Published : 21 Oct 2019 11:35 AM
Last Updated : 21 Oct 2019 11:35 AM

எண்ணித் துணிக: மூன்றில் உள்ளதடா வெற்றி!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப் தத்துவத்தை சென்ற வாரம் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். இது ஒரு வழிமுறை. ஸ்டார்ட் அப்புக்கு ஐடியா கிடைத்த மாத்திரம் தொழில் தொடங்காமல் அந்த ஐடியாவை சீர்தூக்கி சரிபார்க்கும் செயல்முறை. கிடைத்த ஐடியா சரியா?, தயாரிக்க நினைக்கும் பொருளுக்கு மார்க்கெட் உண்டா?, அதில் மாற்றம் தேவையா? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் அறிவியல் பூர்வமான அணுகுமுறை. பொருளை சரியாக வடிவமைத்து, வாடிக்கையாளருக்குத் தேவையான வகையில் தயாரித்து அதை அவர்கள் கையில் வேகமாக சென்று சேர்க்கும் பிராசஸ். லீன் ஸ்டார்ட் அப் மூன்று முக்கிய அம்சங்கள் கொண்டது.

மாதக்கணக்கில் சிந்தித்து, திட்டமிட்டு, ஆராய்ந்து அலசிப் பார்ப்பதற்கு பதில் ஸ்டார்ட் அப்தொடங்குபவர்கள் தங்களிடம் இருப்பது சோதிக்கப்படாத ஒரு ஐடியா என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதைக்கொண்டு மட்டுமே பிசினஸ் தொடங்க ஓடாமல் தொழில் தொடங்க தேவையான புளூபிரின்ட் தயாரிக்க வேண்டும். இதற்கு பிசினஸ் மாடல் கேன்வாஸ் என்று பெயர். ஒன்பது அம்சங்கள் கொண்ட இந்த சார்ட் தயாரிக்கும் விதத்தை சில வாரங்களுக்கு முன் இங்கு விவரமாகப் பார்த்தது நல்ல உள்ளங்களுக்கு நினைவிருக்கும்.

அடுத்த அம்சம், ஸ்டார்ட் அப் தொடங்குபவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வைபவம். ரூம் போட்டு யோசித்து நான்கு சுவர்களுக்குள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் விஷயமல்ல ஸ்டார்ட் அப். வெளியில் சென்று, உலகைப் பார்த்து, மார்க்கெட்டை புரிந்து, வாடிக்கையாளர்களை சந்தித்து மனதிலுள்ள ஐடியாவை அவர்களிடமே விளக்கி, முடிந்தால் ஒரு மாதிரி பொருளை காண்பித்து அவர்கள் கருத்தை பெற்று, அதை அவர்களை உபயோகிக்கச் செய்து, பொருளை பயன்படுத்துவதில் உள்ள சாதக பாதகங்களை அவர்களிடமிருந்தே தெரிந்துகொள்ள நம்மை வற்புறுத்தும் சித்தாந்தம் லீன் ஸ்டார்ட் அப்.

இதற்கு ‘வாடிக்கையாளர் வளர்ச்சி’ (customer development) என்று பெயர். உங்கள் ஐடியாவை பொருளாக்கினால் அதை காசு தந்து வாங்கக்கூடிய வாடிக்கையாளர்கள் யார், பொருள் பற்றி, நீங்கள் நிர்ணயிக்க நினைக்கும் விலை பற்றி, விநியோக முறை பற்றி, அவர்களை மயக்கி பொருளை வாங்க வைக்கும் விற்பனை மேம்பாட்டு உத்தியை அவர்களிடமே சோதித்துப் பார்க்கும் முறை. உங்கள் பொருளை வாங்கிப் பயன்படுத்தப் போகிறவர்களிடமே மாதிரி பொருள் ஒன்றைத் தந்து அவர்கள் கருத்தைப் பெற்று அதற்கேற்ப பொருள் வடிவத்தில், பயன்பாட்டில், உட்பொருளில் மாற்றங்கள் செய்து மீண்டும் அவர்களை பயன்படுத்தச் செய்து அவர்கள் கருத்தை பெறும் விடா முயற்சி.

