Published : 18 Oct 2019 12:39 PM
Last Updated : 18 Oct 2019 12:39 PM

எனது ஓட்டம் நிற்காது! - கதிர் பேட்டி

கா.இசக்கிமுத்து

‘பரியேறும் பெருமாள்' படத்தின் நாயகன் பரியனாக நடித்து பாராட்டுக்களைக் குவித்த கதிர், தற்போது 'பிகில்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கத் தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். 'பிகில்' பட வாய்ப்பு, விஜய்யுடன் நடித்த அனுபவம் பல கேள்விகளுக்கு பதில் அளித்த கதிருடனான சந்திப்பிலிருந்து ஒரு பகுதி…

'பிகில்' வாய்ப்பு எப்படி அமைந்தது?

இயக்குநர் அட்லீ அண்ணா எனக்கு நல்ல பழக்கம். அவருடைய அலுவலகத்துக்கு அடிக்கடிப் போவேன். ஒரு நாள் திடீரென்று ‘ஆபிஸ் வா தம்பி’ என்று அழைத்தார். வழக்கம்போல் கூப்பிடுகிறார் என்று நினைத்து தான் சென்றேன். ‘விஜய் அண்ணா படம். ஒரு கேரக்டர் இருக்கு பண்றியா?' என்றார். எனக்கு சிலீர் என்றிருந்தது! ஏனென்றால் நான் விஜய் அண்ணாவின் ரசிகன். அவர் நடிக்கும் கதையில் எனக்கும் நல்ல ஒரு கேரக்டர் அமைந்தது அதிர்ஷ்டம்.

விஜய்யின் ரசிகராக அவருடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

‘பிகில்' பூஜை சமயத்தில் ‘சூப்பர்ப்பா.. சந்தோஷம்’ என்றார். ஆனால், 'உங்கக்கூட நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது சந்தோஷமாக இருக்கு அண்ணா' என்றேன். வழக்கமான சிரிப்பையே பதிலாகத் தந்தார். படப்பிடிப்பில் அவரோடு நிறையப் பேசக் கூடிய நேரம் கிடைத்தது.

அதை மறக்கவே முடியாது. அவருடைய பேச்சு, கிண்டல் என அனைத்தையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். நேரம் போவதே தெரியாது. பெர்சனலா அவரை ரொம்பவே பிடிக்கும். 'பரியேறும் பெருமாள்' பார்த்துவிட்டு ‘ரொம்ப நல்லாப் பண்ணியிருக்கடா.. இன்னும் பெரிசா வருவ’ என்று ‘பிகில்’ படத்துக்கு முன்பே பாராட்டினார். அதுதான் விஜய் அண்ணா.

விஜய்யிடமிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?

ஒவ்வொரு காட்சிக்கும் அவருடைய மெனக்கெடல். இந்தக் காட்சி திரையில் வரும்போது, எப்படியிருக்கும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் எனச் சிந்தித்துக்கொண்டே இருப்பார். படப்பிடிப்பு சமயத்தில் அவரை அந்தக் காட்சியிலிருந்து வெளியே கொண்டு வரவே முடியாது.

அனைத்து எண்ணமுமே அந்தக் காட்சியைச் சுற்றியே இருக்கும். என்னால் அப்படி இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அமைதியாக இருக்கிறார் என்றால் அந்தக் காட்சியை இன்னும் எப்படி மெருகேற்ற யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

நட்பைத் தாண்டி இயக்குநர் அட்லீ எப்படி?

ஒரு காட்சியில் அவர் நினைத்தது வரவில்லை என்றால், அதைச் சொல்ல மாட்டார். "சூப்பர்டா.. நல்ல நடிச்சே.. இந்த வசனத்தை இப்படிச் சொல்லி இன்னொரு டேக் போகலாமா" என்பார். தவறைக் கூட ரொம்ப பாசிட்டிவாக எடுத்துச் சொல்வார். ஷுட்டிங் முடிச்சுட்டு, காரிலேயே தூங்குவார், இரவு எடிட்டிங் போயிட்டு, இசை என்னவென்று பார்த்துவிட்டு மறுபடியும் காரில் தூங்கிவிட்டு காலையில் படப்பிடிப்புக்கு வருவார். சொகுசா இருக்கிறது வாழ்க்கையில்ல; உடம்புல தெம்பு இருக்கும்போதே உழைக்கணும் கிறதை அவர்கிட்ட கத்துக்கணும்.

