Published : 03 Nov 2019 11:09 AM
Last Updated : 03 Nov 2019 11:09 AM

வாழ்வு இனிது: இந்தி தெரிந்து என்ன பயன்

என்.சுவாமிநாதன்

முழுசா ஒரு வாரம் தாண்டிருச்சு. இன்னும்கூட மனசுக்குள்ள அதுதான் ஓடிக்கிட்டுகிடக்கு.
“கன்னியாகுமரிவரை போயிட்டு வருவோமா மக்கானு” கூட்டுக்காரன் செல்வம் வீட்டுக்கு வந்து நின்னப்போ மணி மதியம் ஒண்ணு.

“ஏல, மனுசனால நீ? இந்த உச்சிவெயில்ல கன்னியா குமரிவரை பைக் ஓட்டி, போகாண்டா மாடே? இந்த வெயிலுல போகதுக்கு உனக்கு சொகமா இருக்காக்கும்”ன்னு முதல்ல ஏசத்தான் செஞ்சேன். “ஏல நீ மாத்திரம் திடீர், திடீர்னு ஏதாச்சும் ஸ்டோரிக்குப் போகணும்னு ஊடால கூப்புடுக. நான் வெயிலு, மழைன்னு பாத்தால வந்தேன்?” என உரிமைப் போர் தொடுத்து சென்டிமென்டாய் தாக்கினான் செல்வம். பிறகென்ன பைக்கில் புறப்பட்டோம்.

சுரண்டிய கை

குமரியின் சூழல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத உணர்வைத் தரக் கூடியது. கன்னியாகுமரி கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்தோம். பின்னால் இருந்து ஒரு கை என் பேன்டை சொறிந் தது….. முழங்காலின் பின்பகுதியில்… பின் பாக்கெட்டில் இருந்த பர்சை கையால் தடவி உறுதிசெய்துகொண்டே திரும்பினேன்.
ஒரு இந்திக்காரக் குழந்தை நின்றது. அதிகபட்சம் ஐந்தாறு வயது இருக்கும். வலக்கையில் தூக்குச்சட்டி. இடக்கையால் வயிற்றை ஒரு தடவு தடவிக்கொண்டே, தன் கைகளை வாய் அருகே கொண்டுசென்று, என்னை நோக்கி நீட்டியது அந்தக் குழந்தை…

வறுமையைக் காட்டும் சமிக்ஞைகளைத் தவிர அதற்கு வேறு ஒன்றும் தெரியவில்லை. அதற்குத் தமிழும் எனக்கு இந்தியும் பரிச்சயம் இல்லாததால், எங்களுக்குள் பேசவும் எதுவும் இல்லை. செல்வம் பத்து ரூபாயை தூக்குச்சட்டியில் போட்டான். அந்தக் குழந்தை சிரித்தது. எனக்கு ‘தெறி’ படத்தில் அழகம்பெருமாள், இந்திக் குழந்தைக்கு கொடுத்த பத்து ரூபாய் நினைவுக்கு வந்தது. என்னோட ஊர்க்காரர் என்பதால் இன்னும் ஆழமாக ஓர்மையாய் இருந்தது அந்தக் காட்சி!

விவரமான குழந்தைகள்

இன்னும் கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். மீண்டும் ஒரு குழந்தை, அதே செய்கை. ஒவ்வொருவரிடமாக அந்தக் குழந்தைகள் கையேந்திக் கொண்டிருந்தன. முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறைப் பகுதியில் கொத்துக் கொத்தாகப் பாவம் போக்க மக்கள் நீராடிக்கொண்டிருந்தார்கள். தமிழகக் குழந்தைகள் சில, கரையேறியவர்களைச் சூழ்ந்துகொண்டன. பெண்கள் தலையில் மாட்டும் பேன்ட்டை அந்தக் குழந்தைகள் கையில் வைத்திருந்தார்கள். ஒண்ணு அஞ்சு ரூபாய், பத்து ரூபாய் என ஆளின் தோற்றத்துக்கு ஏற்ப விலை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

எப்படிப் பார்த்தாலும் பத்து, பதினைஞ்சு பிள்ளைகள் இருப்பார்கள். மெல்ல ஒரு குழந்தையிடம் பேச்சு கொடுத்தோம்.
“உனக்கு எந்த ஊரும்மா?” - திருநெவேலி.
“அங்க எங்க?”- பேட்டை……
“ஆமா, எதுக்குக் கேட்கியோ? நீங்க பேப்பர் காரவுகளா? நான் ஸ்கூலு படிக்கனே… ஆறாம் கிளாஸ்” எனத் தன்னார்வமாக ஒப்பித்தபோதே, அந்தக் குழந்தைக்குப் போதிக்கப்பட்டிருந்த தொழில் நெறிமுறை பல் இளித்தது.

சரி… என ஒரு போட்டோ பிடித்தோம். “எதுக்குப் படம் எடுக்கிய?” என விவரமாய் கேட்டது. “இத்தனை அறிவுள்ள குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பாமல் பொருள் விக்க அனுப்பிய பெற்றோருக்கு, இக்குழந்தை யின் மூலம் வரும் வருமானம், அவமானம்னு தெரியுமோ, என்ன இழவோ?” என்றான் நண்பன் கோபத்துடன்.