மூன்றாவது படி, சுறுசுறுப்பான வளர்ச்சி (Agile development). இந்தப் படி வாடிக்கையாளர் வளர்ச்சிக்கு ஏற்றபடி செய்யப்படவேண்டிய ஒன்று. இது முதலில் சாஃப்ட்வேர் துறையில் துவங்கப்பட்ட ஒரு சமாச்சாரம். வாடிக்கையாளர் தேவைகள், கஷ்டங்கள் இப்படித்தான் இருக்கும் என்று நாமாகவே முடிவு செய்து அதற்கான தீர்வை வருடக்கணக்கில் செலவழித்து பொருளை வடிவமைத்து தயாரிக்காமல், பொருளை சின்ன சின்னதாக (Incremental) ஐடரேடிவாக (Iterative) தயாரிக்கும் முறைக்கு அஜைல் டெவலப்மெண்ட் என்று பெயர். இவ்வகையில் பொருளை வடிவமைத்து தயாரிக்கும் போது நேரம் மிச்சமாகிறது. அதோடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவு (ஆர் அண்ட் டி) மற்றும் தயாரிப்பு செலவுகளும் கணிசமாக குறைகின்றன.

வேகத்தையும் விவேகத்தையும் வலியுறுத்தும் சித்தாந்தம் லீன் ஸ்டார்ட் அப். ஐடியாவை ஒரு குறைந்தபட்ச பொருளாக்கி அதை வாங்கப் போகிறவர்களிடம் பயன்படுத்தச் சொல்லி அதன் குறை நிறைகளை சரிசெய்து தவறுகளை குறைத்து வெற்றிக்கு அடித்தளம் இடும் முயற்சி. மற்ற மார்க்கெட் முறைகளை விட புதிய பொருட்களை விரைவில் தயாரித்து குறைவில்லாமல் விற்க செய்யும் வழி.

முன்பு யாருக்காவது ஒரு நல்ல பிசினஸ் ஐடியா தோன்றி அதை தொழிலாக்க முயலும் போது, ஐடியாவை யாரும் காப்பியடித்துவிடக்கூடாது என்று பயந்து, பொருளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தயாரித்து, திடீரென்று ஒருநாள் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துவதே சரி என்று நினைத்து வந்தனர். இந்த இருட்டு அறையில் முரட்டு குத்து வேலை ஸ்டார்ட் அப்புக்கு செல்லாது.

மார்க்கெட்டுகள் வேகமாக மாறிவரும் காலச் சூழலில், தங்களுக்கு என்ன தேவையோ அதை யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ள தயாராக இல்லாத வாடிக்கையளர்கள் இருக்கும் உலகில் அவரை கேட்காமல், அவர் கருத்தை அறியாமல் விற்கப்படும் பொருளை வாடிக்கையாளர் வாங்க தயாராய் இல்லை.

இதை தெளிவாக உணர்ந்திருப்பதால்தான் லீன் ஸ்டார்ட் அப் ஐடியாவை பொருளாக்கும் முயற்சியில் அதை பயன்படுத்தப் போகும் வாடிக்கையாளரை மையப்படுத்துகிறது. இதனால் தயாரிப்பு செலவு முதல் விளம்பர செலவு வரை குறைகிறது என்பதுதான் இந்த தத்துவத்தை பயன்படுத்தி உலகமெங்கும் ஸ்டார்ட் அப்ஸ் கண்டிருக்கும் பாடம், பெற்றிருக்கும் பயன்.

உலகெங்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்ஸ்தான் முதன் முதலில் இந்த லீன் ஸ்டார்ட் அப் தத்துவத்தை பயன்படுத்தினாலும், மற்ற பொருட்களும் கூட இதை பயன்படுத்தி வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தலாம் என்பதை இதை பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கும் ஸ்டார்ட் அப்ஸ் நிரூபித்திருக்கின்றன.

ஸ்டார்ட் அப் கலாச்சாரம் மெதுவாய் பிறந்து பதமாய் வளர்ந்து வரும் நம் நாட்டில், இந்த சித்தாந்தப்படி ஸ்டார்ட் அப்ஸ் துவங்கினால் தொழில் வளர்வதோடு நாட்டின் மொத்த உற்பத்தி பெருகும். வேலை வாய்ப்புக்கள் வளரும். பல்லாயிரம் குடும்பங்கள் பிழைக்கும். உங்கள் ஸ்டார்ட் அப்பும் தழைக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x