Published : 20 Oct 2019 11:12 AM
Last Updated : 20 Oct 2019 11:12 AM

வாசிப்பை நேசிப்போம்: மர்ம நாவல்கள் தந்த அச்சம்

அறுபதுகளில் என் இளமைப் பருவத்தில் ஓடியாடி விளையாடித் திரிந்த காலத்தில் முற்போக்கு விவசாயியான, அதிகம் படிக்காத அப்பா சரியான நேரத்தில் எனக்கு வாசிப்பை நேசிக்கவும் சுவாசிக்கவும் கற்றுக்கொடுத்தார். வீட்டுத் திண்ணையில் நாளிதழ்களும் வார இதழ்களும் கொட்டிக் கிடக்கும். அவற்றில் ‘illustrated Weekly’, ‘Readers Digest’ போன்றவையும் அடக்கம்.

தன் குழந்தைகள் புத்தகங்கள் மூலமாக உலகை அறிந்துகொள்ள அப்பா ஆசைப்பட்டார். நானும் புத்தகங்களின் புதுமணத்தை நுகர்ந்து, வழவழப்பை அனுபவித்துப் படங்களைப் பார்த்துவிட்டு விளையாட ஓடி விடுவேன். சிறிது சிறிதாகத்தான் படிக்கும் ஆர்வம் துளிர்விட்டது.

படக்கதைகளையும் துணுக்குகளையும் படிக்க ஆரம்பித்தேன். விடுமுறை நாட்களில் தாத்தா வீட்டுக்குப் போவதைத் தவிர சிறுகதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். மர்ம நாவல்களைப் படித்துப் பகல் நேரத்தில்கூட அம்மாவிடம் தஞ்சம் புகுவேன். நாவல்களில் வரும் நல்ல கருத்துகளை எழுதி என் அறை முழுவதும் ஒட்டிவைத்துக்கொள்வேன். இதைப் பார்த்துவிட்டுப் பலரும் என்னைக் கேலி செய்தது இன்னும் நினைவில் உள்ளது.

வேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு எனக் கால ஓட்டத்தில் மனம் ஒப்பிப் படிக்க முடியவில்லை. இருந்தாலும், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். சுஜாதா, சிவசங்கரி, வாஸந்தி, அனுராதா ரமணன், ஜெயகாந்தன் ஆகியோர் என் உள்ளங்கவர்ந்த எழுத்தாளர்கள். பயணக் கட்டுரைகளைப் படித்து வெளிநாடுகளைக் கற்பனையிலேயே சுற்றிப் பார்த்துவிடுவேன்.

இப்போது அதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. “தேர்வுக்குப் படிப்பதுபோல் படிக்கிறாயே, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறாய்?” எனக் கணவர் கேட்பார். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எத்தனை முறை வாசித்திருப்பேன் எனத் தெரியாது. இப்போது தொலைக்காட்சி, இணையம் எனப் புதுமைகள் வந்தாலும் புத்தகங்களோடு பொழுதைக் கழிப்பதில் கிடைக்கும் நிறைவு எதிலும் இல்லை.

வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, பிள்ளைகளின் திருமணமும் முடிந்த பிறகுதான், நீருபூத்த நெருப்பாகத் தடைபட்டு இருந்த வாசிக்கும் ஆசைக்கு வடிகால் கிடைத்தது. வீட்டின் அருகிலேயே நூலகம் வேறு. விட்டேனா பார் என்று புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்துவிடுவேன். ஏகாந்தமான என் நீண்ட பொழுதுகள் புத்தகங்களுடன் கழிகின்றன. குழப்பங்களிலிருந்து தெளிவு பெறவும், அமைதி கிடைக்கவும், தன்னம்பிக்கை, சுயமரியாதை, தைரியம், தளர்வறியா உள்ளத்துடன் நம் முன்னேற்றத்துக்கு உதவுபவை புத்தகங்களே.

- சுந்தரி ராஜேந்திரன், கும்பகோணம்.

