Published : 03 Nov 2019 11:09 AM
Last Updated : 03 Nov 2019 11:09 AM

நட்சத்திர நிழல்கள் 30: சாந்தி சாதனைப் பெண்ணா?

செல்லப்பா

சராசரிப் பெண்களுக்குத் திருமணம் என்பதே பெரிய சாதனை. அது நிகழ்ந்தவுடனேயே தங்கள் வாழ்வின் லட்சியத்தை எட்டியதாக எண்ணி அதன் சுக துக்கங்களுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துவிடுவார்கள். திருமண வாழ்க்கையில் கிடைக்கும் சராசரியான இன்பங்களில் திருப்தியடைந்து விடுகிறார்கள். ஆனால், திருமணம் கடந்து தனக்கென அடையாளம் வேண்டி சாதனை நிகழ்த்த விரும்பும் பெண் களுக்குத் திருமணம் சராசரியான ஒரு விஷயம்.

அது மட்டுமல்ல; சாதனைப் பெண்களில் பெரும்2பாலானோருக்குத் திருமணம் பெரிய தடைக்கல்லாகிவிடுகிறது. அதனாலேயே முடிந்தவரை திருமணத்தைத் தவிர்க்கவே விரும்புவார்கள். ஆனால், தனது நிறுவனத்தை இந்தியாவிலேயே நம்பர் ஒன் என்னும் இடத்துக்குக் கொண்டுவந்த சாந்திதேவி, தான் செய்துகொண்ட திருமணத்தால் ஒரு குடும்பத்தின் தலைவியாகச் சுருண்டுகொண்டார், ஏன்?

புயலாக ஒரு பெண்

சாந்திதேவி பிறந்தபோது, தந்தை விஸ்வநாதன் தனக்குப் பெண் குழந்தை பிறந்துவிட்டதே, தனக்குப் பிறகு தனது நிறுவனத்தைக் கவனிக்க ஆண் குழந்தை இல்லையே என வருந்தினார். ஆனால், அவருடைய வருத்தத்தைப் போக்கும்வகையில் சாந்தி தனது நிறுவனத்தை இந்தியாவிலேயே முதலாவதாக உயர்த்திக் காட்டினார். வாழ்க்கையில் அவருக்கு எப்போதுமே ஒன்றுதான் பிடிக்கும்; இரண்டு என்பது பிடிக்காது.

இந்த உலகத்தில் ‘பெண்தான் நம்பர் ஒன்’ என்னும் நம்பிக்கைகொண்டவர் சாந்தி. அவரைப் பொறுத்தவரை ஆண் வீட்டை ஆளணும்; பெண் நாட்டை ஆளணும். திருமணத்துக்குப் பிறகுகூடத் தான்தான் ‘நம்பர் ஒன்’ என்றும் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும் ஆண் ‘நம்பர் டூ’தான் என்றும் தொலைக்காட்சிப் பேட்டியிலேயே கூறினார் சாந்தி.

இப்படியான முன்னேற்றகரமான சிந்தனை கொண்ட சாந்தியின் வாழ்வில் கிருஷ்ணன் என்னும் ஆண் வந்து சேர்ந்ததற்குப் பின்னர் சாந்தி நம்பர் டூவாகிவிடுகிறார்; வீட்டை நிர்வகிக்கத் தொடங்கிவிடுகிறார். அது எப்படிச் சாத்தியமாகும், அடிப்படையான சிந்தனைப் போக்கை எப்படி ஒரு பெண் மாற்றிக்கொள்வார் என நீங்கள் கேட்கலாம். அது எல்லாம் மிகவும் சாதாரணமாக சாத்தியமாகும்.

ஏனெனில், ‘மன்னன்’ படத்தில் கிருஷ்ணனாக நடித்தவர் ஆணாதிக்க நடவடிக்கைகளுக்குப் பெயர்போன ரஜினிகாந்த். சாந்தியாக நடித்தவரும் சாதாரண நடிகையல்ல ‘பூ ஒன்று புயலானது’ புகழ் விஜயசாந்தி. ஆனாலும், ஒரு புயலே தென்றலாக வீட்டுக்குள் சுருண்ட கதை சாந்தியின் கதை. கிருஷ்ணனின் கதையோ ஜெகம் புகழும் கதை. காரணம் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கப் போக்கு என்பதைச் சொல்லத் தேவையில்லை.

