Published : 16 Oct 2019 12:45 PM
Last Updated : 16 Oct 2019 12:45 PM

மாய உலகம்: ஒரு குழந்தையிடமிருந்து கற்க என்ன இருக்கிறது?

மருதன்

‘‘பேரரசரே, நீங்கள் ஏன் சட்டை அணியாமல் வெளியில் வந்திருக்கிறீர்கள்?” ஒட்டுமொத்த நகரமும் அமைதியாக இருந்தபோது திடீரென்று ஒரு குழந்தை சத்தம்போட்டுக் கத்திவிட்டது. மறுநொடியே பேரரசரின் முகம் இருண்டு போனது. அப்படி இருண்டால் என்ன செய்ய வேண்டும் என்று தளபதிக்குத் தெரியும். அவர் வீரர்களைப் பார்த்தார். அவர் அப்படிப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும் என்று வீரர்களுக்குத் தெரியும். உடனே பத்துப் பேர் வேலும் வாளுமாகக் குழந்தையின்மீது பாய்ந்தார்கள்.

ஒரு குழந்தையை எப்படிக் கைது செய்வது? இது என்ன கேள்வி, விலங்கைக் கொண்டுவா என்றார் ஒரு வீரர். இருவர் குழந்தையின் இடுப்பைப் பிடித்துக்கொள்ள, இருவர் பிஞ்சுக் கைகளில் விலங்கைப் பூட்டினார்கள். கனம் தாங்காமல் குழந்தை தன் கைகளைக் கீழே தொங்கவிட்டபோது விலங்கு பொத்தென்று தரையில் விழுந்துவிட்டது. ஹாஹா என்று சிரித்த குழந்தையை ஒரு வீரர் அப்படியே தூக்கித் தோளில் போட்டுக்கொள்ள, அரண்மனையை நோக்கி விரைந்து சென்றது படை.

விசாரணை ஆரம்பமானது. ‘‘எதற்காக உன்னைக் கைது செய்திருக்கிறோம் என்பது தெரியுமா?” என்றார் பேரரசர்.
‘‘தெரியும். நீங்கள் நேற்று சட்டை அணிந்திருக்கவில்லை என்னும் உண்மையைச் சொன்னதற்காக” என்றது குழந்தை.
‘‘உலகிலேயே மிகப் பெரும் நாட்டையே ஆளும் பேரரசரான எனக்குத் தெரியாத உண்மை உனக்குத் தெரிந்துவிட்டதா?”
‘‘எல்லோரும் வெளிப்படையாகக் கண்ட உண்மைதான், மன்னா. ஆனால், நான் மட்டுமே வாயைத் திறந்து சொன்னேன்.”
‘‘அறிவும் வீரமும் மிக்க என் அவையினர் ஏன் உண்மையை மறைக்க வேண்டும்?”

‘‘மன்னா, இன்று காலை நீங்கள் சட்டை இல்லாமல்தான் அரண்மனையை விட்டுக் கிளம்பினீர்கள் என்பதை உங்கள் வீரர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். நமக்கேன் வம்பு, தளபதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று அமைதியாக இருந்திருப்பார்கள். தளபதிகளும் கண்டிருப்பார்கள். பேரரசரின் குறையைச் சுட்டிக்காட்டுவது நம் வேலையா? அது அமைச்சர்களின் பொறுப்பல்லவா என்று அவர்களும் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள்.

ஒரு குழந்தையான எனக்குத் தெரிந்தது இங்குள்ள புலவர்களுக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? நிச்சயம் தெரியும். இருந்தும் ஒருவரும் உங்களுக்கு உண்மையைச் சொல்லவில்லை. அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? அடடா, இப்போதுதான் அமர்க்களமாக இருக்கிறீர்கள் மன்னா என்று வாயிற்காப்போர் தொடங்கி மூத்த அறிஞர்கள்வரை அனைவரும் நீங்கள் அணியாத சட்டையைப் புகழவும் செய்திருக்கிறார்கள்!”