புத்தகம் எழுதும் ஆவல்

பத்து வயதிலேயே வாசிக்கத் தொடங்கினேன். அப்போது குழந்தைகளுக்காக வரும் அம்புலிமாமா, பாலமித்ரா, பொம்மை, காமிக்ஸ், கோகுலம் போன்ற இதழ்களை வாங்கிப் படிப்பதற்காக அம்மாவுடன் டவுனுக்குப் போவேன். நான் போக முடியாத சூழலில் புத்தகம் வாங்கி வர வேண்டும் என்று அம்மாவிடம் கண்டிப்புடன் சொல்லி அனுப்புவேன். வார இதழ்கள், மாத இதழ்கள் போன்றவற்றை அப்பா வாங்கி வந்து கொடுப்பதைப் படித்து விட்டுப் பக்கத்து வீட்டில் கொடுத்து, அவர்கள் வாங்கும் இதழ்களை வாங்கிவந்து படிப்போம்.

லட்சுமி, அனுராதா ரமணன், இந்துமதி, சிவசங்கரி, ரமணிசந்திரன், தேவிபாலா, ராஜேஷ்குமார், பாலகுமாரன் போன்றவர்களின் நாவல்களில் தொடங்கி கல்கி, ஜெயகாந்தன், பிரபஞ்சன், பாவண்ணன், வண்ணதாசன், மேலாண்மை பொன்னுசாமி, எஸ்.ரா., ஜெயமோகன் என வளர்ந்து தற்போது எழுதிவரும் இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களை எல்லாம் தேடி வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். என் வாசிப்புத் தன்மையை வேறு தளத்துக்கு மாற்றியது, ‘ஈரோடு வாசல்’ என்ற வாட்ஸ்அப் குழு. அந்தக் குழுவின்மூலம் பல புத்தகங்களின் அறிமுகம் கிடைத்தது.

ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற திட்டத்தில் இணைந்து ஆவலோடு புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாசித்துவருகிறேன். பி.எச்.டேனியல் எழுதி, தமிழில் இரா.முருகவேள் மொழிபெயர்த்திருந்த ‘எரியும் பனிக்காடு’ புத்தகத்தை வாசித்துவிட்டு, தேயிலைத் தோட்டங்களில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் நிலைக்காகப் பல நாட்கள் மனம் வருந்திக் கிடந்தேன்.

தேயிலையைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களின் நினைவுகள் மேலெழுந்து ஆதங்கப்படும் அளவுக்கு அந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார் டேனியல். கு.சின்னப்ப பாரதியின் ‘தாகம்’ நாவலைப் படித்தபோது அன்றைய நாளில் விவசாயிகளின் நிலையையும் அடிமைப்பட்டுக் கிடந்த பண்ணையடிமைகளின் நிலையையும் நினைத்து மனது கனத்துப்போனது. வாசிப்பின்மூலம் என்னுடைய எழுத்தும் புது வடிவம் பெறத் தொடங்கியிருக்கிறது. புத்தகம் வெளியிட வேண்டும் என்ற ஆவலையும் வாசிப்பு ஏற்படுத்திவருகிறது.

- யசோதா பழனிச்சாமி, ஈரோடு.

ஆயிரம் ஆண்டு அனுபவம்

நான்காகப் பிரிந்திருக்கும் சாலையில் நாம் போக வேண்டிய பாதைக்கு வழிகாட்டி நிற்கும் வழிகாட்டி மரங்களே புத்தகங்கள். அந்தக் காலத்தில் S.S.L.C. முடித்தவுடன் 18 வயதில் எனக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். எனக்குத் திருமணமாகி சுமார் 52 ஆண்டுகளாகிவிட்டன. நான் வேலைக்குப் போகவில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளாகக் குடும்பக் கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடித்துவிட்டு, தினமும் ஐந்து மணி நேரம் வாசிப்பதற்காகச் செலவுசெய்து வருகிறேன்.

