Published : 16 Oct 2019 12:14 PM
Last Updated : 16 Oct 2019 12:14 PM

இந்தப் பாடம் இனிக்கும் 16: கறுப்புச் சூரியன்கள்

ஆதி

ஆப்பிரிக்க அடிமைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி மேரி ஜேன், வெள்ளைக்காரக் குழந்தையுடன் விளையாடுகிறாள். ஒரு புத்தகத்தை அவள் பார்த்துக்கொண்டிருந்தபோது, 'உனக்குப் படிக்கத் தெரியாது' என்று கூறி வெள்ளைக்காரச் சிறுமி புத்தகத்தைப் பிடுங்கிவிடுகிறாள். இது மேரியின் மனதைக் காயப்படுத்தி, தான் படிக்க வேண்டும் என்ற மனஉறுதியை அவள் மனதில் உருவாக்குகிறது.

அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட ஆப்பிரிக்க அடிமைக் குடும்பத்தைச் சேர்ந்த மேரி மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே பள்ளி சென்று படித்து முடிக்கிறார். தன்னைப் போலவே அமெரிக்காவில் வாழும் மற்ற ஆப்பிரிக்கக் குழந்தைகளும் கஷ்டப்படக்கூடாது என்ற தொலைநோக்குடன் சிறுகச் சிறுகப் பணம் சேர்க்கிறார். ஆப்பிரிக்கக் குழந்தைகளுக்காகவே ஒரு பள்ளியை உருவாக்குகிறார் மேரி மெக்லியோட் பெத்யூன்.

இந்த நிஜக் கதையை 'உனக்குப் படிக்கத் தெரியாது' (மதுரை 'வாசல்' பதிப்பகம் வெளியீடு) என்ற பெயரில் புத்தகமாக்கி இருக்கிறார் எழுத்தாளரும் கல்விச் செயற்பாட்டாளருமான கமலாலயன். இந்தப் பாடம் 10-ம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் இடம்பெற்றுள்ளது. மேரி மெக்லியோட் பெத்யூனைப் போலவே அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாகப் பட்ட துயரங்களும் அதற்கு எதிரான அவர்களுடைய போராட்டங்களும் மிகப் பெரியவை. அது குறித்த இரண்டு நாவல்கள், இரண்டு ஆளுமைகளை இந்த முறை பார்ப்போம்:

டாம் மாமாவின் கதை

அமெரிக்காவின் கென்டகி மாகாணப் பண்ணை ஒன்றில் ஆர்தர் ஷெல்பியிடம் டாம் என்ற ஆப்பிரிக்க அடிமை வேலை பார்த்து வந்தார். வேளாண்மையில் ஏற்பட்ட நஷ்டத்தால் உருவான கடனை எப்படி அடைப்பது என்று ஆர்தர் ஷெல்பி யோசிக்கிறார். டாம் மாமாவையும் எலிசா என்ற ஆப்பிரிக்கப் பெண்ணின் குழந்தை ஹாரியையும் கடனை அடைப்பதற்காக அவர் விற்றுவிடுகிறார். விற்கப்பட்ட வெள்ளை முதலாளிகளின் குழந்தைகளுக்கு எல்லாம் டாம் மாமா பிடித்தமானவராக இருந்தாலும், அவர் அனுபவிக்கும் துயரங்கள் குறைவதில்லை. அதன் பிறகு டாம் மாமாவுக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

கறுப்பின அடிமைகள் அனுபவிக்கும் கொடுமைகள், வெள்ளையர்களின் மனித உரிமைகளை மீறிய செயல்பாடுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் எழுதிய 'அங்கிள் டாம்ஸ் கேபின்' நாவலுக்குப் பெரும் பங்கு உண்டு. இந்த நாவல்தான் அந்தப் பிரச்சினையைப் பற்றி முதன்முதலில் பேசியது. வெளியாகி ஒரே ஆண்டில் 3 லட்சம் பிரதிகள் விற்ற இந்த நாவல், 35-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஏழு தலைமுறைகளின் கதை

ஆப்பிரிக்கக் கண்டத்திலிருக்கும் காம்பியா நாட்டில் ஜப்பூர் என்ற குட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் குண்ட்டா. காம்பியாவிலிருந்து அவனை அமெரிக்காவுக்குக் கப்பலில் கடத்திப் போகிறார்கள். அமெரிக்கச் சந்தையில் ஆடு, மாடுகளைப் போல ஏலம் விடப்பட்டு கறுப்பின அடிமையாக குண்ட்டா விற்கப்பட்டான். போகும் வழியெல்லாம் கறுப்பின மக்கள் வயலில் வேலை செய்வதைக் குண்ட்டா பார்த்தான். சவுக்குடன் குதிரையில் உட்கார்ந்து வெள்ளைக்காரர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

யாரும் வேலையில் இருந்து தப்பிச் செல்ல முடியாது. அன்றைய அமெரிக்கச் சட்டப்படி, மனிதர்களாக இருந்தாலும் கறுப்பின மக்களை வெள்ளைக் காரர்கள் அடிமையாக விற்க லாம், வாங்கலாம். தப்பிக்க முயல்பவர் களைச் சுட்டுவிடலாம். கறுப்பர்கள் எழுத - படிக்கக் கூடாது; புத்தகங்களை வைத்தி ருக்கக் கூடாது; தங்களுக்குள் ஆப்பிரிக்க மொழியில் பேசிக்கொள்ளக் கூடாது. குழந்தைகளுக்கு ஆப்பிரிக்கப் பெயர் வைக்கக் கூடாது – இப்படி ஆப்பிரிக்கர்களுக்குப் பல தடைகள்.