‘பரியேறும் பெருமாள்' படத்துக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு?

திரையுலகில் உள்ளவர்கள், பார்ப்பவர்கள், சந்தித்தவர்கள் என எல்லாருமே வாழ்த்து தெரிவித்தார்கள். காரில் போய்க் கொண்டிருக்கும்போது, என்னைத் துரத்தி வந்து வாழ்த்துச் சொன்னவர்களும் இருக்கிறார்கள். அனைத்தையும் தாண்டி எனக்குப் பெரிதாக பட்ட ஒரு பாராட்டு நெகிழ வைத்துவிட்டது. எங்கோ தென் மாவட்டத்தில் ஒரு அப்பா கையில் சுண்ணாம்பு கலந்த வாளியைக் கையில் பிடித்திருக்க, அதிலிருந்து பிரெஷ்ஷால் தொட்டுத் தொட்டு அவரது மகன் தார் சாலையில் 'பரியேறும் பெருமாள் பி.ஏ,பி.எல் சூப்பர்' என எழுதிக்கொண்டிருக்கும் ஒளிப்படத்தை சமூக வலைதளத்தில் பார்த்தேன். அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தச் சின்னப் பையனை ‘பரியேறும் பெருமாள்’ எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை கறுப்புச் சாலையில் எழுதப்பட்ட வெள்ளை எழுத்துக்கள் கூறின. ‘பரியேறும் பெருமாள்' மாதிரி ஒரு படம் இனி அமையும் என்று சொல்லமுடியாது.

தற்போது நடித்துவரும் ‘சர்பத்’ , ‘ஜடா' படங்கள் பற்றிக் கூறுங்கள்.

‘களவாணி', ‘கலகலப்பு' பாணியில் ‘சர்பத்' ஒரு குடும்பப் பாங்கான காமெடி படம். ‘ஜடா' கால்பந்து சம்பந்தப்பட்ட படம். அதில் கால்பந்து என்பது ஒரு அங்கம் அவ்வளவுதான். வடசென்னையில் உள்ள ‘செவன்ஸ் கால்பந்து’ என்பது புதிதாக இருந்தது. அதை வைத்து சூதாட்டம் போன்ற விஷயங்களும் இருக்கும் படம்தான் ‘ஜடா’. ட்ரெய்லர் வெளியாகும்போது இது கால்பந்தாட்ட படம் மட்டுமல்ல என்பது விளங்கும்.

நீங்கள் கஷ்டப்பட்டு நடித்த ‘சிகை’ திரையரங்கில் வெளியாகவில்லையா?

படமாகப் பார்க்கும்போது டிஜிட்டலுக்குத்தான் சரி என்று புரிந்தது. திரையரங்கில் போய் படம் பார்க்கும் மக்களுக்கான படமாக இல்லாமல் கொஞ்சம் சீரியஸ் தன்மையுடன் இருந்தது. மாற்றுப் பாலினத்தவரின் அக உணர்வில் ஒன்றை அழுத்தமாகப் பேசியது. பலரும் அதைப் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள். திரையரங்கில் வெளியாகியிருந்தால் வந்து பார்த்திருக்கும் எண்ணிக்கையைவிட டிஜிட்டலில் அதிக ஆடியன்ஸ் அந்தப் படத்தைப் பார்த்திருப்பதும் பார்த்து வருவதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்களுடைய திரையுலக வாழ்க்கைக்கு மனைவி எவ்வளவு உறுதுணையாக உள்ளார்?

சினிமாவைப் பொறுத்தவரை எதிலும் தலையிடமாட்டார். நானும் அப்பாவும்தான் முடிவு செய்வோம். அப்பாவுக்கு சினிமா மீது காதல் அதிகம். ஒரு கதை வரும் போது, இருவருமே உட்கார்ந்து முழுமையாகப் படிப்போம். அவருடைய ஆசைக்காகத்தான் சினிமாவுக்கே வந்தேன். எப்போதுமே எனக்கு வரும் கதைகளில் நடிப்பதைத் தாண்டி, ஒரு கதையைத் தேர்வு செய்து, அதற்கான பணிபுரிந்து நடித்துப் பழக்கப்பட்டவன் நான். நல்ல கதைகளைத் தேடி ஓடும் ஓட்டத்தை என்றைக்கும் நிறுத்தமாட்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x