Published : 22 Oct 2019 12:46 PM
Last Updated : 22 Oct 2019 12:46 PM

உலக மேடையில் கானா மழை!

வா. ரவிக்குமார்

டாடி டிகாஷன் மம்மி மில்க்டி
உனக்கு நான் ஹாலிவுட் ஹல்க்டி...
மிட்டாய் மேல பர்ப்பிங்கோ
என் பாட்டைக் கேட்டா சிரிப்பீங்கோ…
பாலசந்தரின் தெறிக்கவிடும் குரலில் தங்களை மறந்து அவரு டைய ஏரியா பிள்ளைகள் ஆடுகின்றனர். இந்தப் பாடலை எழுதியவர் 'டங்காமாரி' புகழ் ரோகேஷ். "ரோகேஷ்தான் திரைத் துறையிலும் என்னை அறிமுகப் படுத்தினார். ‘தேனிசைத் தென்றல்’ தேவா அப்பாவோடு இணைந்து பாடியது இப்படித்தான்” என்று கூறும் பாலசந்தரிடம், அவரின் பெயருக்கு முன்னால் ‘கானா’ சேர்ந்த கதை என்ன?
"இசைக் குழுக்களில் பாட வேண்டும் என்ற ஆர்வத்தில் எங்கள் பகுதியில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இசைக் குழுக்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். 'என்ன பாட்டு பாடப்போறே' என்று கேட்பார்கள். 'கானா பாட்டு' என்றவுடன், ‘கானா பாட்டா? அப்படி ஓரமா நில்லு' என்பார்கள். அடுத்தடுத்து அவர்களே மாறிமாறிப் பாடி கச்சேரியை முடித்தேவிடுவார்கள். இப்படி ஒன்றிரண்டு அல்ல, பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கிறது.

உணர்ச்சிகரமான கானா!

கானா என்றாலே பெண்களைக் கேலி, கிண்டல் செய்வது என்று பலரும் நினைத்துக் கொள்கி றார்கள். மிகவும் உயர்ந்த ரசனை யோடு பெண்களைக் கொண்டாடும் பாடல்களும் உண்டு. ‘அடி ஏய் பொண்ணு ஐ.ஆர். 8... ஆம்பூரு கரும்புக் கட்டு’ என்னும் கானா பழனியப்பாவின் பாடலைப் பெண்களே ரசித்தார்கள்.” என்கிறார் பாலசந்தர்.
கானா பாடல்களைத் தானே எழுதிப் பாடுவதில் பல கானா பாடகர்களுக்கும் இன்றைக்கு முன்னோடியாக இருப்பவர் கானா பாலா. அவருடைய பாடல்களில் குறையே கண்டுபிடிக்க முடியாது. வரிகள் உணர்ச்சிகரமாக இருக்கும்.

“நானும் தொடக்கத்தில் ஆல்பம் போட்டேன். பெரிதாக அது கைகொடுக்கவில்லை. அந்தத் தோல்வியைப் பாடமாக எடுத்துக் கொண்டேன். கானாவை வித்தியாசமாக அணுக வேண்டும் என்று முடிவு செய்தேன். இயல், இசை, நாடகம் மூன்றையும் கலந்து கொடுப்பது என்று முடிவுசெய்தேன். அதன்படி நான் பாடும் கானாவில் கொஞ்சம் பேச்சும் இருக்கும், பாட்டும் இருக்கும். அந்தப் பாடல் களை நடனம் ஆடிக் கொண்டே பாட ஆரம்பித் தேன். என்னுடைய இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.

அதேபோல் கானா பாடல்களை மிரன், ரோகேஷ் போன்ற நண்பர்களிடம் எழுதி வாங்கித்தான் பாடுகிறேன். நண்பர் மிரனிடமிருந்து எழுதி வாங்கிப் பாடிய ‘மூக்குத்தி மூக்குத்தி’ பாடல் குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என எல்லாத் தரப்பினரையும் கவர்ந்து பட்டிதொட்டி எங்கும் பரவியது. அந்தப் பாடலில் வரும் ‘பாத்து தம்பி சூதானம், இது மானாவரி மைதானம்’ என்ற வரிகள் நாட்டு எல்லையைத் தாண்டி எங்கெங்கோ வெளிநாடுகளில்கூட ஒலிக்கின்றன.

மாறிவிட்ட கானா

காதல் பிரிவு, வட்டார மக்களை மையமாகக் கொண்டது, நீத்தார் வீடுகள் எனக் குறிப்பிட்ட அம்சங்கள் சார்ந்தே கானா பாடல்கள் ஒருகாலத்தில் பாடப்பட்டு வந்தன. இன்றைக்கு அந்த நிலைமை மாறிவிட்டது. காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, திருமண விழா, கோயில் திருவிழா எனப் பல நிகழ்வுகளில் பாடப்படும் கலை வடிவமாக கானா உருவாகி வருகிறது. விளிம்பு நிலை மக்களின் ஆற்றாமையை வெளிப்படுத்தும் கலை வடிவமாக இருந்த கானா பாடல்களிலேயே இன்றைக்கு,
‘காவு வாங்க காத்திருக்குது ரோட்டுல மேடு உனக்கு உயிரு மேல ஆசையிருந்தா ஹெல்மட்ட போடு’என்பது போன்ற விழிப்புணர்வுக் கருத்துகளையும்,
‘படிக்கும் புக்க எடைக்குப் போட்டேன் அப்போ…
அதை நெனச்சு தினம் வருத்தப்படறேன் இப்போ…’
எனக் கல்வி கற்பதன் அவசியத்தையும் மையப்படுத்திப் பாடுகிறோம்.

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட தகவல்தொடர்புப் புரட்சியை கானா கலைஞர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர். உள்ளூர், வெளி மாநிலம் தாண்டி உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களும் கானாவின் தன்மையை, அதன் இயல்பான கச்சாதன்மையை இன்றைக்கு ரசிக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்கிறார் பாலசந்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x