Published : 21 Oct 2019 11:55 am

Updated : 21 Oct 2019 11:55 am

 

Published : 21 Oct 2019 11:55 AM
Last Updated : 21 Oct 2019 11:55 AM

50 வருட பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் குமரன் சில்க்ஸ்

kumaran-silks

ஜெ.சரவணன்
saravanan.j@thehindutamil.co.in

இன்றைய பரபரப்பான வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள் என்றால் அது உறவினர்கள் நண்பர்கள் சகிதமாக கொண்டாடும் விழாக்களும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும்தான். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கான பிரத்யேக ஆடைகளை பாரம்பரியம் மாறாமல் தயார் செய்து வழங்கும் நிறுவனங்களில் ஒன்று குமரன் சில்க்ஸ்.

தீபாவளி விற்பனை தொடர்பாக குமரன் சில்க்ஸ் உரிமையாளர் பி.ஆர்.சுப்ரமணியனை நேர்காணலுக்காகச் சந்திக்க சென்றிருந்தோம். சென்னை தி.நகரின் பரபரப்பான சாலைகளில் 75 ஆயிரம் சதுர அடியில் அமைந்திருக்கும் குமரன் சில்க்ஸ் உள்ளே நுழைந்தால், தி.நகரின் அத்தனை பரபரப்பும் இரைச்சலும் அடங்கி ஒரு புராதன தலத்துக்குள் நுழைந்ததுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.

காரணம் இப்பொதெல்லாம் துணிக்கடைகளில் கண்ணைப் பறிக்கும் விளக்குகள், கண்ணாடிகள், குவிந்து கிடக்கும் துணிகள் என்றுதான் பார்க்க முடிகிறது. அந்த வகையில் குமரன் சில்க்ஸ், தனித்து தெரிந்தது. உள்ளே நுழைந்ததும் உதவியாளர் ஒருவர் அவரிடம் அழைத்துப் போனார். முதல் மாடியில் சில்க் புடவைகள் பிரிவில் வாடிக்கையாளர்களோடு நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தவரைக் கை காட்டினர். யார், என்ன, எதற்காக வந்திருக்கிறேன் என்பதைக் கேட்டுக்கொண்டவர் சில நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார். அந்த சில நிமிடங்களில் சில விஷயங்களை கவனித்தேன்.

ஊழியர்கள் பலரும் அவரிடம் நெருங்கிப் பேசிக்கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளர்களிடமும் என்ன வேண்டும் என்று ஒரு ஊழியரைப் போலவே அணுகினார். எந்த இடத்திலும் கடையின் உரிமையாளர் என்ற தொனி அவரிடத்தில் தெரியவில்லை. வாடிக்கையாளர்களைக் கவனிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் நேர்காணலுக்காக வந்திருந்த என்னையே மறந்துவிட்டார் என்றார் பாருங்கள். ஒருவழியாக பேசத் தொடங்கினோம். அவரிடம் பேச ஆரம்பித்த பிறகு, அதுவரையிலும் பட்டுப் புடவைகள் குறித்து தெரியாத பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைய மாடர்ன் உலகில் புடவைகளுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்று கேட்டோம். “என்னதான் நவீனம், மாடர்ன் என வந்தாலும், பழமை என்பது நம்முடைய ஜீனில் இருக்கிறது. வரலாறு மீது இயல்பாகவே புதிய தலைமுறையினருக்கு ஈர்ப்பு வரும். ஆனால் இப்போது வடநாடு புடவை கட்டும் கலாச்சாரத்தை மறந்துகொண்டிருக்கிறது. ஆனால், தென்னிந்தியாவில் புடவைகள் மீதானகாதல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

குறிப்பாக இளம் பெண்கள் இன்று புடவை கட்டிக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” என்றார். உண்மையைச் சொன்னால், கடையில் இருந்த பெரும்பான்மை பெண்கள் 20 முதல் 30 வயதினர்தான்.
“ஆரம்பத்தில் தமிழர் கலாச்சாரமாக இருந்த புடவை இடையில் மறந்துபோனது. ஆனால், இப்போது பண்டிகை, விழா, திருமணம் என்றால் புடவைகளைத்தான் தேடுகிறார்கள். அலுவலகம் செல்வதற்குக் கூட பெரும்பாலானோர் இப்போது புடவைகளை விரும்புகிறார்கள். ஆனால், புடவைகளில் வெயிட் அதிகமுள்ள புடவைகளைப் பெரும்
பாலானோர் விரும்புவதில்லை. எடை குறைவான வெயிட்லெஸ் புடவைகள்தான் அதிகம் விரும்புகிறார்கள்.

