Published : 04 Nov 2019 12:03 PM
Last Updated : 04 Nov 2019 12:03 PM

ஏ6: இது எட்டாம் தலைமுறை ஆடி

முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in

கடந்த ஒரு வருட காலமாக பைக், கார் முதல் லாரி வரை வாகன விற்பனை மிகப் பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. இந்தப் பாதிப்பை பெரிதாக உணராத வாகனப் பிரிவு ஒன்று உண்டென்றால் அது சொகுசு கார்கள் பிரிவுதான். சொகுசு கார்களுக்கு வரி விகிதமும் அதிகம். எனினும் அவற்றின் விற்பனை சீரான நிலையில் இருந்து வருகிறது. ஏன்? வாகன உலகம் அடுத்த மாறுதலுக்குத் தயாராகி வருகிறது.

தற்போது வாகனத்தின் விலையைவிட, அதன் தோற்ற அமைப்பை பார்த்தே வாடிக்கையாளர்கள் வாங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடுத்தர வர்கத்தினருமே குறைந்த விலை கார்களை விட தோற்றம் அடிப்படையில் நவீனமாக இருக்கும் விலை உயர்ந்த கார்களை வாங்க விரும்புகின்றனர். எனில், உயர் வர்க்கத்தினர்? எனவேதான் ஆட்டோமொபைல் துறை நெருக்கடியில் இருந்தாலும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடலை அறிகப்படுத்துவதை நிறுத்துவதில்லை. அப்படியான சமீபத்திய அறிமுகம்தான் ஆடி ஏ6. தற்போது வெளிவந்திருப்பது அதன் எட்டாம் தலைமுறை படைப்பாகும்.

ஆடி நிறுவனம் பற்றிய முன்கதை சுவாரஸ்யமானது. ஆகஸ்ட் ஹார்ச் என்பவர் 1904-ம் ஆண்டு ஆகஸ்ட் ஹார்ச் அண்ட் சி. மோட்டார்வேகன் வொர்க் ஏஜி என்றொரு நிறுவனத்தை பங்குதார நிறுவனமாக தொடங்குகிறார். அடுத்த சில வருடங்களிலேயே அங்குள்ளவர்களுடன் மோதல் ஏற்பட, ஆகஸ்ட் ஹார்ச் அந்நிறுவனத்தில் இருந்து பிரிந்து புதிய நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார்.

அதற்கும் அவர் ஆகஸ்ட் ஹார்ச் என்ற தனது பெயரையே வைக்க, அவருடைய முந்தைய நிறுவனம் அவர்மீது வழக்குத் தொடுக்கிறது. ஹார்ச் என்ற பெயரை இவர் பயன்படுத்தக்கூடாது என்று. இந்தச் சூழலில் நிறுவனத்துக்கு வேறு பெயர் சூட்ட வேண்டிய நிலை ஏற்பட, அவருடன் இருந்தவர்கள் புதிய யோசனையை முன் வைக்கின்றனர். அவர் பெயரான ஹார்ச்சுக்கு லத்தீன் மொழியில் ஆடி என்று அர்த்தம். ஆடி என்றால் கவனி. எனவே அதையே நிறுவனப் பெயராக சூட்டலாம் என்று முடிவு செய்து ஆடி என்று பெயர் சூட்டப்படுகிறது.

அதன் பிறகு வெவ்வேறு சூழ்நிலையின் காரணமாக ஆடி, ஹார்ச், டிகேடபிள்யூ, வாண்டரர் ஆகிய ஒன்றாக இணைந்து ஆட்டோ யூனியன் என்று நிறுவனமாக மாற்றம் அடைகிறது. தற்போது ஆடி நிறுவனத்தின் இலச்சினையாக இருக்கும் நான்கு வளையங்கள், இந்த நான்கு நிறுவனங்களின் இணைவையே குறிக்கிறது.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியில் இருந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாயின. இவ்வாறாக பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் வழியே பயணித்து வந்த ஆட்டோ யூனியன் நிறுவனத்தை 1969-ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வாங்குகிறது. மீண்டும் அதற்கு ஆடி என்று பெயர் சூட்டி அறிமுகம் செய்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை முன்னணி வாகன நிறுவனங்களுள் ஒன்றாக ஆடி திகழ்கிறது.

