Published : 17 Oct 2019 12:19 PM
Last Updated : 17 Oct 2019 12:19 PM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 99: அருவம் உருவம் அருவுருவம்

கூத்தத் திருவுருவத்தை மற்றவர்களும் பாடியிருக்கிறார்கள் என்றாலும்கூட இவ்வளவு நயந்து பாடியவர் திருமூலர்தாம். அப்படி என்ன விருப்பம் திருமூலர்க்கு? அருவ நிலை, உருவ நிலை, அருவுருவ நிலை என்ற மூன்றுக்கும் கூத்து இடமளிக்கிறது.

திருவழி ஆவது சிற்றம் பலத்தே
குருவடிவு உள்ளாக் குனிக்கும் உருவே;
உருஅரு ஆவதும் உற்றுஉணர்ந் தோர்க்கு
அருள்வழி ஆவதும் அவ்வழி தானே. (திருமந்திரம் 2763)

குனிக்கும் உருவம் என்பது ஆடும் உருவம். நிலைகுத்திய உருவங்கள் காண்போரை உறங்க வைத்துவிடுகின்றன; ஆடும் உருவங்களே விழிப்போடு வைத்திருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் வளையாத நெட்டுச்சாலைகள் ஓட்டுநரை உறங்க வைப்பதையும், வளையும் நெளிவுச்சாலைகள் ஓட்டுநரை விழித்திருக்க வைப்பதையும்போல.

விழிப்போடு இருப்பதே விடுதலைக்கு வழி. மாணவரை விழிப்போடு வைத்திருப்பதே ஆசிரியப் பணி. ஆகவே ஆடி, விழிப்போடு வைத்திருந்து, விடுதலை தரும் கூத்தத் திருவுருவம் ஆசிரிய உருவமாகவே போற்றத்தக்கது. ஆட்டம், விழிப்பு, விடுதலை என்று அமையும் வழியே அருள் வழியாகும்.

திருமூலர் ஆக்கும் மந்திர மேனி

திருமூலர் கூத்த மேனியை மந்திர மேனியாகவும் ஆக்குகிறார். சிவாயநம என்னும் மந்திர ஒலிக்குறிப்பின் உருவக் குறிப்பாகக் கூத்தனைக் காட்டுகிறார்:
மருவும் துடிஉடன் மன்னிய வீச்சு
மருவும் அமைப்பும் அனல்உடைக் கையும்
கருவில் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே. (திருமந்திரம் 2798)

உடுக்கை பிடித்த கை; வீசி ஆடும் கை; அஞ்சேல் என்று அருளும் கை; தீ ஏந்திய கை; இவை நான்குடன் அறியாமையின் மூலக் கருவாகிய முயலகனை ஏறி மிதித்து இனி ஒரு கருவில் பிறவாமை தரும் கமலப் பாதம்; இவை ஐந்தும் சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் உருவச் சித்திரிப்புகள். சிவாயநம என்னும் ஒலிக்குறிப்பையும் கூத்தன் திருமேனி என்னும் உருவக் குறிப்பையும் கீழ்வரும் பாட்டில் பொருத்தியும் காட்டுகிறார்:

திருந்துநல் சீஎன்று உதறிய கையும்
அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்
பொருந்தில் அமைப்பில் இயஎன்ற பொற்கையும்
திருந்நத் தீஆகும்; திருநிலை மவ்வே. (திருமந்திரம் 2797)

உடுக்கை பிடித்த கை உடுக்கையை உதறுகிறது; உதறுகிறவர்கள் ‘சீ’ என்றுதானே உதறுவார்கள்? எதை உதறுவார்கள்? எது குற்றமோ அதை உதறுவார்கள். எது குற்றம்? மாயை எனப்படும் பொருள் உலகப் போகத்தில் அறிவை இழத்தல் குற்றம். கூத்தனாரைப்போல அதைச் ‘சீ’ என்று உதறுக. இது சிவாயநம எனும் மந்திரத்தில் முதலெழுத்தான ‘சி’.வீசி ஆடிய கை அணைப்பதுபோலத் தோன்றுகிறது.

அணைக்கிறவர்கள் யாரை அணைப்பார்கள்? அன்பர்களை அணைப்பார்கள். எப்படி அணைப்பார்கள்? ‘வா’ என்று தம் கை வளைத்துப் பூப்போல அணைப்பார்கள். அன்பு ஊறும் உள்ளத்தவர் யாராயினும் பேதம் பாராது அவரை ‘வா’ என்று வரவேற்று அணைத்துக்கொள்க. இது சிவாயநம எனும் மந்திரத்தில் இரண்டாம் எழுத்தான ‘வா’.

அஞ்சேல் என்று அருளும் கை சொல்லும் செய்தி ‘இய’ என்பது. ‘இய’ என்றால் இயைந்திரு, இனிதிரு என்று பொருள். கூத்தப் பிரானோடு மட்டுமல்லாமல் உலகத்தில் உயிர்கொண்டு பூத்த பிரான்கள் எல்லாரோடும் இனித்திருந்து இயைக. இது சிவாயநம எனும் மந்திரத்தில் மூன்றாம் எழுத்தான ‘இய’ எனும் ‘ய’.

தீ ஏந்திய கை அழிவைச் சொல்கிறது. நத்தி என்றால் அழிவு; இல்லாமல் போதல். நாத்தி (nasti) என்பதிலிருந்து வந்தது நத்தி. ‘உன்னை நாத்தி பண்ணிடுவேன்’ என்பது இன்றும் நிலவும் சென்னை வழக்கு. உயிர்களைத் தத்தளிக்க வைக்கும் வினைப் பயனை நத்தி செய்யும் தீ நத்தீ; நல் தீ என்றாலும் அமையும். இது சிவாயநம எனும் மந்திரத்தில் நான்காம் எழுத்தான ‘ந’.

ஊன்றி ஆடும் திருப்பாதம் அழகு. ஏன் அழகு? அறியாமை மீண்டும் எழுந்து வந்து நம்மைச் சூழ்ந்துவிடாமல் தனக்குக் கீழே போட்டு மிதித்து வைத்திருக்கிறது. அறியாமை கொல்லும் எதுவும் அழகே. அழகென்பது மவ்வம். இது சிவாயநம எனும் மந்திரத்தில் ஐந்தாம் எழுத்தான ‘ம’.
சும்மா போற்றினால் வெற்றுச் சடங்காக்கிப் பொருளற்றதாக்கி விடுவார்கள் என்றோ என்னவோ கூத்தப் பிரானைச் சூத்திரமாக்கிப் போற்றுகிறார் திருமூலர். சூத்திரமான பிறகு உருவம் தேவையில்லை; சூத்திரமே போதும்.

ஒவ்வாதவற்றைச் சீயென்று உதறுக; அன்பர்களை வாவென்று அணைக; தனிப்பெருங்கருணையோடு இயவென்று இசைக; நாற்றம் கொல்ல நல்தீயை நாடுக; மவ்வம் அறிவே என்று உணர்க. சிவாயநம என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.

(கருணை பொங்கட்டும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x