுடன் பேசவேண்டும். அதை முழுமையாக இதில் முயன்றிருக்கிறேன்” என்று உற்சாகமாக உரையாடத் தொடங்கினார்.

படம் இயக்க வந்து நடிகராக நிலை நிறுத்திக் கொண்டது, தற்போது இயக்கத்தில் எந்த வகையில் உங்களுக்கு உதவியது?

இரண்டு விதங்களில் உதவியது. இவர் ‘புராமிசிங் ஆக்டர்’ என்று அறியப்படும்முன் கதை சொல்லச் சென்றபோது அலைச்சல் இருந்தது. முகம் கிடைத்த பிறகு எனக்குத் தரும் அங்கீகாரம், மரியாதை வேறு. என்னிடம் வித்தியாசமான கதை இருக்கும் என்று நம்பி, நேரம் ஒதுக்கிக் கேட்கிறார்கள். ஒரு நடிகனாகக் கிடைத்த அனுபவத்தில் இரண்டாவது அனுகூலம் எனது கதைக்களம், கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வுசெய்ய முடிந்தது.

ஹாலிவுட்டில் ‘காஸ்டிங் டைரக்டர்ஸ்’ என்ற ஒரு சமூகம் இதற்காக அணுவணுவாக உழைக்கிறது. தமிழ் சினிமாவிலும் இது இப்போதுதான் மெல்ல வந்து கொண்டிருக்கிறது. கதையைத் தோளில் தாங்கும் நடிகர்களே கதாபாத்திரத்தின் உணர்ச்சி நிலைகளைத் துல்லியமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்த வேண்டியவர்கள்.

நடிப்பு மிகுந்த உழைப்பைக் கோருவது. அதை, திறனுள்ள நடிகர்களால் மட்டுமே தரமுடியும். ஒரு இயக்குநர் திறனுள்ள, பொருத்தமான நடிகர்களைக் கண்டறிந்துவிட்டாலே படத்துக்கான வெற்றி காத்திருக்கும்.

‘வி1’ படத்துக்கான நட்சத்திரத் தேர்வு நீங்கள் எதிர்பார்த்ததுபோல் அமைந்ததா?

பெரும் தேடல், ஓடலுக்குப் பின் எனது கதாபாத்திரத்துக்கான நடிகர்களைக் கண்டடைந்தேன். அதில் எனது கதையின் நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ பற்றி நிறையக் கூற வேண்டும். ‘வி 1’ என்ற எண் கொண்ட வீட்டில் நடந்த கொலையைப் புலன் விசாரணை செய்ய வருபவர்தான் நாயகன். கதைப்படி கல்லூரியில் தடய அறிவியல் சொல்லித்தரும் ஒரு விரிவுரையாளர்.

ஒரு எதிர்பாராத பிரச்சினையால் இருட்டைக் கண்டாலே பயந்து பின்வாங்கும் மனச்சிக்கலைச் சந்திக்கிறார். இதற்கிடையில் விரிவுரையாளர் வேலையை விட்டுவிட்டு, காவல்துறையில் தனக்குப் பிடித்த ‘ஃபாரன்சிக்’ துறையில் வேலைக்குச் சேர்கிறார். விடிந்து, நன்கு வெளிச்சம் வந்ததும் வேலைக்குப் போய் இருட்டுவதற்குள் திரும்பிவிட வேண்டும் என்று நினைத்தவருக்குத் தனது நண்பனுக்காகத் தனிப்பட்ட முறையில் கொலை வழக்கைத் துப்புத் துலக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இருட்டைக் கண்டு மிரளும் மனச்சிக்கலுடன் கொலை வழக்கை நாயகன் எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் படம்.

முழுவதும் கதாநாயகனின் திறமையை நம்பியிருக்கும் கதை. இந்தக் கதாபாத்திரத்தில் புதுமுகம் ஒருவர் நடித்தால் ஏற்றுக்கொள்ளும் விதமாக இருக்கும் என்று முடிவுக்கு வந்து சுமார் நாற்பது புதுமுகங்களை ஆடிஷன் செய்து பார்த்துக் களைத்துப்போனேன். இதைக் கேள்விப்பட்ட எனது எடிட்டர் சி.எஸ்.பிரேம்குமார் என்னை அழைத்தார்.

‘நீங்கள் தேடுவதுபோன்ற ஒருவர் நடித்துள்ள படத்தைத்தான் தற்போது எடிட் செய்து கொண்டிருக்கிறேன். முதல் படம் போலவே தெரியவில்லை. வந்து அவர் நடித்த காட்சிகளைப் பாருங்கள். இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக ஒருவருடம் முழுமையாகச் சிலம்பம் கற்றுக்கொண்டு அதன்பின் நடித்திருக்கிறார்’ என்றார். நான் போய்ப் பார்த்தேன். முதல் பட நாயகன்போல் இல்லாமல், அவ்வளவு இயல்பாக நடித்திருந்தார்.

இருந்தாலும் கொஞ்சம் சந்தேகம். எனது உதவி இயக்குநர்களுக்கும் அவர்மேல் நம்பிக்கை இல்லை. ராம் அருண் காஸ்ட்ரோவை அழைத்துத் திரைக்கதையைக் கொடுத்து ‘உங்கள் கதாபாத்திரம் குறித்து வாசித்துவிட்டு வாருங்கள் என்றேன். பிறகு ஒரு டெஸ்ட் ஷூட் செய்ய வேண்டும்’ என்றேன். பத்து நாட்கள் காணாமல் போனவர், போன் மேல் போன் போட்டதும் வந்தார்.

கேமரா சுழன்றது. திரைக்கதையின் மிகக் கடினமான கிளைமாக்ஸ் காட்சியை நடிக்கிறேன் என்றார். கண்ணசைத்தேன். காட்சிப்படி வசனமே இல்லாத நடிப்பு. அவர் நடித்து முடித்ததும் ஓடிப்போய்க் கட்டிக்கொண்டேன். உதவி இயக்குநர்கள் ஓடிவந்து கைகுலுக்கிவிட்டு அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். டெஸ்ட் ஷூட்டில் மட்டுமல்ல; ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் காஸ்ட்ரோவின் நடிப்பை மொத்தப் படக்குழுவும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும். காஸ்ட்ரோவுடன் நடித்திருக்கும் விஷ்ணு பிரியா, லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் என எல்லோருமே கதாபாத்திரங்களுக்கான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

எப்போது வெளியீடு?

டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிடுகிறோம். ‘நிறம்’ படத்தின் இசையமைப்பாளர் ரோனி ரப்ஹெல்தான் இந்தப் படத்துக்கும் இசை. தற்போது பின்னணி இசைக்கோப்பு முடியும் கட்டதுக்கு வந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x