Published : 27 Oct 2019 10:46 AM
Last Updated : 27 Oct 2019 10:46 AM

வானவில் பெண்கள்: விவசாயத்தில் குறிஞ்சிமலர்

வி.சுந்தர்ராஜ்

பொறியியல் முடித்த மகள் பெருநகரத்தில் வேலைக்குச் சேர்ந்து கைநிறையச் சம்பாதிப்பாள் என அந்தப் பெற்றோர் நம்பிக்கொண்டிருந்தபோது, குறிஞ்சிமலரோ மண்வெட்டியுடன் விவசாய நிலத்தில் இறங்கியிருக்கிறார். பெற்றோர் மட்டுமல்ல; சுற்றத்தாரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நிற்க, விவசாயம்தான் தன் பாதை என்பதில் தெளிவாக இருக்கிறார் 22 வயதாகும் குறிஞ்சிமலர்.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள பாதிரக்குடியைச் சேர்ந்த சபாபதி - தேன்மொழி தம்பதியின் ஒரே மகள் குறிஞ்சிமலர். 2018-ல் சென்னையில் பி.டெக். முடித்த இவர், கடந்த ஓராண்டாகப் பல்வேறு இடங்களில் வேலை தேடினார். கிடைத்த வேலையில் குறிஞ்சிமலருக்கு மனம் ஒன்றவில்லை. நகரத்தின் நெருக்கடி நிறைந்த வாழ்க்கையில் தவித்தவருக்குத் தன் சொந்த ஊரில் உள்ள பெண்களின் நினைவு வந்தது. பலரும் விவசாயக் கூலி வேலைக்குச் சென்று பிற்பகலில் மகிழ்ச்சியோடு திரும்புவதைப் பார்த்துத் தானும் விவசாய வேலைக்குச் செல்ல நினைத்தார்.

வேர்விட்ட ஆர்வம்

தன் விருப்பத்தை மறுநாளே அம்மாவிடம் சொன்னார். “நீ படிச்ச பொண்ணு. உனக்கு இந்த வேலையெல்லாம் சரிப்படாது” எனச் சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார் தேன்மொழி.

ஆனால், குறிஞ்சிமலரின் மனமோ விவசாய வேலையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. தன் படிப்புக்கு ஏற்ற விவசாய வேலை ஏதாவது இருக்கிறதா என இணையத்தில் தேடினார். அந்தத் தேடலில்தான் ‘மரம்’ சண்முகசுந்தரம் குறித்து அறிந்துகொண்டார். “அவர் 35 கிராமங்களில் 76 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார் என அறிந்ததும் உடனே அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். என்னோட ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவர், மறுநாளே என்னைச் சந்தித்தார். எங்கள் வீட்டின் அருகே தரிசு நிலம் இருந்ததைப் பார்த்து அந்த நிலம் யாருடையது என்றார். அது எங்கள் உறவினருடையது என நான் சொன்னதும் உடனே அவரிடம் பேசினார்.

‘வரப்பெல்லாம் வைரம், தரிசெல்லாம் தங்கம். உங்க தரிசு நிலத்தை எங்களிடம் மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாங்க. அதை நாங்கள் பணம் காய்க்கும் இடமாக மாற்றித் தருகிறோம்’ என்று அவரிடம் சொன்னார்” என்று சொல்லும் குறிஞ்சிமலர், தங்கள் உறவினரிடமிருந்து ஒப்புதல் கிடைத்ததும் உடனே களத்தில் இறங்கிவிட்டார். நிலத்தை உழுது, சுற்றிலும் கம்பி வேலி அமைத்து முதல் கட்டமாக 1, 500 தேக்குமரக் கன்றுகளை நட்டிருக்கிறார்.

அடையாளப்படுத்திய வீடியோ

மரக்கன்றுகளை நட்டுவிட்டு, நிலத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டபோது தான் விவசாயத்துக்குத் திரும்பியதற்கான காரணத்தை ஒரு நிமிட வீடியோவாக எடுத்து அதை முகநூலில் பதிவிட்டார். வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே வைரலானது. அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்கூட குறிஞ்சிமலரின் வீடியோவை ஷேர் செய்திருந்தனர். கல்லூரித் தோழிகள் பலர் போனில் அழைத்து வாழ்த்த, தான் சரியான பாதையில்தான் பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறோம் என குறிஞ்சிமலர் உணர்ந்தார்.

பலரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்ய ஆசைப்படும்போது ஏன் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்குத் தெளிவான பதிலை வைத்திருக்கிறார் குறிஞ்சிமலர்.
“என் அப்பா திருப்பூரில் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். அம்மா கூலி வேலை செய்யறாங்க. நான் சென்னையில் படித்தபோதே விவசாயத்தில் ஆர்வம் இருந்தது. படித்து முடித்து வேலை தேடினாலும் எனக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. சுதந்திரமும் பாதுகாப்பும் இருக்கற வேலை எதுன்னு யோசித்தபோது கிடைத்த விடைதான் விவசாயம். காலைல இருந்து சாயந்திரம் வரை வேலை இருக்கும். ஆனா, யார்கிட்டேயும் அடிமையா இருக்க வேண்டியதில்லை. உள்ளூர்லயே வேலை என்பதால் பாதுகாப்பும் இருக்கும்” என்கிறார் குறிஞ்சிமலர்.

தயங்கிய பெற்றோர்

குறிஞ்சிமலரின் முடிவை அவருடைய பெற்றோர் ஆரம்பத்தில் ஏற்கவில்லை. “பி.டெக் படிக்கவே அஞ்சு லட்சம் வரைக்கும் செலவழிச்சிருக்கோம். கல்யாணச் செலவு வேற இருக்கு. உன்னைப் படிக்கவெச்சு நல்ல இடத்தில் கல்யாணம் செய்துகொடுக்கணும்னு நினைச்சிட்டு இருக்கோம். நீ பாட்டுக்கு விவசாய வேலைக்குப் போனா யாரு உன்னைக் கட்டிக்குவான்னு ரெண்டு பேரும் கேட்டாங்க. வெளியூர்ல தங்கி வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கிற பிரச்சினைகளைப் பத்தி அவங்ககிட்ட எடுத்துச் சொன்னேன். எல்லாத் தொழிலுக்கும் ஆதாரமான விவசாயத் தொழிலைச் சொந்த ஊர்ல, பெத்தவங்களோட இருந்துகிட்டே செய்யறதுல இருக்கிற நிறைவைப் பத்தியும் சொன்னேன். நான் நிச்சயமா விவசாயத்தில் சாதிப்பேன்னு சொல்லி அவங்களைச் சம்மதிக்க வச்சேன்” என்று சிரிக்கிறார் குறிஞ்சிமலர்.

“என்னைப் பெத்தவங்க மட்டுமல்ல, சுத்தியிருக்கவங் களும் ஆரம்பத்துல திகைச்சாங்க. இந்தப் பொண் ணுக்கு என்ன கிறுக்குப் பிடிச்சிருக்கான்னு பலர் நேராவே கேட்டாங்க. பலர் கேலி பண்ணாங்க. ஆனா, என் தோழிகள் பலரும் என்னை வாழ்த்தினாங்க. தொடங்கிய முயற்சியைக் கைவிடாதேன்னு அவங்க சொன்னது ஊக்கத்தைத் தந்தது” என்று சொல்லும் குறிஞ்சிமலர், விவசாயம் தொடர்பான பயிற்சிகளை சண்முகசுந்தரத்திடம் இருந்து கற்றுக்கொள்கிறார். பூச்சியியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவரும் ராஜேஸ் வரியிடமும் அவ்வப்போது ஆலோசனை பெறுகிறார்.

தாயின் நம்பிக்கை

ஓராண்டு கழித்து தேக்கு மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக மிளகுக் கொடியை வளர்க்கவிருப்பதாகச் சொல்கிறார் குறிஞ்சிமலர். சொந்தமாக நர்சரி தொடங்குவதுடன் இயற்கை விவசாயத்துக்குத் தேவையான பஞ்சகவ்யம் உள்ளிட்ட உரங்களைத் தயாரித்து நஞ்சில்லா விவசாயத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதையும் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறார்.
நிலத்தை அவ்வப்போது பார்வையிடுவதும் விவசாயம் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவதுமாக இருக்கும் மகளைப் பற்றிப் பெருமிதத்துடன் பேசுகிறார் தேன்மொழி. “ஒரே பொண்ணுங்கறதால அவ முடிவுக்குத் தலையசைச்சுட்டோமோன்னு பயமா இருந்தது. இப்ப அவளுக்குக் கிடைக்குற பாராட்டைப் பார்க்கும்போது அவ நிச்சயமா ஜெயிச்சு வருவான்னு நம்பிக்கை இருக்கு” என்கிறார் தேன்மொழி.

நிலத்தை வழங்கிய ராஜம்மாளும் அதை ஆமோதிக்கிறார். “எங்க நிலம் தரிசாகத்தான் கிடந்தது. குறிஞ்சிமலர் ஆர்வமாகக் கேட்டதும், நாமும் ஒரு பெண்ணோட முயற்சிக்குப் பக்கத்துணையா இருப்போம்னு அஞ்சு லட்சம் ரூபாய்வரை செலவு செய்து தரிசு நிலத்தை உழுது, வேலி போட்டிருக்கோம். குறிஞ்சிமலர் சொல்ற மாதிரி எல்லாம் நடந்ததுன்னா சந்தோசம்தான்” என்கிறார் ராஜம்மாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x