Published : 05 Nov 2019 01:20 PM
Last Updated : 05 Nov 2019 01:20 PM

சென்னையை ஆராதிக்கும் பிரான்ஸ் இளைஞர்!

மிது கார்த்தி

‘இந்த உலகம் ஒரு குடும்பம் - தமிழில் இந்த வாக்கியத்தை நம்மவர்கள் கையில் பச்சை குத்தியிருந்தால், அதை எளிதாகக் கடந்துவிடுவோம். வேளச்சேரி - சென்னைக் கடற்கரை ரயிலில் பயணித்தபோது வெளிநாட்டவர் ஒருவர் தன் கையில் இந்த வாக்கியத்தைப் பச்சை குத்தியிருந்ததைப் பார்த்தபோது, கவனம் அவர் மீது குவிந்தது.
அவர் அருகே அவருடைய மனைவி, இரு குழந்தைகளும் இருந்தார்கள். உடனே அவரிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் மனதுக்குள் துள்ளிக் குதித்தது. சற்றும் தாமதிக்காமல் பேச்சுக் கொடுத்தேன்.

பச்சை குத்தியிருந்த அந்த வாக்கியத்தைக் காட்டி அவரிடம் கேட்டபோது, சிரித்துக்கொண்டே, “இந்த வாக்கியம் நல்லா இருக்கா, தமிழில் இது சரியா?” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார்.“எனக்குத் தமிழ்நாடு ரொம்பப் பிடிக்கும். தமிழ் மொழி மேல எனக்கு அலாதிப் பிரியம். ‘வேர்ல்ட் இஸ் ஒன் ஃபேமிலி’ என்ற வாக்கியம் எனக்குப் பிடிக்கும். அதைப் பிரதிபலிக்கிற மாதிரிதான் இந்த வாக்கியத்தைப் தமிழில் பச்சை குத்தியிருக்கேன்” என்று தமிழ் மொழி
மீதான தன்னுடைய காதலைப் பற்றிப் பேசினார் அந்த இளைஞர்.

சங்கக் காலப் புலவரான கனியன் பூங்குன்றனாரை உங்களுக்குத் தெரியுமா, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடியவர். நீங்கள் தமிழில் பச்சை குத்தியிருக்கிற வாக்கியமும் அதை ஒட்டியதுதான் என்று சொன்னபோது, “அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. அவரைப் பற்றிப் படிக்கிறேன்” என்று சட்டெனப் பதில் அளித்தார். அவருடைய பூர்விகம் பற்றிக் கேட்டதும் மடை திறந்த வெள்ளம் போல் பேசத் தொடங்கிவிட்டார்.

“என்னுடைய நாடு பிரான்ஸ். பிரான்ஸில் ‘ஒயின் சிட்டி’ என்றழைக்கப்படும் பர்கண்டிதான் என்னுடைய பூர்விக ஊர். என்னுடைய பெயர் ஆண்டோ. மகன் ஃபசில், மகள் நிலா. சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். அடையாறில் உள்ள இந்திரா நகரில்தான் வசிக்கிறேன். இப்போதைக்கு சென்னையில் சின்ன வேலையைத்தான் செஞ்சுகிட்டு இருக்கேன்.

என்னுடைய மனைவி சென்னை அடையாறில் உள்ள ஒரு பள்ளியில் பிரெஞ்சு ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார்.” என்று தன் குடும்பத்தினரையும் சேர்த்து அறிமுகம் செய்து வைத்ததோடு, “என்னுடைய இரண்டு குழந்தைகளும் தமிழ்நாட்டுலதான் பிறந்தாங்க. மகன் கோயமுத்தூரில் பிறந்தான். மகள் சென்னையில் பிறந்தாள்” என்று சொல்லும்போது அவருடைய முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

பொதுவாக பிரான்ஸிலிருந்து வருபவர்கள் புதுச்சேரி அல்லது கேரளா போன்ற பகுதிகளில் தங்க விரும்புவார்கள். நீங்கள் ஏன் சென்னையைத் தேர்வு செய்தீர்கள்? “12 வருஷத்துக்கு முன்னால முதன் முறையா சென்னைக்கு வந்தேன். எனக்கு இந்த ஊர் ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

இந்தியாவுக்கு மீண்டும் வந்தபோது என்னுடைய விருப்பம் சென்னையாகத்தான் இருந்தது. இந்தியாவிலேயே சென்னை மிகவும் அழகான ஊர். சென்னையை எனக்கு அவ்வளவு பிடிக்கும். இங்கே இருக்குற கலாச்சாரம், மக்கள் என எல்லாமே என் மனதுக்கு ரொம்ப நெருக்கம். எனக்கு மட்டுமில்ல, என்னுடைய மனைவிக்கும் சென்னை ரொம்ப பிடிக்கும்” என்று சென்னையைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகிறார் ஆண்டோ.

பக்கத்துத் தெருவில் இருக்கும் கடைக்குக்கூட பைக்கில் செல்லும் காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம். ஆனால், ஆண்டோ தன் வீட்டிலிருந்து அடையாறில் உள்ள பள்ளிக்குத் தன் குழந்தைகளை ரிக்‌ஷாவை மிதித்து அழைத்துச் செல்கிறார். இதற்காகவே ஒரு ரிக்‌ஷாவையும் இவர் வாங்கி வைத்திருக்கிறார்.

“சென்னையில அடையாறு, இந்திரா நகர், பெசன்ட் நகர் பகுதிகள் அவ்ளோ அழகா இருக்கு. பார்க்குற இடமெல்லாம் மரங்கள் இருக்கு. மற்ற இடங்கள்ல காற்று மாசுன்னு சொன்னாலும், இங்கே நல்ல காற்று கிடைக்குது. சுற்றுச்சூழலுக்கு நாம் தீங்கு செய்யக் கூடாது. என்னிடம் பைக் இருக்கு.

ஆனால், பைக்கை எல்லாவற்றுக்கும் பயன்படுத்த மாட்டேன். அதனால்தான் ரிக்‌ஷாவுல என் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிச் செல்கிறேன். அப்படிப் போறப்ப சென்னை மக்கள் அன்பா வந்து விசாரிப்பாங்க. செல்ஃபி எடுத்துக்குவாங்க. பஸ், வண்டியில போறவங்கக்கூட கையை ஆட்டிட்டு போவாங்க. சென்னை மக்கள் காட்டுற நேசம் இருக்கே...” என்று உருகுகிறார் ஆண்டோ.

தற்போது கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசும் ஆண்டோ, தமிழ்ப் பேச விரும்புவதாகவும் சொன்னார். “தற்போதைக்கு சென்னையை விட்டு போற ஐடியா இல்லை” என்று கூறும் ஆண்டோ, “என் வீட்டு அருகே சினிமா துறையைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார்.

தமிழ்ப் படங்களும் எனக்குப் பிடிக்கும். தமிழ் சினிமாவில் நடிக்கவும் விருப்பம் உள்ளது” என்று போகிறபோக்கில் சிரித்துக்கொண்டே கூறினார். பிழைப்புக்காகச் சென்னை வந்தவர்கள், “இது ஊராடா, ச்சை..” என்று சென்னையைப் பற்றிப் பொருமித் தள்ளுவார்கள். ஆனால், வெளிநாட்டிலிருந்து சென்னையில் குடும்பத்துடன் தங்கியிருக்கும் இந்த பிரான்ஸ் தேசத்து இளைஞர் சென்னையையும் தமிழையும் அவ்வளவு ஆராதிக்கிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x