Published : 20 Oct 2019 11:12 AM
Last Updated : 20 Oct 2019 11:12 AM

வாழ்வு இனிது: சுழித்தோடும் நினைவுகள்

தாமிரபரணியும் நானும்

வண்ணநிலவன்

மனிதர்களின் வயதைக் கணிக்கலாம். விஞ்ஞானிகள், பூமியின் வயதைக்கூடக் கணித்திருக்கிறார்கள். ஆனால், நதியின் வயதைக் கணிக்க முடியுமா? கங்கையும் காவிரியும் தாமிரபரணியும் எத்தனை யுகங்களாக ஓடுகின்றனவென்று யாருக்குத் தெரியும்? மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே நதிகள் இந்தப் பூமியில் ஓடிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

மலைகளைப் போல் அநாதிக் காலம் தொட்டே நதிகளும் இந்தப் பூவுலகில் வாழ்கின்றன. தாமிரபரணியைப் பற்றிய குறிப்பு மகாபாரதத்தில் வருகிறது. பல புராண இதிகாசங்களிலும் தாமிரபரணியைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன என்கிறார்கள்.

அவ்வளவு தொன்மையான இந்த நதியை, நான் ஆறென்று உணர்ந்துகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் தொடங்கியது எனது மூன்றாம், நான்காம் வயதில்தான். என்னுடைய அம்மாவுடைய அப்பா சங்கரலிங்கம், காலையில் குளிக்கப்போகும்போது என்னையும் தூக்கிக்கொண்டு ஆற்றுக்குப் போனது நினைவிருக்கிறது. எந்தப் படித்துறை எனத் தெரியவில்லை.

ஆனால், சிட்டித் துண்டை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு கரையில் நிற்கிற என் மீது தண்ணீரைக் கோரிக் கோரிவிட்டு அவர் குளிப்பாட்டியது ஞாபகமிருக்கிறது. சிட்டித் துண்டின் இரண்டு முனைகளையும் பதனீர் பட்டைபோல் பிடித்துக்கொண்டு ஓடுகிற ஆற்றுத் தண்ணீரைக் கோரிக் கோரிவிடுவார். இதுதான் தாமிரபரணியைப் பற்றிய என் முதல் நினைவு.

இன்றும் திருநெல்வேலிப் பகுதியில் தாமிர பரணியில் குளிக்கிறவர்கள் இருக்கிறார்கள். என்றாலும் எனக்குத் தெரிய 1950-களில் ஆற்றில் குளிக்கிறவர்களின் கூட்டம் மிக அதிகம். குறுக்குத்துறை ஆற்றுப் பகுதியில் துணி துவைத்து சோப்புப் போட கல் கிடைக்காது. அவ்வளவு கூட்டம் இருக்கும். குறுக்குத் துறையிலிருந்து டவுனுக்குப் போகிற ரோட்டில் காலையில் நடக்கவே முடியாது. குளிக்கப் போகிறவர்களும் குளித்துவிட்டு ஈர உடையுடன் வருகிறவர்களுமாக ஒரே கூட்டமாக இருக்கும். காலை ஒன்பது, பத்து மணிக்கு மேல்தான் கூட்டம் குறையும்.

கண்ணாடி போன்ற தண்ணீர்

தெற்குப் புதுத் தெருவில் நாங்கள் குடியிருந்தபோது நானே தனியாக ஆற்றில் போய்க் குளித்துவிட்டு வருவேன். அப்போது ஏழெட்டு வயதிருக்கும். குறுக்குத்துறை-டவுன் ரோடும் சிக்கநரசிங்க கிராமத்திலிருந்து வருகிற ரோடும் சந்திக்கிற முக்கில் பாண்டியன் கடை என்று ஒரு கடை இருந்தது. எண்ணெய், சீயக்காய், சோப்பு எல்லாம் அங்கு விற்பார்கள்.