நான் வாசித்த தமிழ் நாவல்கள் மட்டும் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். நான் படிக்காத தமிழ்ப் பத்திரிகைகள் குறைவு. தி.ஜானகிராமன். பாலகுமாரன், அகிலன், நா.பா., கல்கி, அநுத்தமா, லக்ஷ்மி, வாஸந்தி, சிவசங்கரி, ராஜம் கிருஷ்ணன், அம்பை, இந்துமதி, இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை பிரபாகர் என்று என் மனதுக்கினிய ஆசிரியர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

படிப்பறிவைவிடப் பட்டறிவு என்ற அனுபவம்தான் முக்கியம். அதற்காக எல்லாவற்றையும் நாமே வாழ்ந்து, அனுபவப்பட்டுத் தெரிந்துகொள்வது சாத்தியமல்ல. ஆனால், வாசிப்பு ஆயிரம் ஆண்டு அனுபவத்தைக்கூட நமக்குத் தரும். ஒவ்வொரு நல்ல சிறுகதையும் நாவலும் சிறந்த அனுபவ ஆசான்களே. தேர்ந்த வாசிப்பின் மூலம் ஒன்றை நேரடியாக அனுபவிக்காமலே அனுபவம் பெறலாம். அறிஞர்களின் அனுபவங்களை எல்லாம் நம் அனுபவங்களாக மாற்றி, நம் வயதை ஐந்நூறு, ஆயிரம் என உயர்த்தலாம்.

- சுமதி ரகுநாதன், கோவை.

உயிர் தரும் வாசிப்பு

என் வீட்டில் யாருக்கும் வாசிப்புப் பழக்கம் இருந்ததில்லை. இருந்தும், எப்படியோ நான் மட்டும் வாசிக்கத் தொடங்கினேன். எஸ்.ராவின் புத்தகங்களையும், பவா செல்லதுரை சொல்லும் கதைகளையும் கேட்டுக் கேட்டு வாசிப்பை நேசித்தேன்.

புத்தகம் வெறும் எழுத்தும் வார்த்தைகளும் மட்டுமல்ல; எழுத்தாளரின் ரத்தமும் சதையுமான அனுபவமாகவே உணர்கிறேன். எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளில் நான் படித்த புத்தகங்களே பெரிதும் துணைநிற்கின்றன. எந்தச் சூழலிலும் வாசிப்பைக் கைவிடாமல் இருப்பதுதான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

- கி.பூங்குழலி, தருமபுரி.

அகவுலகைத் திறக்கும் சாவி

கல்வித் துறையின் பாடத்திட்டங்களைத் தாண்டிய இலக்கியம், ஆன்மிகம், வரலாறு போன்ற துறைகளைப் பற்றி அறிந்துகொள்வதில் இன்றைய தலைமுறைப் பெண்கள் முனைப்புகாட்டி வருகின்றனர். இளம் வயதில் அணில், அம்புலிமாமா, கோகுலம் போன்ற சிறுவருக்கான இதழ்களை வாசிக்கத் தொடங்கிய எனக்கு, கல்லூரிப் படிப்பு முடிந்து திருமண வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு கணவர் வீட்டில் இருந்த நூல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

வீட்டிலிருந்த இலக்கிய நூல்கள் பலவற்றுக்கிடையே, வலிமையான கருத்துகளை எளிமையான மொழியில் சொல்லும் பல நூல்கள் என் வாசிப்பு ரசனைக்கு வாய்ப்பாக அமைந்தன. குறிப்பாக, சிவகாமியின் ‘ஆனந்தாயி’, சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ கொண்டபள்ளி கொட்டேஸ்வரம்மா எழுதிய ‘ஆளற்ற பாலம்’, லட்சுமி அம்மாள் எழுதிய ‘லட்சுமி என்னும் பயணி’ போன்ற நூல்கள் எனது அகவுலகத்தைத் திறந்துவைத்தன.

குடும்பத்திலும் சமூகத்திலும் சவால்களை எதிர்கொண்டு வாழ்க்கையை உற்சாகத்துடன் நடத்தும் துணிச்சலைப் புத்தகங்கள் வழங்கின. ஈரோடு புத்தகத் திருவிழாவில் எனக்கு விருப்பமான நூல்களை வாங்கிப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது என் புத்துணர்வை அதிகப்படுத்தியது. தற்போது, ‘திருமூலர் வாழ்வும் வாக்கும்’ எனும் நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசிப்பு அனுபவங்கள் மனக்கதவை அகலமாகத் திறக்க உதவும் மாமருந்தாக விளங்குகின்றன.

- வி. மோகன ராணி, ஈரோடு.

