Published : 23 Oct 2019 12:32 PM
Last Updated : 23 Oct 2019 12:32 PM

வேலு சரவணனின் ‘கடல் பூதம்’

ஆதி வள்ளியப்பன்

கோரி என்றொரு சிறுவன் இருந்தான். ஊரிலுள்ள எல்லோருடைய துணிகளையும் சேகரித்து, கழுதையின் மேல் சுமந்து சென்று ஆற்றில் துவைத்து வருவான். இப்படிச் சலவை செய்யும் வேலையைச் செய்துகொண்டிருந்ததால், அவனால் பள்ளிக்குப் படிக்கப் போக முடியவில்லை. இப்படி ஊரிலுள்ளோரின் துணிகளை எல்லாம் சலவை செய்வது அவனுக்குச் சலிப்பாக இருந்தது.

"எல்லோரும் அவரவர் பல்லை அவரவர் தானே தேய்த்துக்கொள்கிறார்கள்? எல்லோருக்கும் கை, கால் இருக்கிறது. பிறகு ஏன் தங்கள் துணியைத் தாங்களே துவைத்துக்கொள்ளாமல், இப்படிச் சலவை செய்ய அனுப்புகிறார்கள்?" என்று வருத்தத்துடன் கேட்கிறான்.
பள்ளிக்குப் படிக்கப் போக வேண்டுமென அவனுக்கு ஆசை. அதேநேரம், படிப்பைவிடவும் கடலைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு அதிகமாக இருந்தது. ஒரு நாள் அம்மா வெளியே போயிருந்தபோது, கோரி கடலுக்குப் புறப்பட்டுவிட்டான்.

கடலைப் பார்த்தவுடன் அவனுக்கு ஆச்சரியம். 'ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா' என்று பாடிக்கொண்டே படகில் சென்று கடலில் வலையை வீசுகிறான். ஆனால், எந்த மீனும் அவனுடைய வலையில் சிக்கவில்லை. வலைக்குள் வந்த மீன்கள் எல்லாம் வலையை இழுக்கும்போது வெளியேறிவிடுகின்றன. கடைசியாக ஒரு திமிங்கிலத்தைப் பிடிக்கிறான். பிறகு அதுவும் போய்விடுகிறது. இப்படி அவன் படகில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு சிறிய சொம்பு கிடைக்கிறது. ஆவலுடன் அதை எடுத்துப் பார்க்கிறான். அதற்குள் ‘ட்டுடு’ வென விநோதமாகச் சத்தம் கேட்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது என்று திறந்து பார்க்க அவனுக்கு ஆசை எழுகிறது. ஆனாலும் ஆசையைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அம்மாவுடன் சேர்ந்து திறந்து பார்க்கலாம் என நினைக்கிறான்.

இதனால் வேகமாக வீட்டுக்குப் போகிறான். அப்போதும் வீட்டில் அம்மாவைக் காணவில்லை. அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. சொம்பின் மூடியைச் சட்டென்று திறக்கிறான். ஒரு பெரிய பூதம் சடாரென்று வெளியே குதிக்கிறது. அந்தப் பூதம் மிகவும் மிகவும் கோபமாக இருக்கிறது."டேய், இங்க வாடா. கடலுக்குள்ள நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். செங்கேனி மீனெல்லாம் எனக்குச் சாமரம் வீசும். நெத்திலி மீனெல்லாம் எனக்குச் சேவகம் செய்யும். இப்படிக் கடலுக்குள்ள இருந்த என்னை, நிலத்துக்குக் கொண்டு வந்திட்டியேடா. உன்னை என்ன செய்கிறேன் பார். உன்னையும் உன்னைச் சுற்றியுள்ள குழந்தைகளையும் சாப்பிடப் போகிறேன்" என்று பூதம் பயங்கரமாக மிரட்டுகிறது.

கோரி பூதத்துடன் வாதாடுகிறான். பூதமோ தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று சவால் விடுக்கிறது. "என்னைப் போலச் சிரிக்க முடியுமா?" என்று கோரி கேட்கிறான். பூதம் சிரிக்கும்போது, அதன் சிரிப்பை நிராகரித்துவிடுகிறான். பிறகு, "என்னைப் போல அழ முடியுமா?" என்று கோரி கேட்கிறான். பூதம் அழ முயலும்போது, அதையும் நிராகரித்துவிடுகிறான். அந்தப் பூதத்தை எப்படி மீண்டும் சொம்புக்குள் அடைப்பது என்ற யோசனை அவன் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், அந்தப் பூதமோ வானத்தையே தொட்டுத் தூக்கிவிடுவேன் என்கிறது. அதுபோல வானத்தைத் தொட்டு, அதைக் கீழே கொண்டுவந்தும் விடுகிறது. இதைப் பார்த்த கோரிக்குத் திடீரென ஒரு யோசனை உதிக்கிறது.

"சரி, வானத்தைக் கீழே இழுத்து வந்துவிட்டாய், இவ்வளவு பெரிய உடலை வைத்துக்கொண்டு எப்படிச் சொம்புக்குள் இருந்தாய்? எங்கே உள்ளே போய்க் காட்டு பார்ப்போம்" என்று கோரி கேட்கிறான். எதையும் யோசிக்காமல் பூதம் சட்டென்று சொம்புக்குள் போய்விடுகிறது. அவ்வளவு நேரம் அதைச் சிரிக்க வைத்து, அழ வைத்து, வானத்தைத் தொட வைத்த கோரி, கடைசியாகப் பூதத்தைச் சொம்புக்குள் அடைத்துவிட்டான். அப்போது அவன் அம்மா வந்து, "ஏண்டா என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்க, "கடலுக்குப் போனேன், அங்கே ஒரு சொம்பை எடுத்துவந்தேன். அந்தச் சொம்புக்குள் பூதம் இருக்கு" என்று கோரி சொல்கிறான். "ஐயையோ எப்படி அதைத் திரும்ப கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது?" என்று அம்மா அழத் தொடங்கிவிடுகிறார்.