‘‘உலகின் முதன்மையான ஆடை வடிவமைப்பாளர்கள் தயாரித்த மாயச் சட்டை அது. தேசபத்தி மிக்கவர்கள் கண்களுக்கு மட்டும்தான் தெரியுமாம். அப்படியானால் நீ தேசவிரோதி என்றுதானே அர்த்தம்?”
குழந்தை புன்னகை செய்தது. ‘‘நான் உங்கள் தேசத்தில் பிறந்தே சில ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள் அதன் விரோதி ஆகிவிட்டேனா? பள்ளிக்கூடத்தின் வாசலைக்கூட நான் மிதித்ததில்லை. உங்களிடமோ அல்லது உங்கள் அவையினரிடமோ வாதம் புரியும் வயதோ ஆற்றலோ எனக்கில்லை. தேச பக்தி, தேச விரோதம் போன்ற பெரிய பெரிய சொற்களை என்னால் பிழையின்றி உச்சரிக்கக்கூட முடியாது என்னும்போது அவற்றின் அர்த்தம் எல்லாம் தெரியுமா என்ன? அரசாங்கம், அரசியல் எதுவும் எனக்குத் தெரியாது.

நீதி நூல்களை மட்டுமல்ல, எந்த ஏட்டையும் புரட்டியதுகூட இல்லை. ஒருவர் சட்டை அணிந்திருக்கிறாரா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு குழந்தைக்கு இருக்கும் எளிய அறிவு போதும் என்று நம்புகிறேன். நான் என் கண்களையும் காதுகளையும் நம்புகிறேன். உண்மை என்றால் என்னவென்று அவை எனக்குச் சொல்லிக்கொடுக்கின்றன. வில்லையும் வாளையும் சுமக்கும் வலு இல்லாவிட்டாலும் உண்மையை வாய் திறந்து சொல்வதற்கான வலு என்னிடம் இருக்கிறது.”

நிதானமாக ஒருமுறை மூச்சு விட்டுக்கொண்டு குழந்தை தொடர்ந்தது.‘‘இங்கே இருப்பவர்கள் ஆற்றல்மிக்கவர்கள். புத்திக்கூர்மையானவர்கள். அனுபவசாலிகள். அதனால்தானோ என்னவோ அவர்கள் ஒரு எளிய உண்மையைச் சொல்வதற்குக்கூட இத்தனை யோசிக்கிறார்கள். நிறைய கற்றவர்கள்தான் என்றாலும் ‘நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது’ என்னும் மூன்று சொற்களை உங்களிடம் உச்சரிக்க இவ்வளவு அஞ்சுகிறார்கள்.

ஆழமான உலக அறிவெல்லாம் அவர்களிடம் இருக்கிறது. இருந்தும் என்னைப் பாதிக்காதவரை எதுவும் எனக்கு முக்கியமில்லை என்று அவர்கள் அலட்சியத்தோடு இருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதைவிட கண்டுகொள்ளாமல் விடுவதுதான் எனக்குப் பலனளிக்கும் என்று கணக்குப் போடும் அளவுக்கு அவர்கள் சுயநலம் மிக்கவர்களாக சுருங்கியிருக்கிறார்கள். அப்பட்டமாகத் தெரியும் ஒரு தவறையே அவர்களால் கண்டுகொள்ளாமல் இருக்க முடிகிறது என்றால் கண்களுக்குத் தெரியாமல் புதையுண்டு கிடக்கும்

அநியாயங்கள் குறித்து அவர்கள் வாய் திறப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?”
‘‘குழந்தை, நான் இனி மாயச் சட்டையை அணிய மாட்டேன். இவ்வளவு தீர்க்கமாகப் பேசும் நீ ஏன் என் அவையில் சேரக் கூடாது?” மழலை மாறாத குரலில் குழந்தை பதிலளித்தது: ‘‘உங்களோடு இணைந்துவிட்டால் இங்கு நிலவும் அச்சமும் தயக்கமும் சுயநலனும் பொறுப்பின்மையும் என்னையும் பற்றிக்கொண்டுவிடும். நான் வெளியில் இருக்கவே விரும்புகிறேன். மயக்கத்தில் மூழ்கிக்கிடக்கும் என் மக்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு குழந்தைக்கு இது மிகப் பெரிய பணி என்றாலும் மலைத்து நின்றுவிடாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க விரும்புகிறேன்.”

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.comஓவியம்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x