Published : 25 Oct 2019 02:06 PM
Last Updated : 25 Oct 2019 02:06 PM

சிறப்புக் கட்டுரை: சினிமா தீபாவளி

பி.ஜி.எஸ்.மணியன்

தீபாவளி - நாடெங்கும் உற்சாகமாகக் கொண் டாடப்படும் பண்டிகை. திரையுலகைப் பொறுத்தவரை தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு ஒரு தனி மவுசு உண்டு. தீபாவளி அன்று தங்கள் படம் வெளிவர வேண்டும் என்று நினைக்காத தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நட்சத்திரங்களும் இருக்க முடியுமா? ஆனால், அப்படி வெளியாகும் படங்களில் இந்த ‘தீபாவளிப் பண்டிகை'யை எத்தனை படங்கள் கொண்டாடி இருக்கின்றன?

தீபாவளி என்றதுமே நினைவுக்கு வரும் முதல் படம் 1944-ல் வெளிவந்த தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’தான். மூன்று தீபாவளிகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்த படமாயிற்றே. ஆனால், தீபாவளிக்கும் அந்தப் படத்துக்கும் ஸ்நானப் பிராப்திகூடக் கிடையாது. சரி, ‘ஹரிதாஸ்’ வேண்டாம். புராணப் படங்கள் கோலோச்சிவந்த காலமாயிற்றே. தீபாவளியைப் பற்றி வேறு யாராவது, ஏதாவது படம் எடுத்திருக்கிறார்களா என்று லென்ஸ் வைத்துப் பார்த்த போதும்கூட. ம்ஹூம். ஒரு இண்டு இடுக்கில்கூட தீபாவளி அகப்படவே இல்லை.

தெலுங்குத் தீபாவளி

இந்த விஷயத்தில் ‘அக்கட’ மாநிலத்துக்காரர்கள் புண்ணியம் கட்டிக்கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு என்.டி.ராமராவ் கிடைத்தாலும் கிடைத்தார். அவரை ராமராக, கிருஷ்ணராகக் காட்டியே தங்கள் கல்லாப்பெட்டிகளைத் தயாரிப்பாளர்கள் நிரப்பிக் கொண்டார்கள். என்.டி.ஆர். கிருஷ்ணராகவும், நடிகையர் திலகம் சாவித்திரி சத்யபாமாவாகவும், எஸ்.வி. ரங்காராவ் நரகாசுரனாகவும் நடிக்க ‘தீபாவளி’ (1960) என்ற புராணப்படம் தெலுங்கில் வெளிவந்தது. இசை அமைத்தவர் கண்டசாலா. இந்த ஒரேயொரு படம்தான் தீபாவளியின் பெருமையை மையமாக வைத்து, அகில இந்தியாவிலும் வெளியான முதல் படம்.



தமிழ்த் திரையுலகத்தில் தீபாவளியின் சிறப்பைக் கூறும் பாடல் காட்சி முதல்முதலாக இடம்பெற்ற ஆண்டு 1959. புதுமை இயக்குநர் தர் முதன்முதலில் இயக்கிய ‘கல்யாண பரிசு’ படத்தில் ஏ.எம். ராஜா இசையமைப்பில் பி. சுசீலா பாடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளில் ஒளிர்ந்த ‘உன்னைக் கண்டு நானாட’ என்ற பாடல் காட்சிதான் அது. முதல்முதலாகத் தீபாவளிக் கொண்டாட்டம் இடம்பெற்ற பாடல் காட்சி அது. பாடலின் துள்ளல் இசையும் சுசீலாவின் குரலில் தெறித்த உற்சாகத் துடிப்பும் இன்றளவும் தீபாவளி என்றாலே முதலிடம் பிடிக்கும் ஒரு சிரஞ்சீவிப் பாடல் காட்சியாக அதை மாற்றிவிட்டன.