கடை ஒரு ஆள் உயரத்துக்கு உயரமாக இருக்கும். ரொம்ப உயரமான கடை. அது கோயிலுக்குச் சொந்தமான இடம். மேலே சட்டை போடாமல் ஒல்லியான உடம்புடன் அங்கே ஒருவர் வியாபாரம் செய்வார். கடைக்குப் பக்கத்தில் போகும்போதே வாசனாதி தைலத்தின் மணம் வீசும். காலணா கொடுத்தால் உள்ளங்கையில் பல்பொடியைத் தட்டுவார். அவர் கடையிலிருந்து ஆள்காட்டி விரலால் பல்லைத் தேய்த்துக்கொண்டே போய்ப் பலரும் படித்துறைக்குள் இறங்குவார்கள்.

திருவிழாத் தூக்கம்

சுலோசன முதலியார் ஆற்றுப் பாலத்தி லிருந்து சிந்துபூந்துறை ஆற்றுப் பகுதிவரை ஆற்றின் வடபகுதியில் பிரம்மாண்டமான நீளமான மணல் திட்டு பரந்து விரிந்து கிடந்தது. கருங்குளத்தில் ஆற்றின் வடகரையில் பல மைல் நீள அகலத்துக்கு மணல் பகுதி இருந்தது. ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப் பாலத்திலிருந்து தென் திருப்பேரை வரை ஒரே மணல்வெளிதான். அவ்வளவும் வெள்ளக் காலத்தில் ஆறு கொண்டுவந்து குவித்தது. வெள்ளம் போகும்போது ஆற்றின் இருகரையும் தொட்டுத் தண்ணீர் செல்லும். மழைக் காலத்தில் அடிக்கடி ஆற்று வெள்ளத்துக்குள் குறுக்குத்துறை கோயில் மூழ்கிவிடும். கோயிலுக்குள் மெத்மெத்தென்ற மணலை ஆறு குவித்துவிட்டுப் போயிருக்கும்.

ஏழாம் வகுப்புப் படிக்கும்போது தேர்வில் தோல்வியடைந்துவிட்டேன். ஒரு வருடம் வைகுண்டத்தில் சிற்றப்பா வீட்டிலும் மாமா வீட்டிலுமாக இருந்து படித்தேன். இன்னொரு வருடம் கருங்குளத்திலிருந்து, தினசரி வைகுண்டம் சென்று படித்தேன். கருங்குளம் அக்ரஹாரத்தில் எங்கள் வீடு. மாலையில் அநேகமாக ஆற்றில் போய் ஆசை தீரக் குளிப்போம். பையன்கள் ஜமா சேர்ந்தால் ஆற்று மணலில் விளையாடிவிட்டுப் பிறகு குளியல். கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலில் சித்ரா பெளர்ணமி ரொம்ப விசேஷம். சித்ரா பெளர்ணமிக்கும் மறுநாள் சுவாமி ஆற்றுக்குள் இறங்குவார்.

சப்பரத்தை ஆற்று மணலில் இறக்கிவைத்துவிட்டு, சுவாமிக்கு முன்னால் மணலில் அகலமாகக் குழி பறித்து அதில் தண்ணீரை நிரப்பி உயிருள்ள மீன்களை நீந்தவிடுவார்கள். அதை ‘மீன் விளையாட்டு’ என்பார்கள். இதுபோல் திருநெல்வேலி வண்ணார்பேட்டை ஆற்றிலும் சித்ரா பெளர்ணமியன்று சாமியை ஆற்றில் இறக்கி ‘மீன் விளையாட்டு’ நடத்துவார்கள்.

