Published : 21 Oct 2019 12:27 PM
Last Updated : 21 Oct 2019 12:27 PM

வறுமையை ஒழிக்கும் வழி!

முனைவர் சௌ. புஷ்பராஜ், பொருளியல் பள்ளி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
(s_pushparaj@hotmail.com)

ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிப்பை ‘தி ராயல் சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயன்ஸ்’ (The Royal Swedish Academy of Sciences) வெளியிடுவது வழக்கம். இந்த வருடம் இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த அபிஜித் பானர்ஜி (58) உட்பட அவரது மனைவி எஸ்தர் டப்லோ(47) மற்றும் அவர்களுடன் ஆய்வு செய்த மைக்கேல் கிரேமர் ஆகிய மூன்று பேருக்கு பொருளாதார பிரிவில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வறுமை ஒழிப்பு ஆய்வுகளுக்காக இவர்களுக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வறுமை என்பதன் வலி உணர்ந்தவர்களுக்கே வறுமை ஒழிப்பு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரியும். வறுமை என்பது உணவு இல்லாதது மட்டுமே அல்ல. உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், சிறந்த வாழ்க்கை முறை என அனைத்தையும் உள்ளடக்கியது. உலகப் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கும் இந்த வேளையில், வரலாறு காணாத அளவில் 70 கோடி பேருக்கும் மேல் வறுமையில் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த மூன்று நோபல் அறிஞர்களின் ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

உலகெங்கும் உலகமயமாக்கல் பின்னணியில் அரசு நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்படுவதுடன், ஒதுக்கப்பட்ட குறைந்த அளவிலான உதவித் தொகையும் வீணடிக்கப்படுவது கவலைக்குரிய நிகழ்வாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நோபல் ஆய்வாளர்களின் அறிவியல் பூர்வமான அணுகுமுறை அரசின் உதவித் திட்டங்
களின் பலன்களை அளவிடுவதற்கும், பரிசீலனை செய்வதற்கும், அரசின் வீண் செலவுகளைத் தவிர்ப்பது அல்லது குறைப்பதற்கும், பயனுள்ள திட்டங்களை உரிய கண்காணிப்புகளுடன் செயல்படுத்தவும் உபயோகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய ஆய்வுகள் “வளர்ச்சிப் பொருளாதார'' ஆராய்ச்சிகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் ஆய்வு வழிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளின் போக்கை முற்றிலுமாக மாற்றி அள்ளதாகவும், இவர்களது ஆய்வின் மூலம் செழுமைப்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் இதுவரை
40 கோடி ஏழைகளுக்குப் பயனளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர இவர்களது ஆய்வு முறைகளைக் கையாண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செய்த ஆராய்ச்சிகளின் மூலம் ஏராளமான வீண்செலவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. வீண்செலவுகளிலிருந்து மீட்கப்பட்ட மக்களின் வரிப்பணம் உபயோகமான நல உதவித்திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் நிர்வாகப்பணிகளில் பயன்பாட்டை மேம்படுத்தவும் இவர்களது ஆய்வுகள் உதவியுள்ளன.

இன்று வறுமை ஒழிப்பு திட்டங்களுடன் தொடர்புடைய அரசு, தொண்டு மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களது நிதி உதவிகளின் பலன்களை அளவிடுவதற்கும் பரிசீலனை செய்வதற்கும், புதிய திட்டங்களை களத்தில் பரிசோதித்து வடிவமைப்பதற்கும் இவர்களுடைய ஆய்வுமுறைகள் ஆதாரமாக விளங்குகின்றன. இது வருங்காலத்தில் சிறந்த பயனுள்ள வறுமை ஒழிப்பு திட்டங்களை வடிவமைத்து செயல் படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

பல்வேறு நாடுகளில் இதுவரை அரசின் உதவி திட்டங்கள் ஆளும் அரசின் சித்தாந்தங்கள் மற்றும் தலைவர்களின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் உள்ளுணர்வு, எதிர்நோக்கு, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு செயல்படுத்தப் பட்ட திட்டங்களை ஆய்வு செய்யும் வழக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. ஏனெனில், திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள், அதை வடிவமைத்தவருக்கும், செயல்படுத்தியவருக்கும் களங்கம் உண்டாக்கும் என்ற காரணத்தால் அரசியல் ரீதியாக மறைக்கப்பட்டுவிடும். அதுமட்டுமின்றி எந்தத் தலைவரும் தன்னுடைய தவறை ஏற்கவும் தயாராக இல்லை.

எனவே, அரசு திட்டங்களை, உருவாக்குவது, செயல்படுத்துவது, மதிப்பீடு செய்வது என்ற நிலையிலும் அறிவியல்பூர்வமான அணுகுமுறைகள் பெரும்பாலும் நடை முறைப்படுத்தப்படுவதில்லை. திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பே திட்டத்தின் பலாபலன்களை மதிப்பீடு செய்ய முடியாததால், திட்டத்தை செயல் படுத்துவதில் குளறுபடிகள் ஏற்படும்.