பிறகு எப்படியோ அந்தச் சொம்பை எடுத்துச் சென்று கடலில் சேர்த்துவிடுகிறார்கள். அதன் பிறகு கோரி சலவை செய்யப் போக வேண்டுமெனவும் உழைத்தால்தான் எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கும் என்றும் அம்மா சொல்கிறார். "அம்மா, அவங்க அவங்க துணியை அவங்களே துவைச்சுக்கக் கூடாதா? எல்லோருக்கும் கை, கால் இருக்கே?" என்று கோரி கேட்கிறான். கடைசியில் ஒரு வழியாக கோரி சொல்வதை ஏற்றுக்கொண்டு அவனை பள்ளிக்குப் படிக்க அனுப்புகிறார் அவனுடைய அம்மா. துணி துவைக்கும் கோரிக்கு ஒவ்வொரு நாளும் ஒரு கனவு வரும். அதில் ஒன்று இது.

வேலு மாமா எனும் மந்திரவாதி

‘கடல் பூதம்’ என்ற இந்த நாடகம் குழந்தைகள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது. மேடையமைப்பு, பின்னணி இசை, மைக் போன்ற எந்த வசதியும் இல்லாமல் நடந்த இந்த நாடகம் புதுமையாக இருந்தது. அதேநேரம், குழந்தைகளையும் பார்வையாளர்களையும் நாடகத்தின் ஒரு பகுதியாகவே அது மாற்றிக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் வேலு சரவணனும் அவருடன் நடித்த இரண்டு நடிகர்களும்.

வழக்கமான உடையலங்காரம், முகத்தில் சர்க்கஸ் பபூன்கள் இட்டுக்கொள்ளும் ‘கிளவுன்’ வடிவ ஒப்பனை, பச்சைத் தொப்பி, கையில் ஒரு குச்சி, ஒரு துண்டு சகிதம் வேலு சரவணன் தோன்றினார். அவர் கையில் வைத்திருந்த குச்சி கழுதையை விரட்டவும், படகில் துடுப்புப் போடவும், அவ்வப்போது குழந்தைகளிடையே எழும் சத்தத்தை அடக்கவும் எனப் பல வகைகளில் உருமாறிக்கொண்டே இருந்தது. அதேபோல மீன்வலையாக, ஒரு பொருளை மறைத்து வைப்பதற்காக எனப் பல்வேறு வகைகளில் துண்டு பயன்பட்டது. தெருக்கூத்தில் வருபவர்களைப் போன்ற ஒப்பனையுடன் கடல் பூதம் தோன்றியதும் அம்மாவாக நடித்தவர் எளிய தோற்றத்தில் வந்ததும் பொருத்தமாக இருந்தன.
மூன்று நடிகர்களுமே நாடகத்துக்குத் தேவையான அனைத்துச் சூழலையும் தங்கள் நடிப்பாலேயே உருவாக்கினார்கள். தேவைப்பட்டபோது பார்வையாளக் குழந்தைகளே பின்னணி இசையைச் சேர்ப்பது போன்ற ஒரு உத்தியையும் வேலு சரவணன் கச்சிதமாக உருவாக்கியிருந்தார். கடலுக்குப் போக 'ஏலேலோ ஐலசா' பாடுவதில் தொடங்கி, சொம்புக்குள் அடங்கியிருக்கும் ரகசியத்தை ‘ட்டுடுடூ'வென வாய்க்குள் நாக்கைச் சுழற்றியடிப்பதால் எழும் சத்தத்தை, குழந்தைகளைக்கொண்டே அவர் உருவாக்கியது எல்லாம் பிரமாதம்.

இப்படிப் பார்வையாளர்களைத் தனக்குள் சுவீகரித்துக்கொண்டு நாடகம் நகர்ந்த அதேநேரம், நாடகம் நடந்த ஒரு சிறிய பகுதி ஆற்றங்கரையாக, கடற்கரையாக, கடலாக, குடிசை வீடாக மாறிய மந்திரஜாலமும் அரங்கேறியது. புதுவை மத்திய பல்கலைக்கழக நாடகத் துறை பேராசிரியரான வேலு சரவணன், குழந்தைகளுக்கான நாடகங்களுக்காக தேசிய அளவில் புகழ்பெற்றவர்.

அவருடைய நாடகக் குழுவின் பெயர் 'ஆழி'. சாகித்ய அகாடமி வழங்கும் 'பால சாகித்ய புரஸ்கார் விருதை' 2017-ம் ஆண்டு பெற்றவர். 'ஐராபாசி' என்ற நாவல், 'அங்கா துங்கா', 'மாலுமி', 'தங்கராணி', 'தேவலோக யானை' ஆகிய நாடகங்கள் புத்தகங்களாக வெளியாகியுள்ளன.

‘வாசக சாலை’ அமைப்பின் சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டை நூலகத்தில் கடந்த ஓராண்டாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ‘குழந்தைகள் கொண்டாட்டம்’ என்ற நிகழ்வு நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் ஐம்பதாவது வார நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் நாடகக் கலைஞர் வேலு சரவணனின் 'கடல் பூதம்' நாடகம் நிகழ்த்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x