இதை ஒட்டிய காலகட்டத்தில்தான், அதாவது 1968-ம் ஆண்டு ஆடி 100 முதல் தலைமுறை வெளிவந்து பெரும் வரவேற்பை பெறுகிறது. சில வருட இடைவெளியில் அடுத்தடுத்த தலைமுறை மாடல்கள் அறிமுகமாகின்றன. 1994-ம் ஆண்டு அதன் நான்காம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்யும்போதுதான் ஆடி 100 என்பதுக்கு பதிலாக ஏ6 என்று பெயர் சூட்டப்படுகிறது.

அடுத்த சில ஆண்டுகளில் ஐந்தாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதுவரை ஏறத்தாழ ஒரே தோற்றத்தில் இருந்த இந்த மாடல்களை நவீன தோற்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஆடி நிறுவனம் முடிவெடுக்கிறது. 2004-ம் ஆண்டு அதன் ஆறாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்கிறது. அதில்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் ஆடி கார்களின் அடையாளமான அதன் முகப்பில் சிங்கிள் பார் கிரில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்பிறகு 2011-ம் ஆண்டு அதன் ஏழாம் தலைமுறை மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 8 ஆண்டுகள் கழித்து தற்போது ஏ6-ன் எட்டாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

1984 சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் இன்ஜின், 245 ஹார்ஸ் பவரை 6000 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யக் கூடியது. அதிகபட்ச வேகமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.8 வினாடிகளில் எட்டக் கூடியதாக இதன் இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 14 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது. பிஎஸ் 6 விதிகளின்படி இந்த மாடல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதி நவீன தொழில் நுட்பங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு அம்சமாக 8 ஏர் பேக் உள்ளன. டிராக்ஸன் கன்ட்ரோல், டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் வசதி, ஓட்டுநருக்கான தகவல் அமைப்பு தொடுதிரை, பார்க்கிங் அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டீரிங் வீல் அட்ஜெஸ்மென்ட் என நவீன வசதிகளை இது கொண்டிருக்கிறது.

ஆடி ஏ6-ன் உட்புறத் தோற்றம் மிகுந்த கலை நயத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு மின்வெளிச்ச அமைப்புகளை அது கொண்டிருக்கிறது. அன்றைய மனநிலைக்கு ஏற்ப வாகனத்தின் உட்புற விளக்கு ஒளியை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் இருக்கை மிகுந்த நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இருக்கை பிரவுன் நிறத்திலும், பேர்ல் பெல்ஜ் நிறத்திலும் வருகிறது. அதன் புறத்தோற்றம் மிக வசீகரமாக உள்ளது. அதன் மேட் ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்கு கூடுதல் வசீகரத்தை அளிக்கிறது.

4933 மிமீ நீளம், 1874 மிமீ அகலம், 2913 மிமீ வீல்பேஸ் என்ற வடிவ அளவுகளைக் கொண்டிருக்கிறது. முந்தைய மாடல்களை விட அனைத்து வகையிலும் விசாலமான அமைப்பை இது கொண்டிருக்கிறது. ஐபிஐஎஸ் ஒயிட், மித்யாஸ் பிளாக், பிர்மாமெண்ட் புளூ, வெஸுவியஸ் கிரே, செவில் ரெட் ஆகிய 5 வண்ணங்களில் இது கிடைக்கிறது. இது 45 டிஎப்எஸ்ஐ டெக்னாலஜி, 45 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் என இரு வகைகளில் விற்பனைக்கு உள்ளது. இதன் விலை ரூ.54.20 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x