Published : 23 Oct 2019 01:03 PM
Last Updated : 23 Oct 2019 01:03 PM

கதை: நீ எப்படி இருப்பாய்?

வெற்றிச்செழியன்

மினி அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. “என்ன மினி, இப்படி இந்த மரத்தைச் சுற்றிப் பார்த்துக்கிட்டிருக்கே? நாம் அடிக்கடி பார்க்கக்கூடிய மரம்தானே?” என்று கேட்டது அம்மா சிமி.
“அடிக்கடி பார்க்கக்கூடிய மரம்தான் அம்மா. ஆனால், இன்று நிறைய பூக்கள் பூத்திருக்கின்றன. முதல் முறை இந்த மரத்தை இப்படிப் பார்ப்பதால் வியப்பாக இருக்கிறது” என்றது மினி.
“இது மாமரம். மாம்பழம் மிகவும் சுவையாக இருக்கும்” என்று அம்மா சொன்னவுடன் மினிக்கு மாம்பழத்தைச் சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது. அன்று முதல் தினமும் மாமரத்தடிக்கு வந்து, மாம்பழம் எப்போது வரும் என்று பார்த்துக்கொண்டிருந்தது.

சில நாட்களில் மாமரத்தில் பிஞ்சுகள் விட ஆரம்பித்தன. “அம்மா, இதுதான் மாம்பழமா? இவ்வளவு சிறியதாக இருக்கிறதே?” என்று மினி கேட்டுக்கொண்டிருக்கும்போதே, காற்றில் சில பிஞ்சுகள் கீழே விழுந்தன.
ஒரு பிஞ்சை எடுத்துச் சுவைத்தது மினி.

‘ஆ ... துவர்ப்பாக இருக்கிறது. பழமாகவே தெரியலையே” என்ற மினியைப் பார்த்துச் சிரித்தது சிமி.
“இது பழம் இல்லை மினி. பிஞ்சு. இது துவர்ப்பாகத்தான் இருக்கும். இது இன்னும் பெரிதாக வேண்டும். பழுக்க வேண்டும். அதற்குள் அவசரப்படலாமா?”
தலையாட்டிவிட்டு அம்மாவோடு சேர்ந்து வீட்டுக்குச் சென்றது மினி.
சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் மாமரத்தடிக்கு வந்தது மினி. மரம் முழுவதும் மாங்காய்கள் பெரிதாகித் தொங்கிக்கொண்டிருந்தன.
“அடடா! மாம்பழம் வந்துவிட்டது” என்று சொல்லிக்கொண்டே மரத்தின் மீது ஏறி, ஒரு காயைப் பறித்துக் கடித்தது. மினியின் முகம் சட்டென்று மாறியது. வாயில் நீர் சுரந்தது. மீண்டும் கடித்தது. மீண்டும் முகம் கோணியது. இரண்டு மாங்காய்களைப் பறித்துக்கொண்டு அம்மாவிடம் வந்தது.
“அம்மா, மாம்பழம் சுவையாக இருக்கும் என்று சொன்னீங்க. வாயில் வைத்தால் ஒரே புளிப்பு. ஆனாலும் ஏதோ ஒரு சுவை இதில் இருக்கத்தான் செய்கிறது.”
“இதுவும் மாம்பழம் இல்லை, மினி. இது காய். பிஞ்சு பெரிதானால் காயாக மாறும். பிறகுதான் கனியாகும்” என்றது சிமி.

“பழமாக மாறும் என்றால் அது எப்படி இருக்கும் அம்மா?”
“பச்சை வண்ணம் மஞ்சளாக மாறும். வாசம் மூக்கைத் துளைக்கும் மினி.”
“இன்னும் எத்தனை நாட்களில் பழுக்கும்?”
“இன்னும் சில நாட்களில் பழுத்துவிடும். சரியாக என்னால் சொல்ல முடியவில்லை.”
அதுவரை மினிக்குப் பொறுமை இல்லை. காட்டில் வேறு மாமரங்களில் பழம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தது. எந்த மரத்திலும் பழங்கள் இல்லை. ஏமாற்றத்துடன் வீட்டுக்குச் சென்றது.


