Published : 22 Oct 2019 01:00 PM
Last Updated : 22 Oct 2019 01:00 PM

சீனத்துத் தேவதைகளிடம் கத்துக்கோங்கப்பா!

ப்ரதிமா

சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை வந்தபோது, தமிழ்ப் பேசும் சீனத்துத் தேவதைகளை வளைச்சு வளைச்சு பேட்டி கண்டார்கள் நம்ம டிவிகாரங்களும் யூடியூப் சேனல்காரங்களும். “அடடா, என்னா அழகா டமில் பேசுறாங்கான்னு” நம்மாளுங்களும் பார்த்துவிட்டு, வீடியோக்களுக்கு ஹார்ட்டின் போட்ட கையோடு, மறக்காம ஷேரும் பண்ணிட்டுதான் மறு வேலையே பார்த்தாங்க.

அந்தப் பேட்டியைப் பார்த்த பிறகுதான், ஒரு விஷயம் ரொம்ப நல்லாப் புரிஞ்சது. ஒரு மொழியைக் கலப்பில்லாமல் பேச கற்றுக்கொள்ளணும்னு அது உணர்த்தியது. ஆமாம், செம்மொழியான தமிழ் தேசத்தில் பிறந்து, வளர்ந்த தொகுப்பாளினி கேட்ட கேள்விகளுக்கும், அதற்குச் சீனப் பெண்கள் அளித்த பதில்களையும் பார்த்தா உங்களுக்கே அது புரியும்.

தொகுப்பாளினி: உங்களோட நிறைய யூடியூப் வீடியோஸ் நாங்க பார்த்திருக்கோம். சாப்ஸ்டிக்ஸைப் பயன்படுத்துவது எப்படி, தாமரைக் குளத்தில் ஒரு டூர் மாதிரி போனது என நிறைய வீடியோஸ் நீங்க பண்ணியிருக்கீங்க. இப்படித் தமிழில் வீடியோ பண்ண நீங்க எவ்வளவு பிரயத்தனப்பட்டிருக்கீங்க?
நிலானி: இதற்கு நிறைய ஆயத்தம் செய்ய வேண்டும். தமிழ் என்னோட இரண்டாவது தாய் மொழியல்ல. இரண்டாவது மொழியாகும். நேரலைக்கு முன்பே நிறைய தமிழ் வாக்கியங்களை மனத்தில் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.
தொகுப்பாளினி: நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு செஞ்ச வீடியோ எது?
நிலானி: சீனாவின் ஹூனான் மாநிலத்தில் ஒரு நேரலை வழங்கினேன். அதில் தாமரைக் குளத்திற்குச் சென்று தாமரையின் வேரை எடுக்கச் சென்றேன். இந்த நேரலையை நீங்கள் பார்த்தீர்களா?
தொகுப்பாளினி: ம், ரொம்ப வரவேற்பு பெற்ற வீடியோன்னா எதைச் சொல்வீங்க?
நிலானி: என்னோட முதலாவது நேரலையான சீனாவின் பெருஞ்சுவர்.
தொகுப்பாளினி: யெஸ்
நிலானி: ஆமாங்க.
தொகுப்பாளினி: உங்களுக்குப் பிடித்த திருக்குறளைச் சொல்ல முடியுமா?
கலைமகள்: நன்றி மறப்பது நன்றன்று...
தொகுப்பாளினி: சூப்பர்.
தொகுப்பாளினி: சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எந்த விஷயத்தில் சிமிலாரிட்டி இருக்கு?
நிலானி: விருந்தோம்பல் அவற்றில் ஒன்று.
தொகுப்பாளினி: தமிழ்ப் படங்கள் எல்லாம் பார்ப்பீர்களா?
நிலானி: எனக்குக் ‘காக்காமுட்டை’ படம் பிடிச்சிக்கு.
தொகுப்பாளினி: வாவ்.
கலைமகள்: எனக்கு நடிகர் சூர்யாவைப் பிடிக்கும்.
தொகுப்பாளினி: அப்போ சூர்யாவுக்கு இந்தியாவில் மட்டுமல்லா சைனாவிலும் ஃபேன்ஸ் இருக்காங்க. ஓகே.
பூங்கோதை: இணையத்தில் ‘ஐ’என்கிற காதல் படத்தைப் பார்த்தேன்.
தொகுப்பாளினி: அதில் ஏதாவது ஒரு பாடலைப் பாடுங்கய்யா, ப்ளீஸ்.
கலைமகள்: என்னோடு நீ இருந்தால்... உயிரோடு நான் இருப்பேன்...
தொகுப்பாளினி: வாவ்
கலைமகள்: பெய்ஜிங் தமிழர்களுக்கு மற்றொடு வீடுதான் சீனா.
தொகுப்பாளினி: சூப்பர்.

சீனத் தொகுப்பாளினிகள் தமிழில் பேசியபோது மறந்தும்கூட, அவர்களின் தாய்மொழியையோ ஆங்கிலத்தையோ கலக்கவில்லை. வீடியோவைக்கூடக் காணொலி என்றும் ‘லைவ்’ என்பதை நேரலை என்றே சொன்னார்கள் என்பதுதான் டிஸ்கி.பூங்கோதை லியா லையாங், கலைமகள் ஷாஹோ ஜியாங், நிலானி ஹே லியூன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x