Published : 16 Oct 2019 12:39 PM
Last Updated : 16 Oct 2019 12:39 PM

டிங்குவிடம் கேளுங்கள்: போரில் வென்றது யார்?

போரஸ் மன்னருக்கும் அலெக்சாண்டருக்கும் நடைபெற்ற போரில் வென்றது யார் என்பதில் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறது. நீ என்ன சொல்கிறாய், டிங்கு?

– எஸ்.பி. சபரிஷ், 8-ம் வகுப்பு, வேலம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சென்னை.

அடடா, சிக்கலான கேள்வியாக இருக்கிறதே! போரஸ் மன்னரின் மிகப் பெரிய யானைப்படையைப் பார்த்து, அதுவரை யானைப்படையைப் பார்த்திராத அலெக்சாண்டர் படைகள் முதலில் பின்வாங்கின. கி.மு.326-ம் ஆண்டு ஜீலம் நதிக்கரையில் நடைபெற்ற கடுமையான போரில் இரண்டு படைகளுமே மோசமான சேதத்தைச் சந்தித்தன. இறுதியில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார். துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்ட போரஸ் மன்னரைப் பாராட்டி, அந்த நாட்டை அவரிடமே கொடுத்துவிட்டதாகத்தான் பாடப்புத்தகங்களும் வரலாற்றுப் புத்தகங்களும் சொல்கின்றன.

சில வரலாற்று ஆசிரியர்கள் இந்தப் போரில் வென்றது யார் என்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை போரஸ் என்ற புருஷோத்தமன் ஜெயித்தாரா, தோற்றாரா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. அவர் மிகச் சிறந்த வீரர். உலகத்தையே அஞ்ச வைத்த மாசிடோனிய மன்னர் அலெக்சாண்டரை எதிர்த்து இறுதிவரை போரிட்டார் என்பது ஒன்றே போதும். நீங்கள் தேர்வில் எழுதுவதற்காகக் கேட்கிறீர்கள் என்றால் பாடப்புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதையே பின்பற்றிக்கொள்ளுங்கள், சபரிஷ்.

நீரின் மூலமே மனிதர்களுக்கு அதிகமாக நோய் வருகிறது. அசுத்தமான நீரைக் குடிக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நோய் வருவதில்லையே ஏன், டிங்கு?

– தீபக் ராஜா, 7-ம் வகுப்பு, சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை.

மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்கிறது. அதையும் மீறி அசுத்தமான நீரைப் பருகும்போது நோய் தாக்கவே செய்யும். அவை நம்மிடம் வந்து சொல்லாததால், நோய் தாக்குவதில்லை என்று நீங்கள் நினைத்துவிட்டீர்கள், தீபக் ராஜா. சில விலங்குகள் தங்கள் நோய்களைக் குணப்படுத்த ஏதாவது மூலிகைத் தாவரங்களைச் சாப்பிட்டுக்கொள்கின்றன. சில விலங்குகள் ஓய்வெடுத்து நோயைச் சரிசெய்துகொள்கின்றன. நோய் எதிர்ப்பாற்றல் இல்லாத குட்டிகள் நோய்க்குப் பலியாகிவிடுகின்றன.

சிறு வயதில் ‘பல்ப்’ வாங்கிய அனுபவம் உண்டா, டிங்கு?

– ச. ஸ்ரீநிதி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.

ஓ… பலமுறை வாங்கியிருக்கிறேன். ஒரு நாள் இரவு 7 மணிக்கு ஜன்னல் கதவைச் சாத்துவதற்காகச் சென்றேன். தோட்டத்தில் ஓர் உருவம் நின்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அம்மா, தங்கைகளிடம் விஷயத்தைச் சொன்னேன். அறை விளக்கை அணைத்துவிட்டு அவரைக் கண்காணித்தோம். சுற்றும் முற்றும் பார்ப்பதும் ஏதாவது வாகனம் வந்தால் உட்கார்வதுமாக இருந்தார், அவர். முதல் முறை ஒரு திருடர் எங்கள் வீட்டுக்கு வந்ததில் பதற்றமாக இருந்தோம்.

20 நிமிடங்களுக்குப் பிறகு அப்பா வந்தார். தைரியமாகக் கதவைத் திறந்து, தோட்டத்தில் திருடர் என்று ரகசியமாகச் சொன்னேன். விளக்கைப் போடச் சொன்னார் அப்பா. ஒல்லியாக ஒருவர் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். அவரை அருகில் அழைத்து விசாரித்தார். ஊருக்குச் செல்ல பணமில்லை, சாப்பிட்டு 2 நாட்களாகிவிட்டது, இந்த இரும்புக் கம்பிகளை எடுத்து, விற்றுச் சாப்பிட நினைத்தேன் என்றார்.

நூறு ரூபாயை அவரிடம் கொடுத்து, சாப்பிட்டுவிட்டு, ஊருக்குச் செல்லும்படி அனுப்பி வைத்த அப்பா, “பசியில் இருப்பவருக்கும் திருடருக்கும் வித்தியாசம் தெரியாதா? 7 மணிக்குத் திருட வருவாரா?” என்று கேட்டார். திருடரைச் சாமர்த்தியமாகப் பிடித்ததாக நினைத்துக்கொண்டிருந்த நான், நன்றாக ‘பல்ப்’ வாங்கினேன், ஸ்ரீநிதி.

இந்திய வரைபடத்தில் ஏன் இலங்கையும் இடம்பெறுகிறது, டிங்கு?

– வி. திவ்யதர்ஷினி, 6-ம் வகுப்பு, ஸ்ரீ செளடாம்பிகா நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

இந்திய வரைபடத்தை நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், இலங்கை மட்டுமின்றி நேபாளம், பூடான், வங்கதேசம் போன்ற நாடுகளையும் பார்க்க முடியும். சில வரைபடத்தில் மியான்மர், பாகிஸ்தான் நாடுகள்கூடத் தென்படும். இந்தியா என்பது தனிப்பட்ட தீவு நாடு அல்ல. இந்தியாவை ஒட்டிப் பல்வேறு நாடுகள் இருக்கின்றன. இவற்றைத் தவிர்த்துவிட்டு வரைபடம் உருவாக்குவது சிரமமான விஷயம்.

அதேநேரம் இந்திய வரைபடத்தில் சட்டபூர்வமாகப் பிற நாடுகளைக் காட்டவும் முடியாது. அதனால் இந்திய வரைபடத்தில் இந்தியாவை ஒரு வண்ணத்திலும் இலங்கை, நேபாளம், பூடான் போன்ற நாடுகளை வேறு வண்ணத்திலும் வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். இவை எல்லாம் சின்னஞ்சிறு நாடுகள் என்பதால் ஒரு வரைபடத்தில் இடம்பெறுவதைத் தவிர்க்க இயலாது, திவ்யதர்ஷினி.

எனக்குப் பிடித்த ருசியான பரோட்டா தீங்கானது என்று வாங்கித் தர மறுக்கிறார்கள். என்ன செய்வது, டிங்கு?

– ரெ. ஆதிரா, 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

உங்கள் வீட்டில் சரியாகத்தான் சொல்கிறார்கள். பரோட்டாவை அடிக்கடிச் சாப்பிடாமல் இருப்பதுதான் உடலுக்கு நல்லது. அதற்காக முற்றிலும் புறக்கணிக்கத் தேவை இல்லை. எப்பொழுதாவது ஆசைக்குச் சாப்பிட்டுக்கொள்ளுங்கள், ஆதிரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x