Published : 03 Nov 2019 11:09 AM
Last Updated : 03 Nov 2019 11:09 AM

பெண்ணைக் காப்போம்: அச்சுறுத்தும் குற்ற அறிக்கை

எல். ரேணுகா தேவி

பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் என ‘தாம்சன் ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் 2018-ல் ஆய்வறிக்கை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையின் உண்மைத்தன்மை குறித்துப் பலரும் அப்போது வெகுண்டெழுந்தனர். ஆனால், தற்போது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017-ம் ஆண்டுக்கான அறிக்கை, அந்தப் புலம்பலுக்கு விடை சொல்கிறது.

இந்த அறிக்கையின்படி 2017-ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான 3,59,849 குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய இரு ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இது அதிகம். இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் கணவன் அல்லது அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால்தான் நடக்கிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலிடத்தில் உத்தரப்பிரதேசம்

கல்வி, வேலை, அறிவியல், சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு போன்றவை உயர்வதற்குப் பதிலாக நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிகம் நடைபெறுவதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக இருந்த தலைநகர் டெல்லியில் 2017-ம்
ஆண்டில் 13,076 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளைவிட (15,310) சற்று குறைந்திருப்பது சிறு ஆசுவாசத்தை அளிக்கிறது. ஆனால், இந்த இடத்தைப் பசுக்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கும் உத்தரப்பிரதேசம் பிடித்துள்ளது.

இங்கு 2017-ம் ஆண்டில் மட்டும் 56,011 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதேபோல் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின்கீழ் 5,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் நாட்டிலேயே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் உறைவிடமாக உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் 5,397 எனவும் போக்ஸோ சட்டத்தின் கீழ் 1,587 வழக்குகள் எனவும் அறிக்கை சொல்கிறது.

அச்சுறுத்தும் பொதுவெளி

2017-ம் ஆண்டு அறிக்கையில் முதன்முறையாக இணையவழி குற்றங்கள் (சைபர் கிரைம்) இணைக்கப்பட்டுள்ளன. இணையவழியாகப் பெண்களை தவறாகச் சித்தரித்து, அவதூறாகப் பிரச்சாரம் செய்தவர்கள் என 1,460 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் இணைய வழியாகக் குழந்தைகள் மீது செயல்படுத்தப்படும் குற்றங்களாக 88 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் பதியப்படும் குழந்தைகளின் ஒளிப்படத்தைத் தவறாகச் சித்தரிக்கும் கயவர்கள், பதின் பருவத்தில் உள்ள குழந்தைகளிடம் தொலைபேசி, வீடியோ உரையாடல் வழியாகப் பாலியல் சைகையில் ஈடுபடும் நபர்கள் மீது இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துமுறைகளில்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகம் நடைபெறுகின்றன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து வேலைத் தளங்களில்தான் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகமாக நடக்கின்றன.

நீளும் வன்முறைகள்

அமில வீச்சில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் நிலையில் 2015, 2016-ம் ஆண்டுகளைவிட அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 244-ஆக அதிகரித்துள்ளது. வரதட்சிணைக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டாலும் 2017-ம் ஆண்டில் மட்டும் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் எண்ணிக்கை 7,466. அதேபோல் திருமணத்துக்காகக் கடத்திச் செல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் மட்டும் 30,614.

மேலும், பொதுவெளியில் இயங்கும் பெண்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான குற்றங்களின் எண்ணிக்கை 9,720-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் கடத்தப்பட்டவர்களில் பெண்கள் 21 சதவீதத்தினர். அதில் பத்து சதவீதப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். முதியவர்களுக்கு எதிராக வன்முறை நடைபெறும் நகரங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.

பெண்கள், குழந்தைகள் மீது முடிவில்லாமல் நீளும் இந்த வன்முறைப் பட்டியல், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. ஆனால், அவற்றிலும் பெண் சிசுக்கொலை, ஆணவக் கொலை, அமில வீச்சு, பெண்கள் - குழந்தைகள் கடத்தல் தொடர்பாக இடம்பெற்றுள்ள தரவுகள் பல இடங்களில் பூஜ்ஜியமாகவும் குறைந்த சதவீதத்திலும் குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பதிவுசெய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x