கோடைக் காலத்தில் ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் பத்து நாள் திருவிழாவில் ஐந்தாம் திருவிழா ரொம்ப விசேஷம். ஏழெட்டு ஊர்களிலிருந்து சப்பரங்கள் வரும். நடு இரவுவரை திருவிழா பார்த்துவிட்டு ஆழ்வார் திருநகரியில் ஆற்று மணலிலேயே நிலா வெளிச்சத்தில் படுத்து உறங்கிவிடுவோம். இதுபோல் சித்ரா பெளர்ணமியன்று வண்ணார்பேட்டை ஆற்றுக்குள் சப்பரம் இறங்கு வதைப் பார்த்துவிட்டு, இரவு ஆற்று மணலிலேயே படுத்து உறங்கிவிடுவோம். நிலவொளியில் ஆற்றில் படுத்து உறங்குவது ஒரு தனி அனுபவம். மணலின் குளிர்ச்சியும் சல்லாத் துணியால் உலகம் போர்த்தப்பட்டதைப் போன்ற நிலவொளியும் திருவிழாச் சத்தங்களும் மனத்தை எங்கோ கொண்டுசென்றுவிடும்.

இலக்கியப் படித்துறை

பாளையங்கோட்டையி லிருந்தபோது நாங்கள் குடி யிருந்த வடக்கு ரத வீதியிலி ருந்து வெள்ளக்கோவில் ஆற்றுப் பகுதிக்கு விளை யாடவும் குளிக்கவும் செல்வோம். ஆற்று மணலில் சடுகுடு விளையாடுவோம். வெள்ளக்கோவில் ஆற்றுப் பகுதி குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை ஆற்றுப் படித்துறைகளைப் போல் கூட்டமும் பரபரப்புமாக இராது. ஏகாந்தமாக இருக்கும். ஆற்றில் ஆளரவமே இருக்காது. எப்போதாவது மயானத்துக்கு வருகிறவர்கள், வந்தால்தான் உண்டு.

ஆற்றின் கரையோரம் உள்ள ஊர்களில் பெரும்பாலான மயானங்கள் ஆற்றங்கரையிலேயே இருந்தன. என்னுடைய ‘மயான காண்டம்’ சிறுகதையில் இடம்பெறும் மயானம், இந்த வெள்ளக்கோவில் மயானம்தான். இதுபோல் வல்லிக்கண்ணன் வாழ்ந்த ராஜவல்லிபுரம் ஆற்றுப் பகுதியும் ஏகாந்தமாக மயான அமைதியுடன்தான் இருக்கும். அது வேடிக்கையாகக்கூட இருக்கும். ராஜவல்லிபுரம் ஆற்றில் வைத்துத்தான் வல்லிக்கண்ணனுடன் குளித்துக்கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவை முதன்முதலில் பார்த்தேன்.

சகித்துக்கொள்ளும் தாமிரபரணி

ஆற்றின் குறுக்கே சுத்தமல்லி, மருதூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஊர்களில் பெரிய பெரிய தடுப்பணைகள் உண்டு. இவற்றில் சுத்தமல்லி அணை இப்போது இல்லை. அணைகளின் இரண்டு பக்கங்களிலும் கால்வாய்கள் வெட்டப்பட்டுப் பாசனத்துக்கு வழிசெய்யப்பட்டிருந்தன. கன்னடியன் கால்வாய், மருதூர் கால்வாய் எல்லாம் பல மைல் தொலைவுக்குத் தாமிரபரணி நீரைக் கொண்டுசென்றன. முப்போகமும் விளைந்தது.

இன்றைக்கு ஆறு செல்லும் வழி நெடுகிலும் ஆங்காங்கே ஆற்றுக் குள் குழாய்களை இறக்கித் தண்ணீர் எடுத்து நன்னீரைப் பல ஊர்களில் பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்திய கழிவு நீரை ஆற்றிலேயே விடுகிறார்கள். மணல் அள்ளுகிறவர்களைச் சகித்துக் கொள்கிற மாதிரி, கழிவுநீரைக் கலப்பவர்களையும் தாமிரபரணி சகித்துக்கொள்கிறது.

- கட்டுரையை முழுவதுமாக வாசிக்க ‘இந்து தமிழ்’ தீபாவளி மலர் 2019-ஐ வாங்கிப் படியுங்கள். விலை:ரூ.150

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x