Published : 19 Oct 2019 11:31 AM
Last Updated : 19 Oct 2019 11:31 AM

பயறு உற்பத்தியைப் பெருக்கும் வழிமுறை

த.சத்தியசீலன்

உளுந்து, பாசிப்பயறு, அவரை, துவரை, கொள்ளு ஆகிய பயறு வகை நம் உடலுக்குத் தேவையான புரதச் சத்தை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சாகுபடி செய்யப்பட்ட மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தவும் இவை உதவுகின்றன. இந்த நன்மை பயக்கும் பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கும் வழிமுறை குறித்து கோவை வேளாண்மை அலுவலர் ஆர்.சக்திவேல் பகிர்ந்துகொள்கிறார்:

பயிறு வகைப் பயிர்களைத் தனிப் பயிராகச் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 20 கிலோ விதைகளும் கலப்புப் பயிராகச் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 10 கிலோ விதைகளும் தேவைப்படும். இவற்றில் அதிக உற்பத்தியைப் பெற விவசாயிகள் சில தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும். முதலில் நிலத்தைத் தயார்படுத்த வேண்டும்.

3 ஆண்டுக்கு ஒருமுறை ஆழமான கோடை உழவு செய்ய வேண்டும். விதைப்புக்கு முன்பு விதைகளை நேர்த்திசெய்ய வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப உர மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும். களைகளைச் சரியான நேரத்தில் நீக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக்கப் பயிர் ரகங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். பூச்சி, நோய் மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

விதை நேர்த்தி

விதை நேர்த்தியைப் பொறுத்தவரை, விதைப்புக்குப் பயன்படுத்தும் விதைகளை ரைசோபியம் 3 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா 3 பாக்கெட், குளிர்ந்த அரிசிக் கஞ்சியுடன் சமமாகக் கலந்து 24 மணி நேரம் ஊற வைத்து, அதற்குப் பின்னர் நடவுசெய்ய வேண்டும்.

இதனால் விதைகளில் சீரான முளைப்புத் திறனும், காற்றில் உள்ள தழைச் சத்தைக் கிரகித்து மண்ணை நிலைப்படுத்தும் திறனும் அதிகரிக்கும். வேதி முறையில் கிலோவுக்கு 2 கிராம் திரம், கேப்டான் அல்லது கார்பன்டாசினை விதைகளுடன் கலந்து விதை நேர்த்திசெய்ய வேண்டும்.

உரமிடுதல்

ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கந்தகச் சத்து ஆகியவற்றை முறையே 12:5:25:12:5:20 கிலோ என்ற அளவில் இட வேண்டும். மானாவாரி நிலத்துக்கு 50 கிலோ என்ற அளவில் உரமிட வேண்டும். பயிர்களுக்குத் தேவையான சத்துகளை ஊட்டச்சத்துகளை அளிக்க நுண்ணூட்டக் கலவையை 12.5 கிலோ அளவு மணலுடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.

களை மேலாண்மை

விதைப்புக்கு முன்பு நிலத்தில் பென்டிமெத்தலீன் என்ற களைக்கொல்லியை 2.5 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15-30 நாட்களில் களை மேலாண்மை செய்ய வேண்டும்.

நீர்ப் பாசனம்

விதைத்தவுடன் பயிர்களுக்கு மூன்றாம் நாளில் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். முடிந்த அளவுக்கு நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் பாய்ச்ச அதிக ஆட்கள் தேவை என்பதால், அதைக் குறைக்கும் வகையில் எளிய முறையில் தெளிப்பு முறையில் நீர் பாய்ச்சுவது சிறந்தது. இதன் மூலம் நீரின் தேவை குறைவதுடன், பயிருக்குத் தேவையான நீரும் கிடைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் குறைகிறது.

வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்

ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ டி.ஏ.பி. கரைசல் 12.5 கிலோ தேவைப்படும். இதைத் தெளிப்பதற்கு ஒருநாள் முன்பு, வாளியில் நன்றாகக் கரைத்து வைக்க வேண்டும். பின்னர் நன்றாக வடிகட்டிய தெளிவான நீரைப் பூக்கும் தருணத்திலும், 15 நாட்களுக்குப் பின்னரும் தெளிக்க வேண்டும்.இதேபோல் ஹெக்டேருக்கு ‘பல்சஸ் ஒண்டர்’ வளர்ச்சி ஊக்கி 5 கிலோ தேவைப்படும். இதை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் தருணத்திலும், 15-ம் நாளிலும் தெளிக்க வேண்டும்.

பூச்சி நோய் மேலாண்மை

பயறு வகைப் பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய்த் தாக்குதல் காரணமாக, விவசாயிகள் பயிரிடத் தயங்குகின்றனர். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்திகளைக் கையாளுவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
நோய், பூச்சித் தாக்குதலை எதிர்க்கும் ரகங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைத்து, பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும். வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம், வேப்ப எண்ணெய் 2 சதவீதம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து பயிர்களில் தெளிக்க வேண்டும்.

அசுவிணி, காய்த் துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தியோமெந்தாக்சம் அல்லது 2 சதவீத வேப்ப எண்ணெய்யைத் தெளிக்க வேண்டும். இலைச்சுருள் நோய், ஆந்தராக்ஸ், தண்டு சொரி நோய்களை, மென்கோசிப் பூச்சிக்கொல்லியைத் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். வெள்ளை ஈக்கள் மூலமாகப் பரவி மகசூலைப் பாதிக்கும் மஞ்சள் சோகை நோயை, இமிடோகுலோபிரிட் அல்லது மைத்தோயேட் என்ற பூச்சிக்கொல்லியைத் பயிர்கள் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x