Published : 23 Oct 2019 01:21 PM
Last Updated : 23 Oct 2019 01:21 PM

மாய உலகம்: கணக்கு எனக்குப் பிடிக்கும்

மருதன்

‘‘சும்மா, சும்மா என்னை நச்சரிக்காதே, ஹார்டி. போய் ஒன்று, இரண்டு, மூன்று எழுது” என்றார் அம்மா. எதுவரை அம்மா என்று கேட்டபோது, உனக்குத் தெரிந்தவரை எழுது என்று பதில் வந்தது. காகிதத்தையும் பென்சிலையும் எடுத்து வைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தார் ஹார்டி . 1,2,3... என்று தொடங்கி 10 வந்ததும் பென்சிலை விலக்கிக்கொண்டார். இதற்குமேல் அம்மாவோ அப்பாவோ சொல்லிக்கொடுக்கவில்லையே? முடித்துவிட்டேன், சரியாக இருக்கிறதா பாருங்கள் என்று எடுத்துக்கொண்டு அம்மாவிடம் ஓடலாம் என்றுதான் நினைத்தார்.

தற்செயலாகக் காகிதத்தில் பார்வையைச் செலுத்தியபோது ஹார்டி முதலில் எழுதிய 1 உயிர் பெற்று எழுந்துவந்து, ’என்ன நிறுத்திவிட்டாய்? மேலே போ’ என்றது. எங்கே போக என்று ஹார்டி விழித்தபோது, பந்துபோல் 1 உருண்டு வந்து, என்னைச் சேர்த்துக்கொள் என்றது. எங்கே என்றபோது எங்கே முடித்தாயோ அங்கே என்றது 1. ஒரு விநாடி விழித்த ஹார்டி பிறகு புரிந்துகொண்டு பத்தோடு ஒன்றைச் சேர்த்தார்.

11 என்று எழுதியதும் பார்த்தாயா நான் வளர்ந்துவிட்டேன் என்று சிரித்தது 1. நிறுத்தாதே, நான் இன்னும் வளர விரும்புகிறேன் என்றதும் ஹார்டி மீண்டும் எழுதினார், 12. இன்னொருமுறை? 13. இன்னொருமுறை? ஹார்டி பென்சிலை நிறுத்தாமல் எழுதிக்கொண்டே போனார். அப்படியானால் ஒன்று, இரண்டு, மூன்று என்பது மனப்பாடம் செய்ய வேண்டிய சங்கதி இல்லையா?
இல்லை என்று குதித்துக் குதித்து முன்னால் வந்து நின்றுகொண்ட இருந்தது 1. ஹார்டியும் அள்ளி அள்ளிச் சேர்த்துக்கொண்டே போனார். நோட்டு தீர்ந்ததும் இன்னொன்றை அம்மாவின் மேஜையிலிருந்து எடுத்துக்கொண்டார்.

‘‘ஏய் 1, நிறுத்தாமல் துள்ளிக்கொண்டே இருக்கிறாயே? உனக்கு அலுக்கவே அலுக்காதா?” என்று ஹார்டி கேட்டபோது, 1 தலையை ஆட்டியது. 'இன்னும் எவ்வளவோ மாயங்களை உனக்குக் காட்ட வேண்டியிருக்கிறது, இப்போதுதானே தொடங்கியிருக்கிறேன்!'

ஒரு மூலையில் முதுகை வளைத்து மணிக்கணக்கில் பரபரவென்று எழுதிக்கொண்டிருந்த ஹார்டியை நெருங்கிவந்து பார்த்த அம்மா திகைத்துப் போனார். குட்டி பென்சிலிலிருந்து, குட்டி விரல்களிலிருந்து நூறு, ஆயிரம், ஐந்தாயிரம் என்று எண்கள் வளர்ந்து பெருகிக்கொண்டே இருந்தன.'என் சுண்டு விரல் அளவுக்கு இருக்கும் இந்த 1 என்னைப் போட்டுப் பாடாய் படுத்துகிறது. அதைக் கொஞ்சம் பிடித்து நிறுத்தி வைங்களேன் அம்மா' என்று ஹார்டி சிணுங்கியபோது, அம்மா விழுந்து விழுந்து சிரித்தார்.

இரண்டு வயது நிறைவடைவதற்குள் ஹார்டிக்கு லட்சக்கணக்கான எண்கள் தெரிந்திருந்தன. அம்மா, அப்பா இருவருமே ஆசிரியர்கள். இருவருக்கும் கணக்கு விருப்பமான துறை. ‘‘நீ வேண்டுமானால் பார், எதிர்காலத்தில் இந்தக் குட்டி நம்மை எல்லாம் விழுங்கிச் சாப்பிட்டுவிடும்” என்று அப்பா சொன்னபோது, அம்மா மறுத்தார். ‘‘என்னது, எதிர்காலத்திலா? நாம் ஏற்கெனவே ஹார்டியின் தொப்பைக்குள்தான் இருக்கிறோம்” என்றார் அம்மா.

