Published : 22 Oct 2019 11:55 AM
Last Updated : 22 Oct 2019 11:55 AM

வளர்ச்சிப் பொருளியல்: நோபல் பரிசு பாய்ச்சிய வெளிச்சம்

செல்வ புவியரசன்

இருபதாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த மற்றுமொரு பொருளியலாளருக்கு நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது. அமர்த்திய சென், அபிஜித் பானர்ஜி இருவருமே வளர்ச்சிப் பொருளாதாரத்தை முன்னிறுத்தும் பொருளியலாளர்கள் என்பது முக்கியமானது.

நாணய மதிப்புகளையும் அதன் ஏற்ற இறக்கங்களையும் தீர்மானிக்கும் ‘பணவியல் பொருளாதாரம்’, அரசு வரவு செலவுத் திட்டங்களையும் அதற்கான வரிவருவாய் வாய்ப்புகளையும் சொல்லிக்கொடுக்கும் ‘நிதியியல் பொருளாதாரம்’, நாடுகளுக்கிடையே வர்த்தகப் பற்று வரவுக்கணக்கில் சமநிலையை பேண வேண்டும் என்று வலியுறுத்தும் பன்னாட்டுப் பொருளாதாரம் என்று பொருளியலின் கிளைகள் விரிந்து பரவியிருக்கின்றன.

என்றாலும் இவையெல்லாம் ஏதோ ஒருவகையில் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் கலையைக் கற்றுக்கொடுப்பவை மட்டுமே. ‘டெவலப்மெண்ட் எகனாமிக்ஸ்’ என்று அழைக்கப்படும் வளர்ச்சிப் பொருளாதாரமோ, பொருளியலின் மற்ற பிரிவுகள் எந்தெந்த விஷயங்களுக்கெல்லாம் முதன்மைக் கவனம் கொடுக்கவேண்டும் என்று போதிக்கின்ற ‘பொருளாதார அறவியல்’.

எது மக்களுக்கான மேம்பாடு?

பொதுவாக பொருளாதாரத்தைப் பற்றிய இன்றைய தீவிர விவாதங்கள் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றியதாகத்தான் இருக்கிறதே ஒழிய, அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதைப் பற்றியதாக இல்லை. வளர்ச்சி, மேம்பாடு என்ற இரண்டு வார்த்தைகளும் ஒரே பொருளைக் கொடுப்பதாகத் தோன்றினாலும் பொருளியலில் இவையிரண்டும் தனித்த பொருள்கொண்டவை.

வளர்ச்சி என்று பொருள்படும் ‘குரோத்’ என்ற வார்த்தை, நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை, அந்நாட்டின் உற்பத்திப் பெருக்கத்தைக் குறிக்கிறது. மேம்பாடு என்று பொருள்படும் ‘டெவலப்மென்ட்’ என்ற வார்த்தை, நாட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டையும் சேர்த்துக் குறிக்கிறது. எனவே, வளர்ச்சிப் பொருளாதாரம் என்று எழுதியும் பேசியும் வருவது, மேம்பாட்டுப் பொருளாதாரத்தையே. தமிழில் அது ‘வளர்ச்சிப் பொருளாதாரம்’ என்று முதலில் மொழிபெயர்க்கப்பட்டதால், அதுவே இன்றும் வழக்கத்தில் தொடர்கிறது.

உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமாகவே ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். எனவே, முதலீட்டாளர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும் என்பதே காலம்காலமாக சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் அறிஞர்களின் போதனை.

வளர்ச்சிப் பொருளாதார அறிஞர்களோ, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அவர்களை வறுமையிலிருந்து மீட்க வேண்டுமானால் அரசின் தலையீடு தவிர்க்கவியலாதது என்று வலியுறுத்துகிறார்கள். வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் சுகாதார வசதி, பொதுக் கல்வி ஆகியவற்றைப் பற்றிய அவர்களின் ஆய்வுமுடிவுகளையும் பரிந்துரைகளையும் ‘ஐக்கிய நாடுகள் அவை’, ‘உலக சுகாதார நிறுவனம்’ போன்ற சர்வதேச அமைப்புகள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன என்றாலும் அவற்றைத் திறம்பட செயல்படுத்தும் பொறுப்பு வளர்ந்துவரும், வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் நாடுகளின் அரசுகளுக்கு இருக்கிறது.