இதேபோல 1982-ல் சந்திரசேகர், சுஹாசினி நடிப்பில் வெளிவந்த ‘மருமகளே வாழ்க’ படத்தில் சங்கர்-கணேஷ் இசையமைப்பில் பி.சுசீலா - பி.எஸ். சசிரேகா பாடிய ‘தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி’ என்ற பாடல் காட்சி இடம்பெற்றது. 1974-ல் வெளிவந்த சிவாஜி கணேசனின் ‘தங்கப் பதக்கம்’ படத்தில் இடம்பெற்ற தீபாவளிக் கொண்டாட்ட காட்சி - நகைச்சுவையாகவும் இல்லாமல் - சீரியஸாகவும் இல்லாமல் ஒரு இரண்டுங் கெட்டானாக அமைந்துவிட்டது.

தீபாவளியைக் கொண்டாடியவர்!

ஆனால், தீபாவளியை அற்புதமாகக் கையாண்டு தாய்க்குலத்தின் பேராதரவை அப்படியே ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டவர் இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்தான். 1968-ல் வெளிவந்து வெள்ளிவிழாக் கொண்டாடி வசூலில் மகத்தான சாதனை புரிந்த அவரது ‘பணமா பாசமா’ படத்தில், தலைத் தீபாவளியையும் ஒரே ஒரு புடவையையும் சுற்றியே உச்சகட்ட காட்சியை அமைத்த அவரது துணிச்சலும் தன்னம்பிக்கையும் புருவத்தை உயர்த்த வைத்தன.

உணர்ச்சிக் கொந்தளிப்பான நடிப்புக்கு எஸ். வரலட்சுமி - அவருக்கு அமைதியாக ஈடுகொடுத்து ஆரவாரமில்லாமல் நடிக்க டி.கே. பகவதி. வெகு இயல்பாக இந்த இருவருக்கும் ஈடுகொடுக்க ஜெமினி கணேசன் – சரோஜாதேவி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பொதுவாக, இப்படிப்பட்ட உணர்ச்சி கொந்தளிக்கும் காட்சியில் நகைச்சுவைக்கு இடம் கொடுத்தால், அது காட்சியையே கேலிக் கூத்தாக்கிவிடும். ஆனால், இந்தக் காட்சியில் நாகேஷ் - விஜயநிர்மலா ஜோடியின் உள்ளீடு, காட்சிக்குப் பலத்தையே கொடுத்தது. எஸ்.வரலட்சுமியின் மீது அதுவரை இருந்த வெறுப்பையெல்லாம் அப்படியே மாற்றி அனுதாபம் ஏற்படும் விதமாக, உணர்வுகளோடு ரசவாதம் செய்து பார்ப்பவர்களை அப்படியே ஒன்றிப்போக வைத்திருந்தார் கே.எஸ்.ஜி.



சுட்டுச் சுட்டுப் போட்ட தீபாவளி

அதற்குப் பிறகு, பெண்கள் வேலைக்குப் போவதால் நன்மையா தீமையா என்று பட்டிமன்றப் பாணியில் அலசிய எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் 1982-ல் வெளிவந்த விசு திரைக்கதை எழுதிய ‘குடும்பம் ஒரு கதம்பம்’ தீபாவளிக் கொண்டாட்டக் காட்சியை, தனது வாதத்துக்குப் பயன்படுத்திக்கொண்டது.
அடுத்து 1985-ல் பாசிலின் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் இளையராஜாவின் இசையில் சித்ரா ‘பட்டாசைச் சுட்டுச்சுட்டுப் போடட்டுமா' என்று பாடினார். அதிலும் ‘ச்சுட்டு ச்சுட்டு' என்று மலையாள உச்சரிப்புடன் அவர் பாடிய பாட்டுக்கு, கதாநாயகி நதியா ஆடிய பாடல் தீபாவளி கொண்டாடியது.

மணிரத்னத்தின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று 1987-ல் வெளிவந்த ‘நாயகன்’. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலுக்கும் தீபாவளிப் பண்டிகைக்கும் தீபாவளிக்கும் மருந்து அளவுக்குக்கூட சம்பந்தம் இல்லை. அது ஒரு சூழலை விவரிக்க அமைந்த பாடல் மட்டுமே. தமிழ் சினிமாவில் தீபாவளியின் தாக்கம் என்று தேடினால், கிடைத்தது இவ்வளவுதான். இவற்றை வைத்தே ஒவ்வொரு தீபாவளியையும் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஓட்டி வருகின்றன.

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x