சாலையில் நடந்து செல்லும்போது சில நிமிடங்களுக்கு ஒருமுறை 54, 167, 498 என்று விதவிதமான எண்களை முணுமுணுப்பார் ஹார்டி. என்ன செய்கிறாய் ஹார்டி என்று அப்பா கேட்டபோது, ஹார்டி சிரித்தார். ‘‘இப்போது ஒரு பேருந்து கடந்து சென்றதல்லவா? அதன் வண்டி எண்ணிலிருந்து இன்றைய கணக்கைத் தொடங்கினேன். பின்னால் ஒரு கார் சென்றது அல்லவா? அதன் வண்டி எண்ணைப் பேருந்து எண்ணிலிருந்து கழித்தேன்.

கிடைக்கும் எண்ணை மூன்றாவது காரோடு சேர்த்து, நான்காவது வண்டியையும் ஐந்தாவதையும் கூட்டி, முதலில் பார்த்த பேருந்தைவிட இது அதிகமா குறைவா என்று பார்த்தேன். அதிகமாக இருந்தால் நேற்று எனக்குக் கிடைத்த விடையைக் கொண்டு பெருக்க வேண்டும். குறைவாக இருந்தால் கழித்துவிட்டு மிச்சத்தை அப்படியே நாளை தொடர வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா இல்லையா அப்பா? ”
‘‘அம்மா நம்முடைய தொலைப்பேசி எண்ணை எந்தெந்த எண்களைக் கொண்டு வகுத்தால் விடை பூஜ்யமாக வரும் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறேன், பார்க்கிறீர்களா அம்மா?” என்பார். வீதியில் நுழைந்தால், இடது வரிசையிலுள்ள அத்தனை வீட்டு இலக்க எண்களையும் கூட்டி, மொத்த கதவுகளால் வகுத்து, முதல் வீட்டு வாசல் கதவில் உள்ள கம்பிகளின் எண்ணிக்கையால் கழித்து கிடைக்கும் விடையைக் குறித்துக்கொள்வார். பிறகு வலது பக்க வீடுகளுக்குத் தாவுவார். இடதா, வலதா எது பெரியது என்பதை நான் தெரிந்துகொண்டே ஆக வேண்டும் என்பார்.

ஹார்டியின் உலகம் எண்களால் நிரம்பியிருந்தது. வானத்தில் பறக்கும் பறவைகளில் எண்களைக் காண்கிறேன். ஒரு புலி பொம்மையின் உடலிலுள்ள கோடுகளில் எண்கள் தெரிகின்றன. கட்டிடங்களும் விளக்குக் கம்பங்களும் எண்களைப்போல் உயர்ந்து நிற்கின்றன. தட்டும் கரண்டியும் கட்டிலும் கிண்ணமும் வடிவங்களாகவும் எண்களாகவும் காட்சியளிக்கின்றன. எண்கள் என்னோடு உரையாடுகின்றன. என் போர்வைக்குள் புகுந்துகொண்டு உறங்கவிடாமல் செய்கின்றன. நான் என்ன பண்ணட்டும்?

சரி வா என்று ஒரு நாள் தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ‘உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு. சங்கீதம் 37:5' என்றார் பாதிரியார். ஒரு முறை அவரையும் தேவாலயத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு ‘பிரமாதம்‘ என்று சபையே அதிரும்படி கத்தினார் ஹார்டி. ஐந்தையும் ஏழையும் பெருக்கினால் 35. நீங்கள் குறிப்பிடும் 37-ல் அதைக் கழித்தால் மிச்சம் 2. அதை அப்படியே கொண்டுசென்று கூரையில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் உள்ள 6 வண்ணங்களோடு பெருக்கி அப்படியே கீழே இறங்கி இந்த மேஜையில் எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளோடு கூட்டினால் என்ன விடை கிடைக்கும் என்று சொல்லவா?”

உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளராக உயர்ந்த ஜி.ஹெச். ஹார்டி பின்னாட்களில் மற்றொரு கணித மேதையான ராமானுஜத்தின் ஆற்றலைக் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப்படுத்தினார். ஹார்டியிடம் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுதான். நீங்கள் ஒரு கணித மேதையாக இருப்பதற்கு யார் காரணம்? ‘‘ஒன்று’’ என்று புன்னகை செய்வார் ஹார்டி. ‘‘மேலே போ, இன்னும் போ என்று அதுதான் என்னைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே இருக்கிறது!”

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x