Last Updated : 13 Jul, 2015 10:07 AM

 

Published : 13 Jul 2015 10:07 AM
Last Updated : 13 Jul 2015 10:07 AM

டிரைவர் இல்லாத கார்!

ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா உடனே நாம் தேடும் இணைய தளம் கூகுள். ஒரு இடத்திற்கு சரியாக போய்ச் சேர வேண்டுமா நமக்கு அப்போதும் கைகொடுப்பது கூகுள் மேப். கண்ணாடியிலேயே அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமா அதற்கும் உதவுகிறது கூகுள் கிளாஸ். இந்த வரிசையில் இப்போது பல்வேறு கட்ட சோதனையில் இருப்பதுதான் டிரைவர் இல்லாத கார்.

விபத்துகளுக்கு யார் காரணம்?

பெரும்பாலான வாகன விபத்துகளுக்குக் காரணமே டிரைவர்களின் அலட்சியம் அல்லது அவர்களது உடல் அசதிதான் என கண்டறியப் பட்டுள்ளது. சோர்வே காணாத ரோபோ இயந்திரம் போல தொழில்நுட்பத்தை டிரைவர் இல்லாத கார்களுக்குப் பயன்படுத்தினால் என்ன என்பதன் விளைவாக உருவானதுதான் டிரைவர் இல்லாத கார்.

நெவடாவில் அனுமதி

டிரைவர் இல்லாத கார் வடிவமைப்பு, அதற்கான தொழில்நுட்பத்தை தயாரிப்பதற்கு முன்பாக அதற்கு அனுமதி பெற்றாக வேண்டியிருந்தது. இதற்காக 2011-ம் ஆண்டிலிருந்து ரோபோ கார்கள் அதாவது டிரைவர் இல்லாத கார்களை இயக்கிப் பார்ப்பதற்கு அனுமதி வேண்டும் என்று கூகுள் நிர்வாகம் வலியுறுத்தியது.

2012ம் ஆண்டு மே மாதம் இதற்கான அனுமதியை நெவடா மாகாணம் அளித்தது. இதைத் தொடர்ந்து டிரைவர் இல்லாத காரை தனது தொழில்நுட்பம் முழுவதையும் பயன்படுத்தி டொயோடா பிரியஸ் காரில் சோதித்துப் பார்த்தது கூகுள். இந்தியாவில் பொக்ரான் போல, அமெரிக்காவில் நெவடா மாகாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குதான் அமெரிக்கா பெரும்பாலும் அணுகுண்டு சோதனைகள் நடத்துவது வழக்கம்.

தொடர் அனுமதி

இதைத் தொடர்ந்து தங்கள் மாகாணத்திலும் டிரைவர் இல்லாத காரை சோதித்துப் பார்க்க அனுமதி அளித்தது புளோரிடா மாகாணம். இதைத் தொடர்ந்து கலிபோர்னியா மாகாணத்தில் இத்தகைய காரை சோதித்துப் பார்க்க அனுமதி அளித்தார் அம்மாகாண கவர்னர் ஜெர்ரி பிரவுன்.

மிக்சிகன் மாகாண நிர்வாகம் கடந்த ஆண்டு சாலைகளில் இத்தகைய காரை இயக்கிப் பார்க்க அனுமதி அளித்தது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் கூகுள் நிறுவனம் தனது டிரைவர் இல்லாத காரை வெளி உலகுக்கு அறிமுகம் செய்தது.

ஸ்டீரிங் வீல் கிடையாது

காரின் இலக்கணமாகக் கருதப்படும் ஸ்டீரிங் வீலும் கிடையாது, ஆக்ஸிலரேட்டரோ, கிளட்சோ இதில் கிடையாது என்பதுதான் விசேஷமாகும். இந்த ஆண்டு இறுதியில் சான் பிரான்சிஸ்கோ நகரின் முக்கிய வீதிகளை டிரைவர் இல்லாத கார் சுற்றி வர உள்ளது. இந்தக் காரை உருவாக்கும் குழுவின் தலைவராக இருப்பவர் செபாஸ்டியன் தருண். இவர் ஸ்டான்போர்டு ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர்.

கூகுள் ஸ்டிரீட் வியூ உருவாக்கத்தில் இவருக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. இவரது குழு உருவாக்கிய ரோபோ வாகனம் 2005-ம் ஆண்டில் 20 லட்சம் டாலர் பரிசைப் பெற்றது. இந்தப் பரிசை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த கார் உருவாக்கத்தில் 15 பேரடங்கிய வல்லுநர் குழு ஈடுபட்டுள்ளது. இக்குழுவில் கிரிஸ் உர்ம்ஸன், மைக் மான்டிமேரியோ, அந்தோனி லெவான்டோவ்ஸ்கி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டொயோடா பிரியஸ், ஆடி டிடி, லெக்சஸ் ஆர்எக்ஸ் 450ஹெச் உள்ளிட்ட கார்கள் இந்த சோதனைக்குப் பயன்படுத்தப்பட்டன.