இதனால் அத்திட்டம் தோல்வியடைந்தாலோ, எதிர்பார்த்த பலனை அளிக்காமல் போனாலோ செலவு செய்யப்பட்ட பொதுப் பணம் வீணாவதற்கு வாய்ப்பு உண்டு. முடிவுகள் பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலேயே முடங்கிவிடும். விருப்பு வெறுப்பற்ற மூன்றாம் நபரின் பரிசீலனைகளுக்கு திட்டங்கள் உட்படுத்தப்படுவதில்லை.

ஆனால், இந்த அணுகுமுறையை மாற்றுவதுதான் இந்த நோபல் அறிஞர்களின் நோக்கம். மக்களுக்கான திட்டங்கள், கொள்கைகளை முடிவெடுக்கும் அமைச்சர்கள், செயல்படுத்தும் அதிகாரிகள், ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் ஆகிய மூவரையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைக்கும் அளவிலான ஆய்வுகளை இவர்கள் உருவாக்கினார்கள். இந்த அணுகுமுறையில் ஒருவர், நிர்பந்தங்களுக்கு ஆட்படாமல் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியும் எனக் கூறுகிறார்கள். இதனால் திட்டத்தின் தாக்கங்களை அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் மதிப்பீடு செய்யவும் முடியும். எனவே, திட்டங்கள் அதனுடைய இலக்கை அடைய நன்றாக திட்டமிடப்பட்ட ஆய்வுகள் ஒரு நம்பகமான கருவிகளாக விளங்கும். இந்த நோபல் அறிஞர்களின் ஆய்வுகளும் அதைத்தான் உணர்த்துகின்றன.

ஆர்.சி.டி எனப்படும் லாட்டரி முறையில் தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளைக் கொண்டு செய்யப்படும் கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளே (RCTs – Randomized Controlled Trials) இந்தப் புதிய ஆய்வு முறைகளின் அடிப்படை. இத்தகைய ஆய்வு முறைகள் 1940-களில் மருத்துவ ஆய்வுகளிலும் அரசு திட்டங்கள் குறித்த ஆய்வுகளிலும் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டன. பார்மா கம்பெனிகள் தங்களது புதிய மருந்துகளின் மருத்துவப் பயன்பாட்டை
சோதனை செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய ஆய்வுமுறையை டப்லோ அவர்களின் ஆசிரியரான பேராசிரியர் ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் முதன் முறையாக தனது பொருளாதார ஆய்வில் 1970-களில் பயன்படுத்தினார். இதே வழிமுறைகளைத்தான் இந்த மூன்று நோபல் அறிஞர்களும் தங்களது பல ஆய்வுகளுக்கு இன்று பயன்படுத்திவருகின்றனர்.
திட்டத்தின் விளைவை அளவிட, முதலில் பலன்களின் அளவை முடிவுசெய்த பின்பு பயனாளிகளில் ஒரு பகுதியினரை கூறெடுத்து அவர்களை இரு பகுதியாகப் பிரிக்க வேண்டும். ஒரு பகுதியினருக்கு மட்டும் திட்டத்தை செயல்படுத்திய பின், இரண்டு பிரிவினருக்கும் பயன் அளவையைக் கொண்டு கணக்கிட வேண்டும். இரண்டு பகுதியினரின் அளவீட்டு வித்தியாசம்தான் விளைவின் அளவுகோல்.

கணக்கிடப்பட்ட அளவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிரிவுக்கு அதிகமாகவும் மற்ற பிரிவுக்கு குறைவாகவும் இருந்தால் திட்டம் பலனளித்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக புத்தங்கள் வழங்கும் திட்டம் பலனளிக்குமா? என்பதை இந்த அணுகுமுறையின் படி எவ்வாறு கையாளுவது என்பதைப் பார்ப்போம். கற்றலின் பலனை அளவிட சிறந்த அளவை மாணவர்களின் மதிப்பெண்கள்தான். பட்டியலில் உள்ள மொத்தப் பள்ளிகளில் இருந்து ஒரு கூறெடுப்பை நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை இரண்டு பகுதியாக எடுத்துக்கொள்வோம். முதல் வகைப் பள்ளிகளில் (A) இங்கு இலவச புத்தக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் (Treatment Group). இரண்டாவது வகைப் பள்ளிகளில் (B) இத்திட்டம் செயல்படுத்தப்படாது (Control Group).

ஆண்டு இறுதியில் இந்த இரு பள்ளி மாணவர்களின் சராசரிமதிப்பெண்களை ஒப்பீடு செய்து, A பள்ளி மாணவர்களின் சராசரி மதிப்பெண் B பள்ளி மாணவர்களின் மதிப்பெண்களைவிட அதிகமாக இருந்தால் திட்டம் பலன் அளித்துள்ளது என முடிவுக்கு வரலாம். இத்தகைய ஆய்வுகளின் சிறப்பம்சம் என்னவெனில், புத்தகம் தவிர்த்த கற்றலை பாதிக்கும் மற்ற காரணிகளின் விளைவுகளை ஒட்டுமொத்த விளைவுகளிலிருந்து இலாவகமாக நீக்குவதுதான். ஏனெனில், மாணவரின் கற்றல் திறனை தீர்மானிப்பது புத்தகங்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களின் திறமை, மாணவர்களின் சமூகப் பின்னணி, திறமையான பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட பலவற்றை கூறலாம். மதிப்பெண்களில் இவற்றின் பங்கை பிரித்து நீக்குவது பெரிய சவாலாகும்.

