Published : 05 Nov 2019 01:15 PM
Last Updated : 05 Nov 2019 01:15 PM

கொஞ்சம் செட்டப்பை மாத்துங்கப்பா!

கிருத்திக்

இந்த உலகத்துலேயே ரொம்ப ரொம்ப கஷ்டமான காரியம் நல்லவன்னு பேரு வாங்றதுதான். அதுவும் சொந்தக்காரங்ககிட்ட பேரு வாங்றது கௌதம் மேனன் படம் ரிலீஸாகுறதவிட சிக்கலான விஷயம். ஏன்னா, ரொம்ப சுலபமா கெட்டவன்னு முத்திரை குத்திட்டு போயிடுவாங்க. இதுக்குன்னே ரப்பர் ஸ்டாம்போட வெறித்தனமா சுத்துவாங்க. இவ்வளவு இடைஞ்சல்களுக்கு மத்தியில, உங்களை நல்ல பையன்னு பேர் வாங்க வைக்கணும்ங்கிற உயர்ந்த நோக்கத்தோட, ரூம் போட்டு யோசிச்சு எழுதிருக்கேன்.

காலை தரிசனம்

பெத்தவங்ககிட்ட நல்ல பேர் வாங்குறதுக்கு ரொம்ப சுலபமான வழி இருக்கு. ராத்திரி 10 மணிக்குத் தூங்கி காலையில 7 மணிக்குள்ள எழுந்தாப் போதும். என்ன தவம் செய்தனைன்னு அம்மா பெருமைப்பட ஆரம்பிச்சிடு வாங்க. விடிய விடிய போனை நோண்டுறதும் பகல் பத்து மணி வரைக்கும் தூங்குறதும் அவங்கள காண்டாக்கும். ஆகவே, வீட்லயாவது கொஞ்சம் கையையும் செல்லையும் கட்டுப்படுத்திக்கோங்க. வெளியில போய் போனை நோண்டிக்கலாம். மாசத்துல ஒரு நாள், செமஸ்டர் நேரத்துலயாவது அதிகாலை(?) 6 மணிக்கே எழுந்திருச்சிடுங்க. எழுந்ததும் போனைத் தொடாம, கையில் புத்தகத்தோடு உட்கார்ந்திருப்பது நல்ல பேரு வாங்க உதவும்.

ஜாக்கிரதை மக்கா

அடுத்து என்னடா பண்ணப் போறன்னு சொந்தக்காரங்க கேட்டா, ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகப் போறேன்னு போட்டுத்தாக்குங்க. என்னதான் அரியர் இருந்தாலும், இப்படி அடிச்சிவிடுற பிள்ளைகளைத்தான் இந்த உலகம் உயர்ந்தவன்னு நம்பும். போன்ல ‘டிக்டாக்’ பண்றதே வேலையா இருந்தாகூட, நான் டைரக்டர் ஷங்கர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேரப்போறேன்னு இரக்கமே இல்லாம அடிச்சுவிடுங்க.

முதல்ல அரியரை முடிக்க முடியுதான்னு பார்ப்போம் என்பது மாதிரியான உண்மைகளை உதிர்க்க வேணாம். சும்மாதான் இருக்கேன்னு வாய்தவறி உண்மையைச் சொல்லிட்டீங்கன்னா எல்லாம் போச்சு. தூரத்து அத்தை மகள், மாமன் மகன் வரைக்கும் விஷ(ய)த்தைப் பரப்பி உங்கள அந்தக் குடும்பத்தோட அவமானச் சின்னமா முத்திரை குத்திடுவாய்ங்க. ஜாக்கிரதை!

வெறித்தனம் வேணாம்

சினிமா ரசிகரா இருக்கிறது தப்புல்ல. ஆனா, தல, தளபதின்னு நீங்க பேசுறது முன்னாள் கமல், ரஜினி ரசிகர்களான பெத்தவங்களுக்குப் பிடிக்காது. டி.ராஜேந்தர், பாக்யராஜ், ராமராஜன், ‘மைக்’ மோகன் ரசிகர்களான மாமா, அத்தைகளுக்கு மட்டும் பிடிக்கவா செய்யும்? எப்ப பாரு சினிமா சினிமான்னு பைத்தியமா திரியுறான், உருப்படாத பய என்று சொல்லிவிடுவார்கள். அதுக்காக உனக்குப் பிடிச்ச ஹீரோ யாருன்னு கேட்டா, ஸ்கூல் காலத்துல பேசுற மாதிரியே அப்துல்கலாம்னு சொல்லி ஓவரா சீன் போடாதீங்க. நேரு, நேதாஜி, படேல் மாதிரியான பேரைச் சொல்லி தப்பிச்சுக் கோங்க. தோழர் சித்தப்பாவிடம் பகத்சிங் என்றும், காவி மாமாவிடம் மோடிஜி என்றும் சொன்னால் நீங்க பிழைக்கத் தெரிஞ்ச பிள்ளைன்னு அர்த்தம்.

