

மனித இனம் எட்டிப்பிடித்த, புவியின் எட்டாத் தீவுகளில் ஒன்றுதான் ‘ஈஸ்டர் தீவு’. உலக வரைபடத்தின் மேற்கு திசையில் தொலைவில் இருக்கும் தீவுகளில் ஒன்று அது. பசிபிக் கடலில் தென்கிழக்குப் பகுதியில் இருக்கிறது. தென்னமெரிக்க நாடான சிலேவிலிருந்து (பெருங்கவி பாப்லோ நெருதாவின் நாடு!) 3,512 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அந்தத் தீவு சிலேவுக்குச் சொந்தமானது.
தொலைதூரம் என்பதற்காக மட்டும் ஈஸ்டர் தீவு பிரபலமாகவில்லை. அங்கே இருக்கும் பிரம்மாண்டமான 887 சிலைகளுக்காகத்தான் அந்தத் தீவு பிரபலம். இந்தச் சிலைகளின் பெயர் ‘மோவாய்’. பெரும்பாலும் தொடைவரை இருப்பவை இந்தச் சிலைகள். தலை வரை இருக்கும் சிலைகளும் இந்தத் தீவில் உண்டு. தலை மட்டுமே மூன்று ஆள் உயரம் இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
யாருமே எளிதில் அணுக முடியாத இந்தத் தீவில் இவ்வளவு சிலைகளும் உருவாக்கப்பட்ட காலம் எது தெரியுமா? கி.பி. 12-ம் நூற்றாண்டு. கி.பி. 7-ம் நூற்றாண்டிலிருந்து மனிதர்கள் இங்கே குடியேற ஆரம்பித்துவிட்டார்கள் . அந்தத் தீவின் அளவோடு ஒப்பிடும்போது நிறைய மக்கள்தொகை இருந்தது ஒரு காலத்தில். 18-ம் நூற்றாண்டு வாக்கில் மக்கள்தொகை 3,000 என்ற அளவில் குறைந்துபோனது. நோய், அடிமை வணிகம் போன்றவற்றால் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தத் தீவின் மக்கள்தொகை குறைந்து வெறும் 111 பேர் என்ற எண்ணிக்கையை அடைந்தது.
20-ம் நூற்றாண்டின் நவீன காலனியாதிக்கத்தின் காரணமாக மீண்டும் குடியேற்றம் நிகழ ஆரம்பித்தது. 2012-ன் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தத் தீவின் மக்கள்தொகை 5,800. சமீப காலத்தில் ‘மோவாய்’ சிலைகள் காரணமாக இந்தத் தீவு செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்தது. ஒரு அகழ்வாராய்ச்சியின்போது தெரியவந்த உண்மைதான் அதற்குக் காரணம்.
தலைகளின் சிலைகளைத் தோண்டிப்பார்க்க ஆரம்பித்தபோது அந்தத் தலைகளுக்குக் கீழே பிரம்மாண்டமான உடல்களும் இருந்தது தெரியவந்தது. தலைகளே இவ்வளவு பிரம்மாண்டம் என்றால் உடல்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்! இவ்வளவு உயரமான சிலைகள் எப்படிப் புதையுண்டிருக்கும்? வேறு ஒன்றுமில்லை. எரிமலைச் சீற்றத்தின் காரணமாக, எரிமலைக் குழம்பு, எரிமலைச் சாம்பல் போன்றவற்றால் இந்தச் சிலைகள் புதையுண்டிருக்கின்றன. அந்தச் சிலைகளின் உடலில் புரியாத சின்னங்கள், புரியாத எழுத்துக்கள் காணப்படுகின்றன. இப்போதைக்கு இரண்டு சிலைகளைச் சுற்றிலும் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். மற்ற பிரம்மாண்டங்களையும் வெளிக்காட்டும் பணி, கூடிய விரைவில் தொடங்கக்கூடும்.