பயங்கரக் கோபக்காரர், திமிர் பிடித்தவர் என்பதை உணர்த்தும் காட்சிகளைக் கொண்டே சாந்தி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். சட்டென அவருக்குக் கைதான் நீளும். தொழிற்சாலையில் ஒரு நாள் உற்பத்தியில் சிறு பின்னடைவு என்றவுடனே, சூபர்வைசரை வரவழைத்துக் கன்னத்தில் அழுத்தமான கைரேகையைப் பதித்துவிடுவார்.

வீட்டுக்கு வரும் வேளையில் நுழைவுவாயிலைத் திறந்துவிடக் காவலாளி இல்லாத கோபத்தில் வீட்டின் நுழைவுவாயில் கதவில் கார் அழுத்தமான முத்திரையைப் பதிக்கும். இப்படியான ஒரு முன்கோப நிர்வாக மேலாளரை உலகில் எங்கேயும் பார்க்க முடியாது. ஒரு பெண் தன் திறமையில் முன்னேறியவர் என்றால் அவர் பெருங்கோபக்காரராக முன்னிறுத்தப்படும் சமூகத்தின் போக்கையே இந்தக் காட்சிகள் பிரதிபலிக்கின்றன. உண்மையில் இப்படியொரு பெண் செய்வாரா என யோசிப்பதே இல்லை. என்னா கோபம் இந்தப் பெண்ணுக்கு என்று நமக்குத் தோன்றச் செய்வதே அவர்கள் நோக்கம்.

அறிவுரை தரும் ஆண்

சாந்திக்கு இப்படியான காட்சிகள் என்றால் கிருஷ்ணனுக்கு எப்படியான காட்சிகள்? பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தாயைக் குளிக்கவைப்பது முதல் அனைத்துப் பணி களையும் கவனிக்கும் சாந்தமான ஆண் அவன். உலகில் சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்க மாட்டார் இப்படியொரு சாந்த சொரூபி. கிருஷ்ணனுக்குக் கோபமே வராதா? வரும். அவர் கோபத்தை வெளிப்படுத்தினால் அது வீரம், சாந்தி கோபத்தை வெளிப்படுத்தினால் அது திமிர். எப்படியிருக்கிறது கதை?

கிருஷ்ணனை முதலில் சாந்தி சந்திக்கும்போதே மோதல்தான். ஆண் என்னும் திமிருடன் நடந்துகொள்ளும் கிருஷ்ணனை சாந்திக்குப் பிடிக்கவில்லை. பின்னர் அவன் தனது நிறுவனத்துக்கே மெக்கானிக் வேலை கேட்டு வருகிறான். அதுவும் தன் தந்தையின் சிபாரிசுடன். அப்படியும் அவள் கிருஷ்ணனுக்கு வேலை தராமல் திருப்பி அனுப்பிவிடுகிறாள்.

அப்படியே அனுப்பியிருந்தால் அவளுடைய வாழ்வில் அவள் குடும்பத் தலைவியாகக் குறை நாளைக் கழிக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. அவள் எப்போதும்போல் நம்பர் ஒன்னாக ஜம்மென்று வாழ்ந்திருக்கலாம். ஆனால், விஸ்வநாதன் குறுக்கிட்டு கிருஷ்ணனுக்கு அந்த மெக்கானிக் வேலையை வாங்கிக் கொடுத்து விடுகி றார். வேலை நாளில் பொய் சொல்லி லீவ் போட்டுவிட்டு தியேட்டருக்குப் போய் மாட்டிக்கொள்ளும் அசகாயசூரன் கிருஷ்ணன்.

அலுவலகத் தொழிலாளி ஒருவர் கையில் அடிபட்டு உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க சாந்திதேவியின் காரை எடுத்துச் செல்கிறார் கிருஷ்ணன். இதெல்லாம் சாத்தியமா என்கிறீர்களா? கிருஷ்ணனாக நடித்தவர் ரஜினி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். தொழிலாளிகள்தாம் தனக்கு எல்லாமே எனக் கருதும் சாந்தி, அவர்களில் ஒருவரது ரத்தக் கறை பட்டதால் தனது காரையே எரித்துவிடுகிறார்.

