Published : 02 Nov 2019 12:36 PM
Last Updated : 02 Nov 2019 12:36 PM

வேளாண் சர்ச்சை: ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் சாதனையா?

பாமயன்

ஒப்பந்தச் சாகுபடி அல்லது ஒப்பந்தப் பண்ணையம் தொடர்பாக தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) என்ற சட்டத்தை தமிழக அரசு அண்மையில் கொண்டுவந்துள்ளது. இதற்குக் குடியரசுத் தலைவர் கடந்த வாரம் ஒப்புதலும் கொடுத்து
விட்டார்.

இந்த வகையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு தன்னை அறிவித்துக்கொண்டது.
இந்தச் சட்டத்தை இவ்வளவு வேகமாக நிறைவேற்றியுள்ள தமிழக அரசிடம், கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து இயற்கைவழி வேளாண்மைக்கான ஒரு கொள்கை வெளியிட வேண்டும் என்று தமிழக உழவர்கள் எத்தனையோ முறை வேண்டிக் கேட்டுக்கொண்டுவிட்டனர். இதுவரை எந்த நகர்வும் இல்லை. ஆனால், இந்த ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம், அவசரம்?

யாருக்கு லாபம்?

வேளாண்மையைப் பெருங்குழும (Corporate company) முறைக்குள் கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒப்பந்தச் சாகுபடிக்குள் இருக்கும் நோக்கம் என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி. இந்தச் சட்டத்தின் முன்னுரையில் விளைபொருட்களை அதாவது கால்நடைகள் உட்பட மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் உழவர்கள், நிறுவனங்கள் என இரண்டு தரப்பினரும் பயன்பெறும் வகையில் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

நடுவண் அரசின் சட்ட முன்வடிவில் உழவர்களை பலவீனமான பிரிவினர் என்ற அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற கூறு உள்ளது. ஆனால், தமிழக அரசின் சட்டத்தின் அந்தப் பார்வை குறைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஒப்பந்தச் சாகுபடியால் உண்மையில் உழவர்களுக்கு நன்மை கிடைத்துள்ளதா என்று பார்த்தால்,
இல்லை என்ற பதில்தான் இதுவரை உலக அளவில் கிடைத்துள்ளது. சில இடங்களில் உழவர்களுக்கு அதிக பணம் கிடைத்துள்ளது. ஆனால், அவர்களது கடன் அதிக அளவு உயர்ந்துள்ளது.

இந்த ஒப்பந்தப் பண்ணையம் என்பது பெருங்குழுமங்கள் தங்களுடைய இடுபொருட்களையும் தொழில்நுட்பத்தையும் உழவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள். பிறகு அதிக உற்பத்தி என்ற போர்வையை கண்முன் காட்டி, பின்னால் கொல்லைப்புறம் வழியாகப் பிடுங்கிக்கொள்ளும் கூத்துதான் நடந்துள்ளது.

தாய்லாந்து நொடித்த கதை

தாய்லாந்தில் நெல் சாகுபடி செய்து இயல்பாக தங்களது வாழ்க்கையை நடத்திச் சென்ற உழவர்களிடம் கரும்பு விளைவிக்கலாம், அதிலும் அதிகம் விளைவிக்கலாம் என்ற ஆசை காட்டப்பட்டது. இந்தப் பெயரில் வேதி உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் அவர்களுடைய தலையில் கட்டி அவர்களைக் கடனாளி ஆக்கியதுடன், அவர்களுடைய மண்ணையும் தண்ணீரையும் தனியார் நிறுவனங்கள் வீணாக்கின.

இதை ஐ.நா.வின் சார்பு அமைப்பான உணவு வேளாண் நிறுவன ஆய்வு குறிப்பிடுகிறது. 50 முதல் 60 டன் (ஹெக்டேருக்கு) விளைவித்து வந்த உழவர்கள் ஒப்பந்தப் பண்ணை முறைக்கு மாறிய பின்னர் 70 முதல் 75 டன்வரை அறுவடை எடுத்தனர். இதனால் அவர்களுக்கு 15 டன் அளவுக்குக் கூடுதல் பணம் கிடைத்தது என்று அரசும் தனியார் நிறுவனங்களும் கூறின. ஆனால், அதற்கு முன்பு கடன் இல்லாமல் இருந்த உழவர்கள், அதன் பின்னர் பெரும் கடனாளியாக மாறிப்போனார்கள் என்பதுதான் கதை. ஆனால், இந்தக் கதை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

கதைத்தது போதும்

பசுமைப் புரட்சி காலத்திலும் இந்தக் கதைதான் கதைக்கப்பட்டது. உற்பத்தி பெருகியது, பணம் பெருகியது என்ற கதையாடல் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், உழவர்கள் கடனாளியாக மாறுவதுடன் தங்களது வேளாண்மை ஆதாரங்களான நீர் வளத்தையும் நில வளத்தையும் இழந்திருக்கிறார்கள்.

இது பேசப்படுவதேயில்லை. இப்போது ஒப்பந்தக் சாகுபடிக்கு முனைப்பாக வந்துள்ள தனியார் நிறுவனங்கள் யார்? பேயர் (மான்சாண்டோவை வாங்கியவர்கள்), பெப்சி, இமாலயா ஹெல்த்கேர், ஐ.டி.சி., இந்துஸ்தான் யூனிலிவர். இவற்றுடன் அதானி குழுமம். ஆக, நமது உழவர்களிடம் இந்த வகையிலான புதிய கதையாடலே தொடங்க உள்ளது.

உண்மையில் ஒப்பந்த வேளாண்மை எப்படி இருக்க வேண்டும்? சமூகம் தாங்கும் வேளாண்மையாக இருக்க வேண்டும். உழவர்களும் நுகர்வோரும் நேரடியாக இணைய வேண்டும். அதற்கு உதவியாக சிலர் இருக்கலாம். வரும் வருமானத்தில் 60 முதல் 70 சதவீதம் உற்பத்தியாளரான உழவருக்கே செல்ல வேண்டும். மீதமே மற்றவருக்குச் செல்ல வேண்டும். இந்த அறம் இல்லாத எந்தச் சட்டமும் உழவர்களுக்குப் பயன்படாது.

கட்டுரையாளர்,
சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x