கட்டுவதற்கு எளிதாக இருக்க வேண்டும். வண்ணங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும்.டிசைன், தரம் என அனைத்தையும் பார்த்து பார்த்துத்தான் வாங்குகிறார்கள்” என்று சொல்லிக்கொண்டே கடைக்குள் வந்த வாடிக்கையாளர் ஒருவரைப் பார்த்து,‘இவர் சிதம்பரத்தின் சம்பந்தியாச்சே’ என்று அவரை வரவேற்றார். கடைக்கு வரும் எல்லா வாடிக்கையாளர்களையும் இன்முகத்தோடு வரவேற்கும் அவர் ஏற்கெனவே வந்த ஒரு வாடிக்கையாளரை எளிதில் அடையாளம் கண்டுவிடுவார் என்றார் அவர் உதவியாளர்.
இன்று எத்தனையோ கடைகள் இருக்கின்றன, இப்போதும் வாடிக்கையாளர்கள் குமரன் சில்க்ஸைத்தேடி வர காரணம் என்ன என்று கேட்டோம். சிரித்தவர், “பெண்கள் புடவைகளை எப்படி பார்த்துப் பார்த்து வாங்குவார்கள் என்பதை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.

அவர்களுடைய டேஸ்ட், எதற்காக வாங்குகிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துதான் புடவைகளைப் பார்த்து பார்த்து தயார் செய்கிறோம். அதுமட்டுமல்லாமல், விசேஷ நாளுக்காக என்றாலும், அந்த ஒரே ஒரு நாளுக்காக என்று புடவைகளைத் தயாரிக்காமல், தொடர்ந்து அந்தப் புடவையைப் பலமுறை அவர்கள் முதல்முறை விரும்பி கட்டியதுபோலவே கட்டவேண்டும் என்று நினைத்துதான் உருவாக்குகிறோம். காலத்துக்கு ஏற்ப டிசைன், வண்ணங்
கள் எல்லாவற்றையும் திட்டமிட்டு உருவாக்குகிறோம். பாரம்பர்ய முறையில் நவீன தலைமுறையினருக்கான புடவைகளை உருவாக்குவதில் உள்ள மனநிறைவே தனி” என்று பூரித்துக்கொண்டார்.

புடவைகளில் பலமுறை புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய பெருமை குமரன் சில்க்ஸுக்கு உண்டு. அந்த வகையில் இந்த தீபாவளிக்கு சிறப்பாக எதையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்களா என்று கேட்டதும். கையைப் பிடித்து நேராக கடையின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு போஸ்டரைக் காட்டி இதுதான் இந்த தீபாவளி ஸ்பெஷல் என்றார். “பட்டு மாமி கலெக்‌ஷன்”. அதாவது, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த புடவையை எட்டு மாத உழைப்பில் மீட்டெடுத்திருக்கிறோம் என்றார்.

எப்போதுமே ஃபேஷனைப் பொருத்தவரை அது ஒரு சுழற்சியில்தான் இருக்கும். ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு ஃபேஷன் இருக்கும். ஆனால், ஒரு தலைமுறை என்பது 20-30 வருடங்கள்தான். அதற்குள் அடுத்த தலைமுறை அடுத்த ஃபேஷன் வந்துவிடும். அப்படி மூன்று தலைமுறைக்கு முந்தைய பெண்கள் கட்டிய 9 கஜம் கொண்ட பட்டுப் புடவைதான் இந்த ‘பட்டு மாமி கலெக்‌ஷன்’. பாரம்பரியம் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், புதிய தலைமுறையினருக்கு பழைய பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனும், அந்தக் கால கைத்தறி நெசவாளர்களின் திறமையை வெளிக்கொண்டுவரவும்தான் இந்த ‘பட்டு மாமி கலெக்‌ஷன்’.

இந்த பட்டு மாமி கலெக்‌ஷன் புடவைகளில் 9 கஜம், 6 கஜம் என இரண்டு அளவுகளிலும் தயாரித்துள்ளோம். 9 கஜத்தில் ரிச் கலர் யாரும் பண்றதில்ல. நாங்க பண்றோம். சில்க் காட்டனிலும் ரிவர்ஸ் பண்ணி பண்ணிட்டிருக்கோம். இதனால், இளம் பெண்கள் கூட 9 கஜம் கட்டுவதற்கு தயாராகியிருக்கிறார்கள். இந்தப் புடவைகளை ரூ.15-20 ஆயிரத்தை விட குறைவாகப் பண்ண முடியாது. ஆனால், குமரன் சில்க்ஸில் மிகக் குறைந்த விலையில் பண்ணிக் கொடுக்கிறோம்.