அவர் அப்படிச் செய்வாரா என்றுதானே நமக்குத் தோன்றுகிறது. ஆனால், அவர் தான் செய்தது தப்பு என்று தெரிந்தும் செய்கிறார். ‘எனக்கு வரும் கோபத்தில் என்ன செய்கிறேன் என்பதைத் தெரியாமல் செய்துவிடுகிறேன்’ என ஒப்புதல் வாக்கு மூலம் வேறு தருகிறார். அவரை வளர்த்து ஆளாக்கிய அழகி என்னும் பெண்மணி, ‘ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கோபம் ஆகாதும்மா’ என்று அறிவுரை தருவார். ஆண் எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்படலாமா?

தென்றலாகச் சுருங்கும் சாந்தி

அடுத்து, தொழிலாளர் சங்கத் தேர்தல். அதிலும் கிருஷ்ணன் வெற்றி பெற்றுவிடுகிறார். சாந்தி நிறுத்தும் ஆள் தோற்றுவிடுகிறார். தொடர்ந்து எல்லாவகையிலும் சாந்தியை எரிச்சல் படுத்தும் ஆளாகவே இருக்கிறான் கிருஷ்ணன். தொழிற்சாலையில் நேர இருந்த விபத்தொன்றில் சாந்தியைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றுகிறான் கிருஷ்ணன். தன்னைத் தொட்ட கோபத்தில் கிருஷ்ணனைக் கைநீட்டி அறைந்துவிடுகிறார் சாந்தி.

என்ன ஏது என்று புரியாமல் தன்னைக் காப்பாற்றுவதற்காகத்தான் தூக்கியிருப்பான் என்பதை உணர முடியாத அளவுக்கு முன்கோபி சாந்தி என்பதையெல்லாம் நாம் நம்ப வேண்டும். பெண்ணிடம் அடிவாங்கிய ஆண் சும்மா இருந்தால் தமிழ்ச் சமூகம் என்னவாகும்? பொங்கி எழுந்த கிருஷ்ணன் அவளது அறைக்குச் சென்று ஒருமையில் பேசி, ஒன்றல்ல நாலைந்து அறைகளைத் தருகிறான். அத்துடன் தமிழ்ப் பண்பாட்டை நினைவூட்டும் அறிவுரை மழை வேறு பொழிகிறான்.

இப்படித் தன்னிடம் சம்பளம் வாங்கும் தொழிலாளியிடம் அடிபட்ட சாந்திதேவி அவனையே திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். அதற்காகக் கையை எல்லாம் அறுத்துக்கொள்கிறாள். கிருஷ்ணனை மணமுடித்து அவனை வீட்டுப் புருஷனாக்கிவிட்டால்போதும் என்று நினைத்துச் செயல்படுகிறாள். அதை நிறைவேற்றியும் விடுகிறாள். அவள் கணவனான கிருஷ்ணன், பெண்ணுக்கு அழகைவிட அடக்கம்தான் முக்கியம்; அறிவைவிட அமைதிதான் முக்கியம் என்னும் ரீதியில் கிருஷ்ண பரமாத்மாபோல் முத்து முத்தான கருத்துகளைப் பேசி அவளைத் திருத்திவிடுகிறான்.

அவளும் தனது தவறை உணர்ந்து திருந்தி, அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறாள்.
கிருஷ்ணன் யாரைக் காதலித்தானோ அந்தப் பெண்ணை நிறுவனத்தின் முதலாளியாக்கிவிடுகிறார் சாந்தி. மேலும், அதிகாலையில் எழுந்து குளித்து நல்ல குடும்பப் பெண்ணாக, கணவனுக்குச் சமைத்துக் கொடுத்து அவனை அலுவல கத்துக்கு அனுப்பிவைக்கிறாள். ஆக, நம்பர் ஒன்னாக இருந்த சாந்தி திருந்தி நம்பர் டூவாக மாறியிருக்கிறார். என்ன, சாந்தியின் கதை பயங்கர நகைச்சுவையாக இருக்கிறதா சாந்திகளே?

(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x