இதன்பின்பு எஞ்சியிருக்கும் மதிப்பெண் வித்தியாசம்தான் திட்டத்தின் விளைவை அளக்கும் அளவுகோல். ஒரே ஒரு கள ஆய்வில் கண்ட முடிவுகளைக் கொண்டு இலவசமாக வழங்கப்பட்ட புத்தகங்கள் கற்றலை மேம்படுத்தும் என்ற முடிவை பொதுமைப்படுத்த முடியுமா? இந்தத் திட்டத்தை மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்த/நடைமுறைபடுத்த முடியுமா? என்பதையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.

இதன் விளைவாக திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அனைவருக்கும் பாட புத்தகங்களை இலவசமாக வழங்கினால் சந்தையில் ஏற்படப்போகும் காகிதத்தட்டுப்பாடு, அதைத்தொடர்ந்து உயரும் பேப்பர் விலை, மாணவர்கள் பயன்படுத்தும் வகுப்பறை நோட்டுகளின் விலை உயர்வு ஆகியவற்றையும் கணிக்க முடியும். இதுதவிர, பாடப் புத்தக வாசிப்பு ஏற்படுத்தும் புத்தக வாசிப்பு பழக்கம் ஆகியவற்றையும் அந்த விளைவுகளையும் கணக்கிட முடியும். இந்த முறையைப் பயன்படுத்தி மும்பை மற்றும் வதோதராவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், கூடுதல் உதவி ஆசிரியர்களை பின்தங்கிய மாணவர்களின் தேவைகளுக்காக நியமித்தனர்.

அதன் பின்பு மாணவர்களின் கற்றல் அனுபவம் மேம்பட்டதாகக் கண்டறிந்துள்ளனர். தற்போது ஆயிரம் பள்ளிகளில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் 50 லட்சம் குழந்தைகள் பலனடைந்துள்ளனர். குழந்தைகளின் உடல்நலம், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றுக்கு காரணமான வயிற்றுப் புழு வியாதியை குணப்படுத்த சிறந்த வழி அதற்கான மருந்தை இலவசமாக வழங்குவதுதான் என்ற ஆராய்ச்சி முடிவு உலக சுகாதார நிறுவனத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டது. இதில் 80 கோடி பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்பட்ட நடமாடும் மருந்தகங்கள், கிராமங்களில் தடுப்பு ஊசி போடுவோர் அளவை 6 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தியதென்றால், ஊக்கப் பரிசாக சத்துத் தானியங்களை வழங்கும் முறை அதை 30 சதவீதமாக உயர்த்தியது. எண்ணிக்கையை மட்டும் உயர்த்தவில்லை, கூடுதலாக திட்டச் செலவையும் பாதியாகக் குறைத்தது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மிச்சப்படுத்தப்படும் 50 சதவீத செலவு மற்றொரு பயனுள்ள திட்டத்திற்கு செலவிட வழி ஏற்பட்டது. சுய உதவி குழுக்களில் வழங்கப்படும் கடன்களின் பயன்பாடு குறித்து இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை எத்தியோப்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளின் கள ஆய்வுகள் உறுதி செய்தன.

இனி இத்தகைய ஆய்வுகள் வறுமை ஒழிப்பு திட்டங்களில் செயல்படுத்தப்படலாம். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் இருக்கும் சமூக நலத்திட்டங்களுக்கும், குறிப்பாக வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கும் இந்த ஆய்வுகள் உதவியாக இருக்கப்போகின்றன. பானர்ஜி ‘‘ஏழைகளின் பொருளாதாரம்” (Poor Economics) என்ற புத்தகத்தில் “நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளை பேசாமல் பிரச்சினைகளை மட்டுமே பேசுவது மேம்பாட்டுக்கு உதவாது” என்று கூறுகிறார்.

இன்றைய உலகப் பொருளாதார சூழலில் உள்ள சிக்கல்களை, மனிதகுலத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய சவால்களை, இதுபோன்ற அணுகுமுறைகள் மூலம் சிறு சிறு ஆலோசனைகளை கொண்டு, கவனமாக ஆராய்ந்து, செயல் திட்டங்களை உருவாக்கி, அவற்றை உளப்பூர்வமாக செயல்படுத்துவதன் மூலம் வெல்லலாம் என்கிறார்கள் இந்த நோபல் அறிஞர்கள். இவர்களுடைய இந்த ஆய்வுகளும் அதன் முடிவுகளும் உலக வறுமையை ஒழிப்பதற்கான ஒரு நம்பிக்கை பெரு வெளிச்சத்தை பாய்ச்சுவதாக உள்ளன. என்ன, இதையெல்லாம் செயல்படுத்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தயாராகவேண்டியதுதான் பாக்கி?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x