வறுமையும் பொருளியலும்

வளர்ச்சிப் பொருளாதாரத்தின் இலக்கு ஒரு ஆட்சி எல்லைக்குள் வாழும் குடிமகன் அல்ல, அனைத்துலக மனிதனை நோக்கியே அது பேசுகிறது. உலகளவில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடு என்ற வகையிலும் பொருளாதார வளர்ச்சியில் அடியெடுத்துவைக்கும் நாடு என்ற வகையிலும் இந்தியா எப்போதுமே வளர்ச்சிப் பொருளாதார அறிஞர்களின் முக்கிய ஆய்வுக்களமாக இருந்துவருகிறது. உலகப் புகழ்பெற்ற வளர்ச்சிப் பொருளாதார அறிஞரான குர்னார் மிர்தால் தனது ‘ஆசிய நாடகம்’ மட்டுமின்றி, அவரது மற்ற நூல்களிலும் இந்தியாவைப் பற்றிய பொருளாதார ஆய்வுகளையும் இந்தியப் பொருளியல் அறிஞர்களின் கருத்துகளையும் விரிவாக விவாதித்திருக்கிறார்.

வளர்ச்சிப் பொருளாதாரத்தில் இந்திய அறிஞர்களின் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கது. மக்கள்தொகையியலாளரான எஸ்.சந்திரசேகரன், உலகின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படாத வெற்று நிலம் இருக்கும்போது, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வயிற்றுப்பிழைப்புக்காக மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த பகுதிகளில் அத்தியாவசிய வசதிகள்கூட இல்லாமல் வசிக்கும் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டியவர்.

வறுமை ஒழிப்பை ஆய்வுக்களமாகக் கொண்ட மற்றொரு இந்தியப் பொருளியலாளர் தர்லோக் சிங், சமூக மாற்றங்களுக்கு வறுமை எப்படியெல்லாம் தடையாக இருக்கிறது என்று பொருளியலுக்கும் வறுமைக்குமான உறவுகளை விளக்கியவர். ஊக்கமளிக்கும் விருது இயற்கையோடு இயைந்த காந்திய வாழ்க்கை முறைக்கு கோட்பாட்டு வடிவம் கொடுத்த ஜே.சி.குமரப்பா, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தை நிறுவிய மால்கம் ஆதிசேஷய்யா என்று தொடங்கிய அந்த லட்சியத் தலைமுறை இன்றும் தொடர்கிறது.

இந்தியாவில் நிறைவேற்றப்படும் சமூகநலத் திட்டங்கள் எந்தளவுக்குப் பயனளிக்கின்றன என்று தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அமர்த்திய சென், ழீன் தெரசே, மார்க்ஸியராக அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் பிரபாத் பட்நாயக், சந்தைப் பொருளா தாரத்தின் போதாமைகளையும் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் தேவைகளையும் தொடர்ந்து வலியுறுத்திவரும் சி.பி.சந்திரசேகர், ஜெயதி கோஷ் வரைக்கும் அது நீள்கிறது.

வளர்ச்சிப் பொருளாதாரத் துறையில் இந்தியா எப்போதுமே குவிமையமாகவே இருந்துவந்திருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த பொருளியல் அறிஞர்களும் சர்வதேசக் கவனத்தைப் பெற்றிருக்கிறார்கள். என்றாலும், மேல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த மிகச் சில இந்திய அறிஞர்களையே உரிய கௌரவம் வந்தடைகிறது. அபிஜித் பானர்ஜிக்குத் அளிக்கப்படவிருக்கும் நோபல் பரிசு, வளர்ச்சிப் பொருளாதாரத்தின் பாதையில் பொருளியல் மாணவர்கள் பயணிப்பதற்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x