Published : 22 Oct 2019 12:52 pm

Updated : 22 Oct 2019 12:52 pm

 

Published : 22 Oct 2019 12:52 PM
Last Updated : 22 Oct 2019 12:52 PM

இவங்க தீபாவளி வேற மாதிரி! 

diwali

கிருத்திக்

“தீபாவளிக்கு இன்னும் 5 நாள் இருக்குது. அதுக்குள்ள என்னடா அவரசம்...?”, “டேய், பூரா வெடியையும் தீபாவளிக்கே போட்டுறாதடா மிச்சத்தை கார்த்திக்கைக்கு வைய்யி” என்றெல்லாம் சொன்ன அம்மாக்கள், “டேய், என்னடா அப்பா வாங்கித்தந்த பட்டாசு பாக்ஸ் அப்படியே இருக்குது... பட்டாசு போடலியா?”ன்னு கேட்கிற நாள் வரும் பாருங்க. நம்ம வீட்டுப் பசங்க எல்லாம் இப்படித்தான் வயசுக்கு வருவாங்க. (‘அசுரன்’ தனுஷ் ஸ்டைலில் படியுங்கள்)
கிராமத்துத் தீபாவளி எப்பவும் வேற மாதிரிதான். “டேய், மாமாவுக்கு அடிக்கிறதுக்காக கவுத்திப்போட்ட கோழியைக் காணோம்டா. பிடிச்சிட்டு வாடா”ன்னு விடிஞ்சதும் விடியாததுமா அம்மா சங்கு ஊதுனா, அது கிராமத்துத் தீபாவளி.

சும்மாவே கோழியைப் பிடிக்க முடியாது. இந்த வெடிச் சத்தத்துல அது எந்தத் திசைக்குப் போச்சோன்னு பதற வேண்டியதுதான். கோழி அடிக்கிறதுலேயும், கறி எடுக்கிறதுலேயுமே அரை நாள் தீபாவளி காலி. “இனிமே தீபாவளி பொங்கல்னு சொந்தக்காரங்களை கூப்பிட்ட.., நான் வீட்டைவிட்டே போயிடுவேன் பார்த்துக்க. அந்தாள குஷிப்படுத்துறதுக்காக என்னோட தீபாவளியை நான் தியாகம் பண்ண வேண்டியிருக்கு”ன்னு பயல்க கொதிப்பாய்ங்க.

இந்த ஊருக்கே முதல்ல ஹேப்பி தீபாவளி சொல்றது என் பட்டாசுதான்னு கெத்து காட்டுறவன் சிங்கிள். தெருவுல சின்னப் பசங்க போடுற நல்ல வெடியை எல்லாம், “இருடா அண்ணன் சொல்லித்தாரேன்”னு ஏமாற்றியே போட்டு காலி பண்ணுனா அவன் முரட்டு சிங்கிள். பட், படார்ன்னு ஒரு தௌஸன் வாலாவைப் போட்டுட்டு, அப்படியே ஃபிகர்ங்க இருக்கிற தெரு நண்பனை வாலண்டியராய்ப் போய்ப் பார்த்து ஹேப்பி தீபாவளி சொல்லுவானே, அவன் லவ்வர் பாய்.

ஒரு வாரத்துக்கு முன்னாடியே, “நீ என்ன கலர் டிரஸ் எடுத்திருக்கே?”ன்னு கேட்டுட்டு அதே பஞ்சு மிட்டாய் கலர்ல சட்டையைப் போட்டுக்கிட்டு அந்தப் பொண்ணு வீட்டுப்பக்கம் சுத்துறவன் ‘கமிட்டட்’.
ஒரு கும்பல் ‘பிகில்’ மைக்கேல் மாதிரி அஞ்சாம் நம்பர் டீ சர்ட் போட்டுக்கிட்டு தியேட்டருக்குப் போகும், இன்னொரு கும்பல் கிலோ கணக்குல கறி எடுத்துக்கிட்டு, பக்க வாத்தியங்களோட தோட்டத்துப் பக்கமா ஒதுங்கும்.