குண்ட்டாவில் தொடங்கி, அடுத்து வந்த ஒவ்வொரு தலைமுறையும் தங்களுடைய வம்ச வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கூறி வருகிறது. குண்ட்டா வம்சத்தில் அலெக்ஸ் ஹேலி ஏழாவது தலைமுறை. அவர்தான் இந்த நாவலின் ஆசிரியர். மிகவும் பிரபலமான இந்த அமெரிக்க நாவலின் பெயர் ‘வேர்கள்' (Roots), தமிழில் ‘ஏழு தலைமுறைகள்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

மார்ட்டின் லூதர் கிங், ரோசா பார்க்ஸ்

மார்ட்டின் லூதர் கிங்

அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான நிறவெறிக்கு எதிராகவும் அவர்கள் இரண்டாம்தரமாக நடத்தப்படுவதற்கு எதிராகவும் சமூகநீதிப் போராட்டங்களை பேரளவில் முன்னெடுத்தவர் மார்ட்டின் லூதர் கிங். கிறிஸ்தவ மத போதகரான அவர், ஆப்பிரிக்கர்களுக்கான மனித உரிமைகளை வலியுறுத்திய இயக்கத்தின் தலைவர். காந்தியவழியில் தன் போராட்டங்களை முன்னெடுத்தார்.

'வேலையும் விடுதலையும் கேட்டு வாஷிங்டனுக்குப் பேரணி' என்ற மிகப் பெரிய பேரணியை 1963-ல் நடத்தினார். அந்தப் பேரணியின் போதுதான் 'எனக்கொரு கனவு இருக்கிறது' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவை அவர் ஆற்றினார். அந்தப் பேரணியும் பேச்சும் அமெரிக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. நிறவெறிக்கு எதிராக போராடியதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு வழங்கப்பட்டது. அதேநேரம் 39 வயதிலேயே, தன் வழிகாட்டி காந்தியைப் போலவே டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ரோசா பார்க்ஸ்

நிறவெறிக்கு எதிராகப் போராடிய ரோசா பார்க்ஸ், ‘சமஉரிமை இயக்க’த்தின் (Civil rights movement) தாய் என்று அழைக்கப்படுகிறார். அமெரிக்காவில் அலபாமா மாகாணம் மாண்ட்காமரி நகரில் ஒரு பல்பொருள் அங்காடியில் தையல்காரராக ரோசா பார்க்ஸ் வேலை பார்த்தார். ஒரு நாள் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, ஒரு பேருந்தின் காலி இருக்கையில் அவர் உட்கார்ந்தார்.

அதே பேருந்தில் வெள்ளையர்கள் ஏறியபோது, ஆப்பிரிக்கர்கள் இருக்கைகளைவிட்டு எழுந்திருக்க வேண்டுமென்று ஒட்டுநர் ஜேம்ஸ் எஃப். பிளேக் வலியுறுத்தினார். மற்றவர்கள் எழுந்துவிட்டபோதும் ரோசா பார்க்ஸ் மட்டும் எழுந்திருக்கவில்லை. பேருந்து களில் வெள்ளையர்களுக்கு ஆப்பிரிக்கர்கள் இருக்கைகளை விட்டுத்தர வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இதையடுத்து ரோசா கைது செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நகரப் பேருந்துகளைப் புறக்கணித்து ஆப்பிரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிறவெறியை எதிர்த்தும், சமஉரிமை வழங்கக் கோரியும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போராடினார்கள். மார்டின் லூதர் கிங் தலைமை வகித்தார். பேருந்துப் புறக்கணிப்புப் போராட்டம் 381 நாட்களுக்கு நீடித்தது. 1956 நவம்பரில் பொதுப் பேருந்து சேவைகளில் ‘இருக்கைப் பிரிவினைச் சட்டம்’ முறைகேடானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகே ஆப்பிரிக்கர்கள் பேருந்துகளில் உட்கார முடிந்தது.

இந்த வாரம்:

பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘மணற்கேணி’ என்ற இயலின்கீழ் ‘புதிய நம்பிக்கை’ என்ற
விரிவானம் பகுதி.

(உனக்குப் படிக்கத் தெரியாது, கமலாலயன், வாசல் வெளியீடு, தொடர்புக்கு: 98421 02133)
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x