பதில் சொல்ல முடியாமல் கடற்கரையை வெறித்துப் பார்த்தேன். கரைப் பகுதியில் பாறைகளுக்கு இடையே நிற்கும் தண்ணீர்ல் சிறுசிறு மீன் குஞ்சுகளைத் துண்டால் பிடித்துக்கொண்டிருந்தார்கள் வேறு சில தொழிலாளர்களின் குழந்தைகள். பக்கத்தில் போனோம். “வேணுமா பத்து மீன்குஞ்சு, பத்து ரூபாய்” என்றான் பொடியன் ஒருவன். எனக்கு அவனது கல்வி, எதிர்கால வாழ்வெல்லாம் பிளாஸ்டிக் பைக்குள் இருந்த மீனைப் போலவே நீச்சலடித்துக்கொண்டிருப்பதாகப்பட்டது.

தலைநகரிலிருந்து கடைக்கோடிக்கு…

திடீரென, “கன்னியாகுமரி நாற்கரசாலை முடியற இடத்தைப் பார்த்துருக்கியா நீ?” என்று கேட்டான் நண்பன். “இல்லியேடே… என்ன சமாச்சாரம்” “நீ வா காட்டுகேன்”. பைக்கை எடுத்துட்டுப் போனோம்.
வரிசையாக டெண்ட் அடிச்சு, கூட்டம் கூட்டமா இந்திக்காரர்கள் இருந்தார்கள். இருபது, இருபத்தைஞ்சு குடும்பம் இருக்கும்.

ஒவ்வொரு குடும்பத்துலயும் இரண்டு, மூணு பொட்டுப் பொடிசுங்க. ஒண்ணும் பள்ளிக்கூடம் போகல. கொட்டு, மிருதங்கம், சட்டிகொட்டுன்னு விதவிதமா செஞ்சு விக்குது இந்தக் கூட்டம். கடற்கரைதான் குளியல் அறை, கக்கூஸ் எல்லாமே! பத்துக்கு பத்தில் டெண்ட் அடித்து சமையலும் நடக்கிறது. அதனுடன் விற்பனைக்கான பொருள்களின் தயாரிப்பும்… குவியல் குவியலாய் அழுக்குமூட்டைகள் போல் காட்சியளித்தன உணவு, உடை உள்ளிட்டவை.

“எப்படிப் பார்த்தாலும் இந்தக் கூட்டத்துல பள்ளி செல்லாத பிள்ளைங்க நாப்பதாச்சும் காணும்… அப்புறம் முக்கியமானது, இவங்களுக்கு எந்த ஊரு தெரியுமா? நாடாளுமன்றம் கூடி, நாட்டுக்கே சட்டம் இயற்றக்கூடிய ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரம்’ டெல்லி” என்றான் நண்பன்.

டெல்லியில் இருந்து 39 கிலோ மீட்டரில் இருக்குற பவானா ஜெ.ஜெ. காலனிதான் இவுக ஏரியா. நாடோடி வாழ்க்கை… வருசத்துல ஆறு மாசம் கன்னியாகுமரி... ஆறு மாசம் டெல்லி. கடந்த பத்து வருசமா கன்னியா குமரி வந்துட்டு இருக்காங்க. கூடவே குடும்பத்தையும் கூட்டிட்டு வர்றதுனால, இந்தப் பிள்ளைங்களுக்குக் கல்வியும் போக்குத்தான்.

இந்திக்காரர்களின் அவலம்

“எங்களுக்கு மட்டும் படிக்க வைக்கணும்னு ஆசை இல்லியா சார்…. வயித்தை நிறைக்கவே ஓட வேண்டியிருக்கு” எனப் புலம்புகிறது அந்தக் கூட்டம். கூடாரப் பகுதிக்குச் சென்றதுமே, பலரும் `துணி தருவீங்களா? காசு தருவீங்களா' என மொய்த்துக்கொண்டபோது, துயரமாக இருந்தது. அந்தக் கூடாரங்களில் வெயிலிலும் மழையிலும் சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் பார்த்தபோது மனம் ரணமானது.

அப்போது செல்வம் கேட்டான்… “மாப்ள… எனக்கு ஒரு சந்தேகம்… இந்தி படிச்சா, ஆகா ஓஹோன்னு வரலாம்னு சொல்லிக்கிட்டு இருக்கானுக… ஆனா பூரா இந்திக்காரனும் இங்கல்லா வந்து நிக்கான். ரோடு வேலையும் முழுக்க அவனுங்கதானே”ன்னான்.

அந்த இடத்தின் மையப் பகுதியில்தான் எங்கள் உரையாடல் நிகழ்ந்தது. இப்போதும் முழங்கால் பகுதியில் ஒரு குழந்தை சுரண்டி, கை ஏந்தியது. பச்சைப் பிள்ளையைக் காட்டி இன்னொரு பெண் பாலுக்குக் காசு கேட்டார்...

உயரப் பறக்கும் கொடியும் தாழப் பறக்கும் வாழ்க்கையும்

மனம் நிறைந்த வேதனையோடு, நாற்கர சாலையைத் தாண்டுகையில், ‘கையேந்தும் குழந்தைகளைக் கைகளில் ஏந்துவோம்’ எனச் சமூக நலத்துறையின் பதாகை கண்ணில் பட்டது. இந்த நாற்கரச் சாலையோடு இந்தியாவின் ஒருமுனையின் சாலையே முடிகிறது. அல்லது தொடங்குகிறது என்றும் கொள்ளலாம். அங்கே பிரம்மாண்டமான தேசியக் கொடி காற்றில் அசைந்தாடிப் பறக்கிறது. அந்தக் கூடாரப் பகுதியின் முகப்பில் இருந்து பார்த்தால் பளிச்செனப் பட்டொளி வீசி பறக்கும் கொடி அசைய அசைய, அது ஏதோ சொல்ல முற்படுவதுபோல் தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x