கிராமத்து தீபாவளி அடக்க ஒடுக்கமா இருந்துச்சுன்னா, நகர்ப்புறத்து இளசுகள் கொண்டாடுற தீபாவளி அலப்பறை வேற மாதிரி. முந்துன நாளு ராத்திரி 10 மணிக்கே எல்லா வாட்ஸ்அப் குரூப்லேயும் ‘ஹேப்பி தீபாவளி’ போஸ்ட் போட்டுட்டு குப்புறடிச்சுப் படுத்துத் தூங்குவோம். மறுநாள் காலையில எந்திரிக்க 7 மணியாகிடுச்சுன்னா நீங்க சிம்பு ரசிகர். 6 மணிக்கு முன்னாடியே எந்திரிச்சா ‘தல’ ரசிகர். அதிகாலை 3 மணிக்கே எழுந்திருச்சி ‘பிகில்’ படத்துக்குப் போனா தளபதி ரசிகர்.

“போம்மா... எண்ணெய் எல்லாம் தேய்ச்சிக் குளிக்க மாட்டேன். அப்புறம் முகம் கறுப்பாத் தெரியும்”னு சொன்னா நீங்க அழகான(?) பொண்ணு. 7 மணிக்குள்ள ஆறு புது ட்ரஸைப் போட்டு அறுபத்தெட்டு செல்ஃபி எடுத்தீங்கன்னா நீங்க ‘டாடி’ஸ் லிட்டில் பிரின்ஸஸ். இன்னொரு பக்கம் பொண்ணுங்க தீபாவளி ‘ட்ரெஸ்’ல விதவிதமா செல்ஃபி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராம் எல்லாத்துலேயும் படம் போட, இன்னொரு பக்கம் அதுக்குப் பூராவும் பசங்க ஹார்ட்டின்விட... “இன்னைக்குக்கூட இந்த சனியன் பிடிச்ச போனைத் தூரப் போட மாட்டீங்களாடா”ன்னு அம்மாக்கள் சாபம்விட நகரத்துத் தீபாவளி களைகட்டும்.

அம்மா சுட்ட பலகாரங்களை எல்லாம் சுத்தி உட்கார்ந்து ஃபுல் கட்டு கட்டுனா, 80’ஸ் கிட்ஸ். கொஞ்சமா தின்னா 90’ஸ் கிட்ஸ். “உவ்வே இதை எல்லாம் எவன் திம்பான்?”ன்னு கேட்டா சந்தேகமே இல்ல நீங்க 2கே கிட்ஸ்தான். புதுச்சட்டை போட்டுக்கிட்டு தாத்தா, பாட்டிகிட்ட ஆசீர்வாதம் வாங்குனா 80'ஸ். “ஹாய் தாத்தா ஹேப்பி தீபாவளி!”ன்னு சொன்னா 90’ஸ். “தாத்தாவுக்கெல்லாம் நீயே விஷ் பண்ணிடு”ன்னு சொன்னா, நீங்கதான் தல 2கே கிட்ஸ். தாத்தா பாட்டி மட்டுமில்லாம, சித்தி, சித்தப்பாவுக்கும் ‘விஷ்’ பண்ணி, ‘கிப்ட்’டை அள்ளினா அவதான்யா பொண்ணு. காரணம் இந்த மண்ணு.

எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சிட்டு, “என்னதான் இருந்தாலும் போன வருஷ தீபாவளி மாதிரி இல்லலைப்பா?!” என்று பையன் சொல்ல, “அடேய் இல்லாதவங்களுக்குத்தான்டா பண்டிகை. பணம் காசு இருக்கிறவனுக்குத் தினம் தினம் தீபாவளிதான். பிறகெப்படி இந்த நாள் செறப்பா இருக்கும்?"னு அப்பா சொன்ன தத்துவம் உண்மைதானோன்னு புரியும்போது தீபாவளியே முடிஞ்சு போயிருக்கும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தீபாவளிDiwaliகிராமத்துத் தீபாவளி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author