தங்கைக்குக் கொடுத்த கையூட்டு

எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்தபோதே கதைப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ் பாண்ட் படக்கதைகள், அம்புலிமாமா எனத் தொடங்கிய வாசிப்புப் பழக்கம் பிறகு வேட்கையாகவே மாறிவிட்டது. பதின் பருவத்தில் சிறுகதையிலிருந்து தொடர் கதைக்குத் தாவினேன். அப்போதுதான் சுஜாதா, சிவசங்கரி, இந்துமதி, பிரபஞ்சன் ஆகியோர் அறிமுகமானார்கள். சுஜாதாவின் எழுத்தில் வெளிப்படும் குறும்பு எனக்குப் புதிதாக இருந்தது. பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகள் சினிமாத்தனம் கொண்டவை என்றாலும், எனக்கு விருப்பமானவை. ஸ்டெல்லா புரூஸ் எழுதிய, ‘ஒரு முறைதான் பூக்கும்’ கதை ஒவ்வொரு வாரமும் மனத்தில் பூ பூக்க வைத்தது.

எனக்குப் போட்டியாகத் தங்கையும் படிக்க ஆரம்பித்தபின், தொடர்கதையை நான் முதலில் படிப்பதற்காக அன்று மட்டும் அவளது வேலையும் சேர்த்து நானே செய்வதென உடன்படிக்கை செய்துகொண்டுவிடுவேன். வேளாண் பொறியாளராகப் பட்டம் பெற்று அதே துறையில் பணியமர்ந்தபோதும் படிப்பதை விடவில்லை. எந்த ஊர் சென்றாலும் அங்கே முதலில் பார்க்க விரும்புவது நூலகத்தைத்தான்.

இந்த ஐம்பது வயதில் ஜனரஞ்சக நாவல்களிலிருந்து விடுபட்டு தீவிர இலக்கியத்தில் என் மனம் ஈடுபாடு கொண்டுள்ளது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஆதவன், தி.ஜானகிராமன் தொடங்கி சமகாலப்படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ்.ரா., பா.வெங்கடேசன்வரை பலரது எழுத்துகள் வாழ்க்கையினூடே வந்துகொண்டேஇருக்கின்றன. என் முடிவுவரை அது தொடரும்.

- சந்திரா குமரேசன்.

யார் என் காதலி?

வாசிப்பு என்பது என் தொடக்க காலக் காதல்களில் ஒன்று. சிறு வயதில் தீரா தாகத்தோடு செய்தித்தாள்களையும் அவற்றுடன் வார இணைப்பாக வரும் இணைப்புகளையும் படிப்பதில் தொடங்கிய வாசிப்பு, பள்ளி நூலகங்களில் செழித்து வளர்ந்தது. இப்போது இணையதள வாசிப்பு உண்டு என்றாலும், மனம் தளரும்போது சமய நூல்களை வாசிக்கும்போது உற்சாகம் கிடைக்கிறது. சுஜாதாவின் எழுத்துகளும் கவிஞர் வாலியின் கவிதைகளும் மனதுக்குப் பிடித்தவை.

என் கணவரின் புத்தகச் சேமிப்பில் இருந்து படித்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நூல். சிறு வயது வாசிப்புக் காதல் வளர்ந்து சிந்தனைகள் முதிர்ந்த பிறகும், இணையதள வாசிப்போடு நிறுத்தி விடாமல் இன்றும் நல்ல நூல்களைத் தேடி வாசிக்கிறேன்.

- சஹரா இக்பால், மணலிக்கரை.

மனதைக் கவர்ந்த ‘ஜீனோ’

எங்கள் வீட்டுக்கு வரும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் இடம்பெறும் பெரிய எழுத்துகளைக் கூட்டிப் படிக்கத் தொடங்கியதுதான் என் முதல் வாசிப்பு. சில சொற்களின் உச்சரிப்பை என் அண்ணன் திருத்தி கற்றுத் தருவார். பிறகு வார இதழ்களைப் படிக்க ஆரம்பித்தேன். நான் பருவமடைந்தபோது தனிமைப்படுத்தப்பட்ட நேரம் அது. எங்கள் வீட்டில் குடியிருந்த ஒரு பாட்டி தான் படித்து பைண்ட் செய்து வைத்திருந்த பல புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். சாண்டில்யன், கல்கி, அகிலன் போன்றோர் அப்படித்தான் அறிமுகமாயினர். அப்போதுதான் வாசிப்பில் தீவிரமானேன்.