இது தவிர கூகுள் நிறுவனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான வாகனத்தை ரௌஷ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் அசெம்பிள் செய்து கொடுத்துள்ளது. பாஷ், இஸட் எப் லென்ஸ்கிஸ்டீம், கான்டினென்டல் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கார்களில் 1.5 லட்சம் டாலர் மதிப்புள்ள மின்னணு தொழில்நுட்பக் கருவிகள் பொறுத்தப் பட்டுள்ளன. இதில் 70 ஆயிரம் மதிப்புள்ள லிடார் சிஸ்டம் கருவியும் அடங்கும்.

லேசர் கருவி

இந்தக் காரில் 64 வெலோடைன் 64 பீம் லேசர் கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த லேசர் கருவிதான் காரைச் சுற்றி முப்பரிமாண பதிவை வரைபடமாக காருக்கு அனுப்புகிறது. அந்த வரைபடத்துடன் ஏற்கெனவே காரில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக துல்லியமான வரைபடத்துடன் பொறுத்திப் பார்த்து காரை செயல்படுத்தும். கடந்த ஆண்டு 6 டொயோடா பிரியுஸ் கார் மற்றும் ஆடி டிடி கார், மூன்று லெக்சஸ் ஆர்எக்ஸ் 450 ஹெச் கார் ஆகியன சோதிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒரு டிரைவர் மற்றும் ஒரு தொழில்நுட்ப நிபுணர் பயணித்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கூகுள் நிறுவன ஆளில்லா கார் 11 லட்சம் கிலோ மீட்டர் தூர அளவுக்கு சோதனை ரீதியில் ஓடியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. புதிதாக இந்நிறுவனம் உருவாக்கியுள்ள காரில் டிரைவர் இருக்கை கிடையாது. ஸ்டீரிங் சக்கரம் கிடையாது. பிரேக் பெடல் கிடையாது. இதுவரை இந்த கார் சோதனை ஓட்டத்தில் 2 லட்சம் நிறுத்த விளக்குகளில் நின்று புறப்பட்டுள்ளன. 6 லட்சம் சாலை எச்சரிக்கை விளக்குகளைக் கடந்துள்ளன. சாலையில் இந்த வாகனங்களை 18 லட்சம் பிற வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.

2020-ல் விற்பனைக்கு வரும்

2012-ம் ஆண்டு கூகுள் நிறுவனர்களின் ஒருவரான செர்கி பிரின் கூறுகையில் ஆளில்லாத இந்த கார் பொதுமக்களின் உபயோகத்துக்கு 2017-ம் ஆண்டில் கிடைக்கும் என்றார். ஆனால் இப்போது 2020-ம் ஆண்டுக்குள் வர்த்தக ரீதியில் இது விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

விபத்தில்லா உலகம் படைக்க இத்தகைய தொழில்நுட்பம் வரவேற்கத்தக்கதே. இனி இங் குள்ள ஆலைகளும் கூகுள் தொழில்நுட்பத்தோடு டிரைவர் இல்லா கார்களைத் தயாரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இந்நிறுவனங்களின் ஆராய்ச்சியின் வெளிப்பாடு கார் நிறுவனங்களின் வளர்ச்சியை பன்மடங்கு உயர்த்தும் என்பது நிச்சயம்.

காரின் இலக்கணமாகக் கருதப்படும் ஸ்டீரிங் வீலும் கிடையாது, ஆக்ஸிலரேட்டரோ, கிளட்சோ இதில் கிடையாது என்பதுதான் விசேஷமாகும்.

12 சிறிய விபத்துகள்

இதுவரை நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் 12 சிறு சிறு விபத்துகளை இந்த டிரைவர் இல்லாத வாகனங்கள் சந்தித்துள்ளன. இந்த தவறுகளும் ஆளில்லா காரினால் ஏற்பட்டதல்ல. பிற வாகன ஓட்டிகளின் கவனக் குறைவால் நிகழ்ந்தவைதான். 8 முறை நிகழ்ந்த விபத்துகள் அனைத்துமே பின்புறத்திலிருந்து வாகனங்கள் மோதியதால் நிகழ்ந்தவை.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x