செல்ஃபி புள்ள

செல்ஃபி எடுக்கும் பழக்கமிருந்தா, அடிக்கடி அம்மாவோடு செல்ஃபி எடுங்க. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல நண்பேன்டா, நண்பிடா என்று போடாமல் அவ்வப்போது அம்மா சென்ட்டிமென்ட் பாடல்களையும், ‘தெய்வங்கள் யாவும் தோற்றே போகும்’னு அப்பாவோடு இருக்கிற செல்ஃபியையும் ஸ்டேட்டஸாக வையுங்க. நண்பர்கள் காண்டாவார்கள் என்றால், ‘ஸ்டேட்டஸ் பிரைவஸி’க்குப் போய் குடும்ப உறவுகளை மட்டும் செலக்ட் செய்தாவது இந்த ‘ஐஸ்’ வைக்கும் வேலையைச் செய்ங்க. வீட்ல என்னதான் எதிர்த்துப் பேசுனாலும், எரிஞ்சி விழுந்தாலும் அவன் ‘பாசக்காரப் பய’டான்னு சொல்ல வெக்கிறதுலதான் உங்க வெற்றி அடங்கியிருக்கு.

காதல் கீதல் வேண்டாம்

‘நானெல்லாம் காதலிச்சு கல்யாணம் பண்ணுனேன்டா. எங்களுக்கு வேலை வெக்காம நீயே பொண்ணு, மாப்ள பாத்திடு’ என்று சொல்லிச் சொல்லி வளர்க்கும் பெற்றோர்கள், நீங்கள் காதலில் விழும்போது எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்பதே தமிழ்நாட்டு எஸ்டிடி. எனவே, பொசுக்குன்னு யாரையும் காதலிச்சிடாதீங்க. அப்படியே காதலிச்சாலும் அப்பா, அம்மாகிட்ட பக்குவமா சொல்ற வரைக்கும் சொந்தக்காரங்க கண்ணுல படாம இருக்கிறது உத்தமம். பயபுள்ளைங்க குருவிக் கூட்டுல குண்டு வெச்சிடுவாங்க. படிப்பெல்லாம் முடிஞ்சி சொந்தமா சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு உங்க காதலை வீட்ல சொன்னீங்கன்னா, ‘சக்ஸஸ்’ ஆக வாய்ப்பிருக்கு. இல்லாட்டி, அறிவுரை சொல்லியே உங்களக் கொல்வாய்ங்க. எப்பூடி வசதி?

100 சிசி பைக் போதுமே?

பொண்ணுங்க சிட்டி டிராஃபிக்ல 80 கிலோ மீட்டர் ஸ்பீடுல வண்டி ஓட்டுனாக்கூட வீட்டுக்கு கம்ப்ளைண்ட் போகாது. ஆனா, பசங்க அறுபதைத் தாண்டினாலே ஏதாவது ஒரு மாமா போட்டுக் கொடுத்திடுவார். நீங்க வேற சின்னப்பையனா இருக்கும்போதே கார், பைக் பொம்மை வெச்சி விளையாடி, எப்படா 18 வயசாகும்னு காத்திருந்து, 150 சிசி பைக் வாங்கிருப்பீங்க. அதை டிவிஎஸ் 50 மாதிரி ஓட்டச் சொல்லி சொந்தமும் சமூகமும் அழுத்தம் கொடுக்கும். எதுக்கு வம்பு? பேசாம 100 சிசி பைக் வாங்குங்க. மைலேஜூம் கொடுக்கும். மண்டையும் பத்திரமா இருக்கும்.

குழந்தையாவே இருங்க

நாமதான் மேஜராகிட்டோமே, இனிமே நம்ம விருப்பப்படி நடக்கலாம்னு ஆசையிருந்தா அதை மூட்டை கட்டி வெச்சிடுங்க. தோளுக்கு மேல வளர்ந்தாலும், நீங்க அவங்களுக்கு குழந்தைதான். பக்கத்துக் கடைக்கு ஓடிப்போய் 100 கிராம் தக்காளியும் கொஞ்சம் கொத்தமல்லியும் வாங்கிட்டு வரச் சொல்வாங்க. “இரும்மா, டிரஸ் மாத்திட்டுப் போறேன்”னு சொல்லலாம்... தப்பில்ல.

“இரும்மா ஹேர்கட் பண்ணிட்டுப் போறேன்”னு சொன்னா அம்மா கடுப்பாயிடுவாங்க. “இந்தப் பய இப்பவே என் பேச்சைக் கேட்கிறதில்ல. நாளைக்கு பொண்டாட்டி வந்திட்டா?” என்று டைம் மிஷினே இல்லாமல் எதிர்காலத்துக்குப் போய் சண்டை போட்டு, கண்ணீர் விடுவார் அம்மா. இதெல்லாம் தேவையா? ரொம்ப முக்கியமான விஷயம், என்ன தப்பு பண்ணாலும் போட்டுக்கொடுக்கிற சொந்தக்காரங்க வாரிசையும் அதுல கூட்டுச் சேர்த்துக்கிட்டீங்கன்னா எதிர்காலத்துல நீங்க அரசியல்வாதியாவும் ஜொலிக்கலாம்.

இத்தனையும் செஞ்சி நல்லவன்னு பேரெடுக்கிறதுக்கு, சிம்பு மாதிரி ‘கெட்டவன்’னு பேரெடுத்த நல்லவன்டான்னு சொல்லிட்டுப் போயிடலாம்ன்னு உங்களுக்குத் தோன்றினால் கம்பெனி பொறுப்பல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x