அந்தக் காலத்து டிசைன், அரமாடன் என்று சொல்லுவாங்க, இப்போது டைமண்ட் பேட், அதே போல் லைனிங் பேட்டர்ன். அதை அப்போதெல்லாம் நீரோட்டம் என்று சொல்வார்கள். இப்படி பல பழைய டிசைன்களை, ரிச் கலரில், உயர் தரத்தில் உருவாக்கிக்கொடுக்கிறோம். திறன்மிக்க கைத்தறியாளர்களை வைத்து பிரத்யேகமாக நெசவாலைகள் வைத்து 50 வருட பாரம்பர்யத்தை மீட்டுக்கொண்டிருக்கிறோம். மெஷினில் உருவாக்கினால் கைத்தறியில் இருக்கும் பர்ஃபெக்‌ஷன், தரம் வரவே வராது.

ஒரு புடவை தயாரிக்க 20-25 நாள் ஆகும். மாடர்ன் மெஷின் என்ன வேண்டுமானாலும் வரட்டும், இதை அப்படியே அச்செடுத்து உருவாக்கினாலும், கைத்தறியில் தயாராகிற புடவைகளுக்கு நிகராக வரவே முடியாது. ‘‘இதுவரைக்கும் ஒரு விளம்பரம் கூட செய்யவில்லை. கடையில் ஒட்டியிருக்கிற இந்த போஸ்டரை மட்டுமே பார்த்து வாங்கிச் செல்கிறார்கள்.

இளம் பெண்கள் இதைப் புகைப்படம் எடுத்து அவர்களின் அம்மாக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்புகிறார்கள். அவர்கள் பார்த்துவிட்டு, 50 வருஷத்துக்கு முன்னாடி உள்ள இந்தப் புடவை இப்போ கிடைக்குதா என்று ஆச்சர்யப்பட்டுப் போகிறார்கள். அவர்களுடைய அம்மாக்களும் பாட்டிகளும் கட்டிப் பார்த்ததை தானும் கட்டிப் பார்க்க விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

இதுபோன்ற பாரம்பரிய புடவைகளை தயாரிப்பதில் கோர்வை ரொம்ப முக்கியம். கோர்வையா பண்ணாத்தான் இந்த ரகம் பண்ண முடியும். ஒத்த நாடாவில் பண்ண முடியாது. கோர்வை தறிதான் வேணும். அதெல்லாம் இப்போது கிடைக்கிறதே அதிசயம். ஆப்போசிட் கலர் பேட்டர்ன் வரணும். கோர்வையில் சொதப்பினால் புடவையே வீண்தான். நிறைய பேர் போட்டோ எடுத்துகொண்டு போகிறார்கள். ஆனால், அதையாராலும் உருவாக்க முடியாது. இதை நெய்வதற்கு இரண்டு பேர் தேவை. ஒருத்தர் மட்டுமே பண்ண முடியாது. இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், 50 வருட பாரம்பரியத்தை மீட்டெடுத்த மனநிறைவுக்காகத் தொடர்ந்து பண்ணிட்டிருக்கோம்.

எப்படி குமரன் சில்க்ஸ் தரத்தில் சமரசம் செய்வதில்லையோ அதேபோல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையிலும் எந்த சமரசமும் இல்லை. இன்று போட்டி அதிகமாகிவிட்டது. ஆனாலும் நாங்கள் பதட்டமில்லாமல் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குச் சரியான சேவையை வழங்கிக்கொண்டிருக்கிறோம். வாடிக்கையாளர்கள் பிடித்த சேலையை கண்டடையும் வரை உடன் நின்று பணியாற்றக்கூடிய விற்பனையாளர்களைக் கொண்டிருக்கிறோம்.

அதே போல், வாடிக்கையாளர்கள் இருக்கும் இடமும் தூரமும் குமரன் சில்க்ஸுடனான உறவை துண்டித்துவிடக் கூடாது என்பதற்காகவே எல்லா வகையான புடவைகளும் உலகின் எந்த மூலையிலிருந்தும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆன்லைன் விற்பனையையும் இணையதளம் மூலமாகச் செய்துவருகிறோம்” என்று முடித்தார்.

1955-ல் தொடங்கிய குமரன் சில்க்ஸின் கதை ஒவ்வொரு நாளும் பட்டு போல மின்னிக்கொண்டிருக்கிறது. பட்டுப் புடவைகள் ஏற்கெனவே இருக்கிற டிசைன், வண்ணங்கள், நூற்பு முறை ஆகியவற்றை மட்டுமே பின்பற்றிக்கொண்டிருக்காமல் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் முயற்சிகளையும் குமரன் சில்க்ஸ் தொடர்ந்து எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பாரம்பர்யம்குமரன் சில்க்ஸ்Kumaran Silks

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

there-is-currently-no-vaccine-to-prevent-corona

இனிமே இப்படித்தான்!

இணைப்பிதழ்கள்

More From this Author