மூன்று நாட்களுக்குப் பிறகு சில மாங்காய்கள் நிறம் மாறியிருந்ததைக் கண்ட மினியின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. வேகமாக மரத்தில் ஏறியது. ஒரு மாம்பழத்தைப் பறித்துச் சுவைத்தது.
“அடடா! என்ன சுவை! என்ன சுவை! இதுபோல் ஒரு பழத்தை என் வாழ்க்கையில் சுவைத்ததே இல்லை அம்மா!”
“நீ பிறந்தே நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. உனக்கு ஒரு வாழ்க்கை, அந்த வாழ்க்கைக்குள் நீ மாம்பழத்தைப்போல் ஒன்றைச் சுவைத்தது இல்லை என்று சொல்கிறாயா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டது சிமி.
“அம்மா, தேன்போல் இனிக்கிறது. நீங்களும் சாப்பிடுங்கள்” என்று ஒரு பழத்தைக் கொடுத்தது. ஒரு கூடையில் பழுத்திருந்த நான்கு பழங்களை எடுத்துக்கொண்டு கிளம்பியது மினி.

மறுநாளும் வந்தது. பழங்களைப் பறித்துக்கொண்டு சென்றது. இப்போது நண்பர்கள், உறவினர்கள் என்று பார்ப்பவர்களுக்கு எல்லாம் மாம்பழங்களைக் கொடுக்க ஆரம்பித்தது. மாதங்கள் சென்றன. மரத்தில் பழங்கள் குறைந்துகொண்டே வந்து, ஒருநாள் இல்லாமல் போய்விட்டது.

மினி வந்தது. மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. ஒரு பழம்கூட இல்லை என்பதை அறிந்ததும் வருத்தமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை மரத்தை ஆராய்ந்தது. இலைகளுக்கு மறைவில் ஒரு பழம் இருந்தது. மினி ஆசையோடு அந்தப் பழத்தைப் பறித்தது.
“இந்தப் பழம் மட்டும் ஏன் பழுப்பாக இருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே வாயில் வைத்தது மினி. பழத்திலிருந்து சாறு கொட்டியது. சுவையாகவும் இல்லை. கெட்ட வாடை அடித்தது. சட்டென்று பழத்தைத் தூக்கி எரிந்தது.
அம்மாவிடம் சென்றது. நடந்ததைக் கூறியது.
“இது பழம் இல்லை. பழத்தின் அடுத்த நிலை. உரிய நேரத்தில் பழத்தைப் பறிக்காவிட்டால் இப்படித்தான் அழுகிவிடும். துர்நாற்றம் வரும். கசக்கும். இந்த மாங்கொட்டையை மண்ணுக்குள் நட்டு வைத்தால் புது மரம் உருவாகும்” என்றது சிமி.

“அப்படி என்றால் இனி மாம்பழம் கிடைக்காதாம்மா?”
“சீசன் முடிந்துவிட்டது. இனி அடுத்த வருடம்தான் பூத்து, காய்ந்து, கனியாகும் மினி. உனக்குச் சாப்பிட ஒன்றைத் தருகிறேன்” என்று வீட்டுக்கு அழைத்துச் சென்றது சிமி.
சில துண்டு மாங்காய்களை எடுத்து, மினியிடம் கொடுத்தது.
“என்னம்மா, உப்பாக இருக்கிறதே இந்த மாங்காய்?”
“மாங்காய் இல்லாத காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக உப்பில் ஊறவைத்துப் பதப்படுத்தியிருக்கிறேன் மினி.”

“என் அம்மாதான் எவ்வளவு அற்புதமானவர்! இந்த உப்பு மாங்காயும் நன்றாகத்தான் இருக்கிறது.”
“இதில் சிறிது மிளகாயைச் சேர்த்தால் மாங்காய் ஊறுகாய். உனக்குக் காரம் ஆகாது. வளர்ந்த பிறகு சாப்பிடலாம்” என்றது சிமி.
“அம்மா, இந்த மாங்காயும் எவ்வளவு அற்புதமானது! பிஞ்சில் துவர்க்கிறது. காயில் புளிக்கிறது. கனியில் இனிக்கிறது. பதப்படுத்தியபோது கார்கிறது. ஒரே மாவில் எவ்வளவு ருசிகள்!” என்று வியந்தது மினி.
“ஆமாம் மினி. நாமும் சில நேரம் மற்றவர்களுக்குக் கசப்பாக இருப்போம். சில நேரம் புளிப்பாக இருப்போம். சில நேரம் இனிப்பாக இருப்போம். அனைத்துச் சுவைகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. நீ மற்றவர்களிடம் என்னவாக இருப்பாய்?”
“நான் எல்லோரும் விரும்பும்படி கனியாக இருப்பேன் அம்மா” என்றதும் மினியைக் கட்டிக்கொண்டது சிமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x