பிறகு நானே பல தொடர் கதைகளைப் படித்து பைண்ட் செய்து மீண்டும் மீண்டும் படித்தேன். சாண்டில்யனின் வர்ணனைக்காகவே ‘கடல் புறா’ வைத் திரும்பத் திரும்பப் படித்தேன். எத்தனை முறை படித்தாலும் அலுக்காத ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் பற்றிக் கட்டுரை எழுதி, பள்ளியில் பரிசும் பெற்றேன். கலைமகள், மஞ்சரி, பல்வேறு வார - மாத இதழ்கள், நாவல்கள் என எத்தனை எத்தனையோ புத்தகங்களை வாசித்தேன். புத்தகக் காட்சி, நூலகம் என்று எதையும் விட்டதில்லை.

எங்கே சென்றாலும் புத்தகக் கடையைப் பார்த்தால் புதிதாக என்ன புத்தகம் வந்திருக்கிறது என்று பார்த்து வாங்கிவிடுவேன். வீடு திரும்பியதும் என்ன வேலையிருந்தாலும், முதலில் எடுத்து மேலட்டையிலிருந்து கடைசிப் பக்கம்வரை படித்துவிட்டுத்தான் மற்ற வேலை. ஸ்டவ்வில் எதையாவது வைத்திருந்தாலும் அது தீய்ந்து மூக்கைத் துளைக்கும்போதுதான் மீள்வேன். அப்படி ஒரு வாசிப்புப் பிரியை நான். என் மகனும் பிறந்த நாளுக்குப் புத்தகம் பரிசளிப்பான். அனுராதா ரமணன், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, சுஜாதா ஆகியோரது எழுத்து நடை பிடிக்கும். சுஜாதாவின் கதையில் வந்த ‘ஜீனோ’வின் தாக்கத்தால் எங்கள் வீட்டு நாய்க்குட்டிக்கு ஜீனோ என்று பெயர் வைத்தேன். என் பேரக்குழந்தைகளும் நிறைய படிப்பார்கள். புத்தகங்களே என் உற்ற தோழிகள். எவ்வளவுதான் மனக்கவலை, சோர்வு இருந்தாலும் வாசிக்க ஆரம்பித்தால் அனைத்தும் மறந்துவிடும்.

- இந்திராணி பொன்னுசாமி, சென்னை.

வாசிப்பே பெண்ணுக்கு பலம்

நான் படிக்கும் காலத்தில் பாடப் புத்தகத்தில் வரும் கதைகளை விரும்பி வாசிப்பேன். வாசிப்பின்போது மனது மிகவும் லேசாக இருக்கும். ஓராண்டுக்கு என புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கதை அனைத்தையும் நான் ஒரு மாதத்திலேயே படித்து முடித்துவிடுவேன். வார இதழ்கள், செய்தித்தாள்கள் என அனைத்திலும் பிடித்தமானதை வாசிப்பேன். படித்து முடித்து ஆசிரியராகப் பணிபுரிந்தேன். அப்போது வாசிப்பின் எல்லை விரிந்தது. தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலக் கதைகளையும் வாசிக்க வேண்டிய அவசியம் இருந்தது. நான்கு ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது வாசிப்பும் வேலையும் நன்றாகச் சென்றுகொண்டிருந்தது.

நேரம் கிடைக்கும்போது மனத்தில் தோன்றுவதை கவிதையாகவும் எழுதியது உண்டு. திருமணத்துக்குப் பிறகு வாசிப்புக்கும் எனக்கும் இடைவெளி அதிகரித்துவிட்டது. மீண்டும் வாசிக்கத் தொடங்கு என என் கணவர் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். கருவுற்றபின் நேரம் கிடைத்தது; மறுபடியும் வாசிக்க ஆரம்பித்தேன். மூன்று நாட்களுக்கு ஒரு புத்தகம் என்று கணக்கு வைத்துப் படித்தேன். இன்றுவரை என் கணவர் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறார். வாசிப்பு, பெண்ணுக்குக் கூடுதல் பலமாக இருக்கிறது.

- பாத்திமா நாஸிரா, திருநெல்வேலி.

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக்கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்கள் ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x